ஜூலை 25-ம் தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாளை பயணம் செல்கிறார். தென்னாப்பிரிக்கா புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டா நாட்டுக்கு நாளை செல்கிறார். ருவாண்டா அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார். ருவாண்டா அதிபரின் தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ‘வீட்டுக்கு ஒரு பசு’ திட்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
ருவாண்டா நாட்டின் பாரம்பரிய மரபுகளின்படி, பசு மாடுகளை பரிசாக அளித்து அன்பை ஏற்படுத்தி கொள்வது வழக்கம். அவ்வகையில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் 200 பசு மாடுகளை ருவாண்டா விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பரிசாக அளிக்கிறார். பின்னர் 24-ம் தேதி உகாண்டா நாட்டுக்கு பயணம் செல்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் உகாண்டாவுக்கு பயணம் செய்யும் முதல் இந்திய தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உகாண்டா எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்க உள்ளார். இதற்கு பின்பு உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஜோஹனஸ்பர்க் நகருக்கு சென்று 25-ம் தேதி நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
No comments:
Post a Comment