ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் - Agnipuratchi

ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

Share This

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். டிப்ளமோ சிவில் இஞ்ஜினியரிங் படித்த இவர், அக்குபஞ்சர் மருத்துவம் தொடர்பான டிப்ளமோ படிப்பும் முடித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் மருந்தில்லா மருத்துவம் மற்றும் தொடுசிகிச்சை மூலம் நோய்களையும், உடல் உபாதைகளையும் போக்க சிகிச்சை அளித்து வருகிறார். அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளித்து வந்ததால், தனது பெயரின் முன்பாக ஹீலர் என்பதை சேர்த்துக்கொண்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு அனாடமிக் தெரபி பவுண்டேசன் என்ற அமைப்பை பாஸ்கர் தொடங்கினார். இதற்காக, கோவை புதூர் பகுதியில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு முகாம்களும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வீட்டிலேயே பிரசவம் பார்க்க ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும் என ஹீலர் பாஸ்கர் தனது நிஷ்டை அமைப்பு மூலம் விளம்பரப்படுத்தினார். இந்த விளம்பரம் குறித்து கோவை மண்டல சுகாதார துறை இணை இயக்குர் பானுமதி போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும், ஜான்சன் என்பவரும் பாஸ்கர் மீது புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகியோரை கோவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது மோசடி செய்தல், ஏமாற்றும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை 7-ஆவது குற்றவியல் நீதிமன்றம் இன்று  உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஹீலர் பாஸ்கர் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின்பேரில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹீலர் பாஸ்கரின் மேலாளர் சீனிவாசனுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் திங்கட்கிழமை சிறையிலிருந்து வெளியே வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages