தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய காவல் உயர் அதிகாரிகள் கையூட்டு பெற்றதாக புகார் எழுந்தது. மாதவ ராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் கடந்த 2016 ஆண்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ஆய்வில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 56 லட்சம் ரூபாய் கையூட்டாக கொடுத்ததை குட்கா கிடங்கு உரிமையாளர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்போதைய காவல்துறை இயக்குநர் எழுதிய கமுக்க கடிதம் ஒன்று, சசிகலாவின் அறையிலிருந்து கடந்த ஆண்டு கைப்பற்றப் பட்டதாக கூறப்பட்டது.
அரசியலிலும் அதிகார மட்டத்திலும் உள்ள பலர் குட்கா முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை நடுவண் புலனாய்வுத்துறைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை கையூட்டு ஒழிப்புக்காவல் துறையினர் நடுவண் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர். அதன்படி குட்கா ஊழல் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள நடுவண் புலனாய்வுத்துறையினர். தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சிலருக்கு ஊழலில் தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment