மாவீரன் ஜெ. குரு பெயரில் சட்ட கல்லூரி - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேச்சி - Agnipuratchi

மாவீரன் ஜெ. குரு பெயரில் சட்ட கல்லூரி - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேச்சி

Share This

பா.ம.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் குரு கடந்த 25ஆம் தேதி காலமானார். ஜெ.குருவின் எதிர்பாராத மறைவையொட்டி பா.ம.க. சார்பில் ஒரு வார காலம் துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி டோல்கேட் அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் மாவீரன் குருவின் நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, புதுச்சேரி மாநில பொறுப்பாளர் தன்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நினைவேந்தலின் தொடக்கமாக 2 நிமிடம் அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மாவீரன் குரு உடனான தன்னுடைய சமூக மற்றும் அரசியல் பயணத்தை கண்ணீர் மல்க நீண்ட கவிதையாக வாசித்தார்.  

மருத்துவர் அன்புமணி இராமதாசு பேசும்போது மாவீரன் குருவிற்கு உலக தரம்  வாழ்ந்த மருத்துவ சேவை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுதார்

மாவீரன் அவர்களுக்கு படைநிலை காடுவெட்டியில் NH யில் மணி மண்டபம்..மாவீரன் விதைக்கப்பட்ட இடத்தில் மாவீரனுக்கு நினைவகம்.

மாவீரன் குருவின் குடும்பத்தை நானும் அய்யாவும் பார்த்துகொள்கிறோம் என்று கூறினார்

திண்டிவனம் வன்னியர் கல்விக்கோவிலில் மாவீரன் அவர்களின் திருவுருவச் சிலை அமைக்கபடும்

வன்னியர் கல்விக்கோவில் சட்டக்கல்லூரி வளாகத்திற்கு மாவீரன் பெயர் சூட்டல்...

வன்னியர் சங்கத்திற்கு நிரந்தர தலைவராக மாவீரன் ஜெ.குருவும்  செயலாளர்கள் மூன்று பேர் நியமனம் செய்யலாம் என மருத்துவர் அய்யாவிடம் கோறிக்கை வைக்கிறேன்  

மாவீரன் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பேசினார். 


எங்கே போய் மறைந்தாயோ என் இனத்தின் மாவீரா!

புதுச்சேரியில் நடந்த மாவீரன் நினைவேந்தல் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வாசித்த இரங்கல் கவிதை


நெஞ்சம் பதை பதைத்து

நிலைக் குலைந்து நான் கிடக்க

எங்கே போய் மறைந்தாயோ

என் இனத்தின் மாவீரா!


குருவுக்கு நிகரென்று

ஒருவருமே இல்லாத

இருளுக்குள் எங்களை நீ

ஏனடா மூழ்கடித்தாய்?


முப்பது ஆண்டுகளாய் – உன்

முகம் பார்த்தே நான் நிமிர்ந்தேன்,

முழக்கங்களையே – உன்

மூச்சொலியாய் நான் கேட்டேன்!


என் குரு பேசும்போது

இடியோசை ஒடுங்கக் கண்டேன்,

என் குரு கேள்வி கேட்டால்

எதிரிகள் நடுங்கக் கண்டேன்!


என் குருவின் பாதை தோறும்

இளையோரின் எழுச்சி கண்டேன்,

என் குரு நடந்து வந்தால்

எல்லாமே அதிரக் கண்டேன்!


என் குரு என்று சொன்னால்

என் வலிமைக் கூடக் கண்டேன்

எனவேதான் உன்னை என்

மூத்தமகன் என்று சொன்னேன்!


அடக்குமுறைச் சட்டங்கள் 

அத்தனையும் பாய்ந்தாலும்,

இன்னமும் ஏவி விடு 

என்று நீ சொல்லக் கண்டேன்!


காடுவெட்டி கிராமத்தில்

குடும்பம் இருந்தாலும்,

கொடுஞ்சிறையின் கொட்டடியே – உன்

குடியிருப்பாய் ஆகக் கண்டேன்!


காட்சிகளாய் விரிந்து – என்

கவனமெல்லாம் நிரம்பிய நீ

இரு என்று சொல்லிவிட்டு 

எங்கேயடா போய்த் தொலைந்தாய்,


காலமெல்லாம் என்னோடு 

கைகோர்த்து நடந்துவந்து

இதோ வருகிறேன் என்று

இடுகுழியில் ஏன் புதைந்தாய்?


மரணம் மட்டும்தான்

மருத்துவர் அய்யாவிடமிருந்து

என்னைப் பிரிக்கும் என்று

எல்லோர்க்கும் சொன்னவனே,


முரட்டுப் பாசக்காரா – என்

மனம் கவர்ந்த மாவீரா

மீண்டும் எனக்கு நீ

முகம் காட்ட மாட்டாயா?


அடுத்தடுத்த கடும்பணிகள்

அயல்நாட்டுப் பயணங்கள்

அத்தனையும் ஒதுக்கி வைத்து

அரும்பாடு பட்டுழைத்து,


மருத்துவ மனையிலேயே

முழுநேர தவங்கிடந்து

அல்லும் பகலும்

அயராமல் மருந்தளித்து,


உன் உயிரைத் தக்க வைக்க

ஓயாமல் உழைத்த உன்

அன்புமணித் தம்பியை – நீ

அழ வைத்துப் பார்க்கலாமா? 


மருத்துவரில் சிறந்த

மருத்துவரே உனை ஆய்ந்தார்,

மருந்துகளில் உயர்ந்த

மருந்துகளை உனக்களித்தார்!


உடலியல் வல்லுனர்கள்

உன் நிலைக்குக் கருத்துரைத்தார்,

அன்புமணியோ அவர்களுடன்

அன்றாடம் விவாதித்தார்!


ஆலயங்கள் தோறும்

அழுதனர் நம் மக்கள்

இறைவனிடம் உனைக் கேட்டு

எல்லோரும் வேண்டினர்!


எல்லாமும் பொய்த்தன

எங்களை நீ பிரிந்தாய்

மீளாத ஓய்வாக

மண்ணுக்குள் நீ புதைந்தாய்!


ஒற்றைப் பெருங்குரலாய்

ஒலிக்கும் உன் உத்தரவைக்

கேட்டுக் கட்டுப்படும் – நம்

காளையரின் பெருங்கூட்டம்,

அண்ணா அண்ணா என்று

அழுகிறதே வருவாயா?


அழுகுரல் உனக்கு

அறவே பிடிக்காதென்றால்,

அழாதீர்கள் என்று

அதட்ட நீ எழுவாயா?


நீயில்லா உலகத்தில்

நானிருக்க நேருகின்ற

கொடுந்துயரை எனக்கு நீ

கொடுத்துவிட்டுப் போகலாமா?


மாவீரன் குரு எனும்

மாபெரும் சிங்கத்தின்

கர்ஜனையைக் கேட்காத

காதுகள் இருக்கலாமா?


வன்னியப் பேரினம்

வாழ்விழந்த வரலாற்றைச்

சொல்லிச் சொல்லிப் பறக்கின்ற

சத்திரியச் சுடர்க் கொடியும்,


தரணியிலே தமிழினம்

தோல்விகண்ட துயரத்தைப்

பட படத்துச் சொல்லுகின்ற

பா.ம.க.வின் பெருங்கொடியும்,


உன் மறைவைத் தாங்காமல்

உள்ளம் பதை பதைத்து

உடனடியாய்க் கீழிறங்கி

அலறி அழுது கொண்டு

அரைக் கம்பத்தில் பறக்கிறதே – அதை

ஏற்றி வைக்க வேண்டுமென்ற 

எண்ணமில்லையா உனக்கு?


பெருங்கோபம் கொண்டவனாய்ப்

புரிந்துகொல்லப் பட்ட உன்

புன்னகையின் அழகைப் போல

பூமியிலே அழகில்லை?


கடுஞ்சீற்றம் கொண்டெழுந்து

கொள்கைகளை நீ முழங்கும்

உன் காந்தக் குரல் ஒலி போல்

உலகில் ஒரு குரல் இல்லை!


விசுவாசம் என்பதனை

விவரிக்க நேரும்போது

இதோ என் குரு என்று

எல்லையற்று நான் மகிழ்ந்தேன்


உழைப்பு என்பதனை

உலகிற்கு உரைக்க நேர்ந்தால்

குருவைப் பாருங்கள் என்று

குரலெடுத்து நான் மொழிந்தேன்!


கொடுக்கின்ற காரியத்தை

முடிக்கின்ற வேலையினை

முந்திக் கொண்டு செய்பவனே

மாவீரா என் குருவே!


சிகிச்சைக்குப் போவதாக

சிரித்துக் கொண்டே போனாயே

அழ வைப்பேன் பார் என்று

அப்போது நினைத்தாயோ?


காடுவெட்டிக் குருவே – என்

குலக் களிறே மாவ்வீரா – எங்கள்

கை வெட்டிப் போட்டது போல்

கொடும் வலியில் துடிக்கின்றோம்!


காட்சிகளாய் விரிந்து – என்

கவனமெல்லாம் நிரம்பிய நீ

இரு என்று சொல்லிவிட்டு 

எங்கேயடா போய்த் தொலைந்தாய்,


மேனி கருமை வண்ணம் – அதில்

மஞ்சள் நிறச் சட்டை மின்னும்

மெல்லக் கைவீசி நீ

மண்மீது நடக்கையிலே

மரம் செடி கொடிகள் கூட – எங்கள்

மாவீரன் என்று சொல்லும்!


வளைக்கத் தெரிந்தவன்

வளையத் தெரியாதவன்

முழங்கத் தெரிந்தவன்

முனகத் தெரியாதவன்!


கொடுக்கத் தெரிந்தவன்

கெடுக்கத் தெரியாதவன்

உழைக்கத் தெரிந்தவன்

ஓயத் தெரியாதவன்!


வினாக்களுக்கு முன்பாக

விடையாகி நின்றவன்

சமூக நீதி என்கின்ற

சத்தியத்தைப் பயின்றவன்!


 இளையோர்க்கும் முதியோர்க்கும்

எழுச்சியை விதைத்தவன்

எல்லாவற்றுக்கும் மேலாக

என் இனத்தின் நாயகன்!


உன்னை மறப்பதற்கு

ஒருபோதும் இயலாது

உன் நினைவு இல்லாமல்

என் பொழுது விடியாது!


ஏக போகக் கூட்டத்தார்

எல்லோரும் வியந்து நிற்க

ஏழைகளின் கூட்டத்தில்

இரண்டறக் கலந்தவன் நீ!


புழுக்கங்களைப் போக்குகின்ற

பெரும்புயலாய் வீசிவிட்டு

தைலாபுரம் தோட்டத்தில்

தென்றலைப் போல் நுழைபவன் நீ!


நெடும் பயணம் மேற்கொண்டு

நெருப்பாகப் பனி செய்து

குளிர்ந்த நீர் போல் ஆகிக்

குழந்தையாய் வரும்போது,


வார்த்தைகள் ஏதுமற்று – உன்னை

வரவேற்று அமர வைத்து

போர்க்களம் போன என்

புதல்வன் வந்தானென்று  - உன்

அன்னையின் கரங்களால் – நீ

அருந்த நீர் கொடுப்பேன்!


உன் மூச்சுக் காற்றினால்

உரம் பெற்ற என் மரங்கள் – நீ

இல்லையென்று அறிந்ததும்

இயல்பிழந்து போனதடா!


தலை நிமிர்ந்து நீ நடந்த

தைலாபுரம் தோட்டமெல்லாம்

வெறிச்சோடிக் கிடக்கிறது

வருவாயா என் மகனே?


பாட்டாளிச் சொந்தங்களும் 

பாட்டாளிக் குடும்பங்களும்

மாவீரன் உனை இழந்து

மார்பிலே அடித்துக் கொண்டு,


அய்யா என என் கரத்தை

அழுதுகொண்டே பற்றுகையில்

எங்கிருந்து உனை எடுத்து

அவர்களுக்கு நான் கொடுப்பேன்!


கல்லறையை நோக்கி நீ

கடைசியாய்க் கிளம்புகையில்

காடுவெட்டிப் பெண்களெல்லாம்

கதறித் துடித்தபடி

கடவுளே என்று உன்னைக்

கைகூப்பி அழுத ஒலி – நான்

போகும் வழியெங்கும்

பின் தொடர்ந்து வருகிறதே!


முரட்டுப் பிள்ளையே – என்

மூதாதையர் திரு உருவே!

மூச்சைப் பிடித்துக் கொண்டு நீ

மண்ணுக்குள் இருந்தது போதும்!


இடுகுழியைத் தகர்த்துக் கொண்டு

எழுந்து நீ மேலே வா!

அன்புமணியின் தம்பிகளை

ஆற்றுப் படுத்தி, அறிவுரைத்து வழிநடத்து!


நீ கண்ட கனவுகளை

நெஞ்சில் சுமந்தவரை

நலமுடன் வாழ வைத்து

நிழல்போல் நீ வாழ்த்து!


மஞ்சள் மாவீரனாய்

மேடை மீது ஏறி வந்து

எப்போதும் போலவே

எல்லோர்க்கும் கை உயர்த்து!


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages