மருத்துவர் இராமதாசு அவர்களின் விடுதலை நாள் வாழ்த்து செய்தி: மது, புகையில்லாத தமிழகத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்! - Agnipuratchi

மருத்துவர் இராமதாசு அவர்களின் விடுதலை நாள் வாழ்த்து செய்தி: மது, புகையில்லாத தமிழகத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்!

Share This

இந்தியாவின் 72&ஆவது விடுதலை தினத்தை நாளைக் கொண்டாடும் தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எனது விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திர இந்தியாவின் 72 ஆண்டு கால வரலாற்றில் இந்தியா ஏராளமான துறைகளில் முன்னேறியுள்ள போதிலும் சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம், அரசியல் சமத்துவம் ஆகியவை இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளன. சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இரு இந்தியாக்கள் நீடிக்கின்றன. அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாம் அடைந்த முன்னேற்றங்கள் நமது படை வலிமையை உயர்த்த பயன்பட்ட அளவுக்கு, பசியையும், வறுமையையும் ஒழிக்க பயன்படுத்தப்படாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.  மத்திய, மாநில அரசுகள் கடை பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் கோடீஸ்வரர்களை பெரிய கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது. இது சமூக அநீதி.

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி, சுகாதாரம் ஆகிய சேவைகளும், விவசாயத்திற்கான தேவைகளும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த மூன்று துறைகள் மீது தான் அக்கறைக் காட்டப்படுவதில்லை. கல்வியும், சுகாதாரமும் வணிகமாக மாறி விட்டன. இந்திய மக்களின் பெரும்பகுதியினர் கல்வி மற்றும் மருத்துவத்திற்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வலையில் சிக்கிக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவசாயம் செய்தாலே இழப்பும், கடன் சுமையும் தான் மிச்சம் என்பது குழந்தைகள் கூட அறிந்த உண்மையாகும்.

இவற்றையெல்லாம் கடந்து ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சீரழிக்கும் சக்திகளாக மதுவும், புகையும் மாறி வருகின்றன. இவற்றை உயிர்க்கொல்லிகளாக பார்த்து தடை செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இவற்றை வருவாய் ஆதாரங்களாகப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களின் மனநிலை ஊழலுக்கு ஆதரவாகவே உள்ளது. இவர்கள் திருந்துவதோ, தமிழகத்தை நல்வழியில் நடத்துவதோ சாத்தியமல்ல. இந்த அரசை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலன் காக்கும் அரசை அமைப்பதன் மூலமாக மட்டுமே சமத்துவமான, ஊழல் இல்லாத, மது மற்றும் புகையற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். எனவே. அந்த இலக்கை நோக்கி முன்னேற இந்தியாவின் விடுதலை நாளான இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages