கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும்!- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு - Agnipuratchi

கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும்!- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

Share This

தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்பட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெரும்பான்மையினரால் தூண்களை பிடிக்காமல் நிற்க முடியாது என்ற அளவுக்கு அவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்ற உண்மை இதயத்தைச் சுடுகிறது. சென்னையிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக் கட்டமைப்பு ஆலமரம் போல பரந்து விரிந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.


தமிழகத்தின் தலைநகரான சென்னை போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தலைநகராகவும் திகழ்கிறது. சென்னையில் போதைபொருட்கள் கிடைக்காத பகுதிகளும் இல்லை; சென்னையில் கிடைக்காத போதைப் பொருட்களும் இல்லை என்று கூறும் அளவுக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. குறிப்பாக சென்னையில் புகழ்பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், அவை சார்ந்த விடுதிகளிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.  கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் மட்டுமே சென்னையில் கிடைத்து வந்த நிலை மாறி, எல்.எஸ்.டி (Lysergic Acid Diethylamide -LSD) எனப்படும் ஒரு வகை போதை மருந்தும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவகையான காளானிலிருந்து தயாரிக்கப்படும் இப்போதை மருந்து குறைந்த பட்சம் 12 மணி நேரம், மனிதர்களை சுயநினைவின்றி மாயை உலகில்  மிதக்க வைத்திருக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.


ஒருகாலத்தில் கஞ்சா புகைப்பதே பெருங்குற்றமாக பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அது சிறுவர்களுக்கான போதை மருந்தாக வர்ணிக்கப்படுகிறது. சென்னை சூளைமேட்டில் கடந்த பொங்கல் திருநாளன்று 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதாக, அவனது வயதையொத்த 4 நண்பர்கள் நேற்று முன்நாள் கைது செய்யப்பட்டனர். இதற்குக் காரணம் அவர்களுக்கிடையே கஞ்சா புகைப்பதற்கு ஆன செலவை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறு தான் என்று கூறப்படுகிறது. பஞ்சர் ஒட்ட பயன்படும் பசை,  ஒயிட்னர், வார்னிஷ் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டு பொருட்களும் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை உடல் உறுப்புகளை விரைவாக செயலிழக்கச் செய்யக்கூடியவை.


சென்னைக்கு வெளியில் வேலூர், சேலம், கோவை, சிதம்பரம் ஆகிய நகரங்களும் போதை அரக்கனின் பிடியில் சிக்கிக் தவிக்கின்றன. குறிப்பாக வேலூர், சிதம்பரம் ஆகிய நகரங்களில் படிப்பதற்காக வந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் விதவிதமான போதைப்பொருள் பழக்கத்திற்கு மாணவர்களை அடிமையாக்குவதாகவும், அதனால் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி  உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அண்மையில்  என்னிடம் எச்சரித்த போது அதிர்ச்சியில் ஆடிப்போனேன் என்பது தான் உண்மை. 


கோவையில் உருவாகி வரும் புதிய போதைப் பொருள் கலாச்சாரம் இன்னும் கொடுமையானது. மகப்பேற்றின் போது  வலி நிவாரணியாக பெண்களுக்கு செலுத்தப்படும் போர்ட்வின் எனப்படும் போதைப் பொருட்களை  மாணவர்களும் இளைஞர்களும் மருத்துவமனையிலிருந்து திருடிச் செல்கின்றனர். அதேபோல், அறுவை சிகிச்சைகளின் போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் ரூ.5 மதிப்புள்ள மருந்தைத் திருடி, 500 மிலி குளூக்கோசில் கலந்து போதைப் பொருளாக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் 2 மி.லி. ரூ.1000 என்ற விலைக்கு  விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை மருந்து மிகவும் உக்கிரமானது; இதனால் மலட்டுத் தன்மை முதல் உயிரிழப்பு வரை ஏற்படக்கூடும். ஆனால், இம்மருந்தின் விலை ரூ.5 மட்டுமே என்பதால் இதுபற்றி மருத்துவமனைகள் புகார் தருவதில்லை. இதனால் இந்த விஷயம் வெளியில் தெரியவில்லை என்றாலும், போதை சீரழிவுகள் தொடருகின்றன.


கல்லூரி மாணவர்களும், மேநிலைப்பள்ளி மாணவர்களும் தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வந்தனர் என்ற நிலை மாறி, எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட போதையில் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஒரு வகையான போதை மருந்தை தொடக்கத்தில் இலவசமாக கொடுத்து போதைக்கு அடிமையாக்கும் போதை கும்பல், அவர்கள் போதைக்கு அடிமையான பின்னர் அவர்களுக்கு போதை மருந்து வழங்க பெரும் பணம் வசூலிக்கின்றன. இதற்காக போதை அடிமைகள்  குற்றச்செயல்களில் ஈடுபட்டு பணம் ஈட்டுகின்றனர். இதனால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றன.



No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages