மாவீரன் ஜெ. குரு அவர்களைப்பற்றி தந்தி குழுமத்தின் ஊடகவியலாளர் பாலசுப்பிரமணியன் அவர்களின் பார்வை - Agnipuratchi

மாவீரன் ஜெ. குரு அவர்களைப்பற்றி தந்தி குழுமத்தின் ஊடகவியலாளர் பாலசுப்பிரமணியன் அவர்களின் பார்வை

Share This

"காடுவெட்டி ஜெ. குரு" பாட்டாளிகளை நேசித்த தலைவன். தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் அதிர்வை ஏற்படுத்திய பெயர்.

மாவீரன் குரு என்று அவருடைய ஆதரவாளர்களால் பெருமிதத்தோடு அழைக்கப்பட்ட அந்த நபர், பிறரால் 'வில்லன்' போன்று பார்க்கப்பட்டவர்.

குரு மறைந்த பிறகு அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலைக் காண தமிழகம் எங்குமிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குழுமினர்.

காவல்துறையால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாதது மட்டுமல்ல, ஒருகட்டத்தில் அத்தகைய முயற்சியையே கைவிட்டார்கள்.

குருவை கடைசியாக ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று சாரைசாரையாக காடுவெட்டி நோக்கி படையெடுத்துவிட்டனர் மக்கள்.

கட்சி பேதமின்றி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள்கூட்டம் திரண்டதால் காடுவெட்டி கிராமமே திணறிதான் போனது.

35 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தபோதிலும், பெருமளவில் சொத்து சேர்த்துவிட்டார் என்று யாரும் இவர் மீது குற்றம்சாட்டிவிட முடியாது.

புதிய வீட்டினை கடந்த பல ஆண்டுகளாக கட்டி வருகிறார், ஆனாலும் இன்னும் கட்டி முடிக்கவில்லை. தங்களுடைய பரம்பரை சொத்தைத் தவிர காடுவெட்டியில் யாரிடமிருந்தும் மிரட்டி சொத்து வாங்கிக் கொண்டதில்லை.

தன்னுடைய மருத்துவச் செலவுக்குக் கூட தன்னுடைய தலைவரான ராமதாஸின் உதவியை எதிர்பார்த்திருக்க வேண்டிய பொருளாதாரச் சூழலில் தான் அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

பூர்வீக ஓட்டு வீட்டில் தான் வாழ்ந்திருக்கிறார். குரு அரசியலுக்கு வந்தப் பிறகு பல ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வந்த 'குட்டிக்குட்டி' அரசியல்வாதிகள் எல்லாம் சொகுசு வீடுகள் கட்டிக்கொண்டு பந்தா காட்டுவதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு நிகரான நம்பிக்கையை பெற்றிருந்தபோதிலும் அதைப் பயன்படுத்தி தன்னைப் பொருளாதாரத்தில் உயர்த்திக் கொண்டவரில்லை.

தன்னுடைய சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களோடு தனிப்பட்ட நட்பையும் உண்டாக்கிக் கொண்டவரில்லை. ஆசைவார்த்தைகள் பல கூறப்பட்டபோதும் வேறு கட்சிக்கு அவர் போனவரில்லை. அவருக்கு எல்லாமே டாக்டர் அய்யா தான்.

ராமதாஸை மீறி ஒருநாளும் சென்றவரில்லை. அதேபோல், ராமதாஸ் ஒன்றை சொல்லிவிட்டால் அதனை செய்துமுடித்துவிட்டு தான் ஓய்வார்.

ராமதாஸ் திராவிட இயக்கங்களை ஆதரித்தபோது, குரு ஆற்றிய உரைகள், அதே ராமதாஸ் திராவிட இயக்கங்களை எதிர்க்கத் தொடங்கியப் பின்னர் குரு ஆற்றிய உரைகள் ஆகியவற்றை கேட்டாலே அவர் எந்த அளவுக்கு தலைமைக்கு "விசுவாசமான தளபதி" என்பது விளங்கும்.

முடிவெடுக்கும் பொறுப்பு தலைவனுக்கு மட்டும் தான். அதனை செய்து முடிக்கும் பணி மட்டும் தான் தனது என்று வாழ்ந்தவர் குரு !.

இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் எவருக்கும் குருவை போன்ற ஒரு தளபதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போதைய அரசியலில் ராமதாஸிற்கு மட்டுமே கிடைத்திருந்த வரம் அது !

அரசியலில் அண்ணாவுக்கு, கலைஞருக்கு அதுபோன்ற தளபதிகள் உண்டு. உயிரையும் கொடுக்கும் விசுவாசம் கொண்டவர்கள் இவர்களுக்கு இருந்தார்கள்.

'ஜெ'-வுக்கெல்லாம் பிரதிபலன் எதிர்பார்க்காத தளபதிகள் வாய்த்ததே இல்லை !.

தலைமையின் கட்டளை ஒன்றையே நோக்கமாக கொண்டு உழைக்கும், பேசும் குணம் – 'குருவின் சிறப்பு' !!.

லட்சக்கணக்கான தொண்டர்கள் குருவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோதிலும், குறிப்பிடத்தக்க எந்த பெரிய அரசியல் தலைவரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை.

குரு பிற தலைவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்வதை விட, தொண்டர்கள் சூழ இருப்பதையே விரும்பினார்.

அதனால் தான், தொண்டர்களின் பெருவெள்ளத்திலேயே அவரது இறுதிப் பயணமும் நடந்தது. டிராக்டர்களிலும், லாரிகளிலும் வந்து குவிந்தனர் குருவுக்கு எப்போதும் பிடித்தமான தொண்டர்கள்.

அழுக்கு வேஷ்டிகள், பிய்ந்து தைத்த செருப்புகள், எண்ணெய் பார்க்காத தலைகள், உழைப்பில் காப்பேறிய கரங்கள், வெற்றிலை பற்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், குருவை தங்களுடைய பாதுகாவலராகக் கருதும் கிராமத்து இளைஞர்கள் என்று பாட்டாளிகள் புடைச்சூழ தான் குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

"இந்த நிலையிலுள்ள" மக்களை உயர்த்த வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வன்னியர் சங்கம் நடத்திய ‘இடஒதுக்கீடு போராட்ட’ சாலைமறியலில் தொடங்கிய குருவின் அரசியல் பயணம், அந்த மக்கள் சுற்றியிருக்க முடிவடைந்ததே அவருக்கு பெரும்பெருமை தான்!

பெரிய தலைவர்கள் வராவிட்டால் என்ன?

கடைசி சில ஆண்டுகளில் அவர் பேசிய மேடைப் பேச்சுகளை மட்டுமே கணக்கில் கொண்டு குருவை ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் அவரை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டிருப்பர்.

லட்சக்கணக்கான மக்களின் அன்பை பெறுவது சாதாரணமல்ல. அந்த அன்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சொத்து சேர்க்காமல் இருப்பதும் சாதாரணமல்ல.

இவை இரண்டும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர் குரு !!

(கடைசிவரை மாவீரன் வாழ்ந்த பூர்வீக வீடு )

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages