நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கும் என அமித்ஷா கூறியதாக வெளியான தகவலுக்கு பாஜக மறுப்புத் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஹைதராபாத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் உரிய காலகட்டத்திலேயே நடைபெறும் என்றும், முன்கூட்டியே நடத்தப்படாது என்பதை அமித்ஷா அப்போது மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கும் என்று அமித்ஷா கூறியதாக, பாஜக நிர்வாகி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பாஜக தலைவர் அமித்ஷா ராமர்கோவில் கட்டும் பணி தொடங்குவது பற்றி பேசுவதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், பாஜக தலைவர் அமித்ஷா ராமர் கோவில் பிரச்சனை தொடர்பாக நேற்று தெலுங்கானாவில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பாஜக ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment