இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
400 மீட்டர் தடை தாண்டும் போட்டிகளில் கத்தார் வீரர் சம்பா அப்துர்ரஹ்மான் பந்தய தொலைவை 47.66 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி 48.96 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர் ஒருவர் பதக்கம் வென்றிருப்பது இது இரண்டாவது முறையாகும். வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தருணுக்கும், ஏற்கனவே டென்னிஸ் போட்டிகளில் வெண்கலம் தமிழக வீரர் பிரஜ்னேஷுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தருண் நான்காவது படிக்கும் போதே அவரது தந்தையை இழந்தவர். அவரது சகோதரியும் தமிழ்நாடு கைப்பந்து அணியில் சேர்ந்து விளையாடி வருகிறார். இருவரையும் மிகச் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக உருவாக்கிய அவரது தாயார் பாராட்டத்தக்கவர்.
இன்று நடைபெற்ற மற்ற ஆட்டங்களிலும் இந்திய ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். மகளிர் தனிநபர் இறகுபந்தாட்ட போட்டிகளில் இந்திய வீராங்கனை சிந்து அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் இன்னொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வேகமாக முன்னேறி நிலையில், இனிவரும் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்ல வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment