உறுப்பு தான ஊழல் நடக்கவில்லையா? முழு பூசணியை சோற்றில் மறைக்க சதி! -பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம். - Agnipuratchi

உறுப்பு தான ஊழல் நடக்கவில்லையா? முழு பூசணியை சோற்றில் மறைக்க சதி! -பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.

Share This

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தான் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று அதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு அறிவித்துள்ளது. மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து  பெறப்பட்ட உறுப்புகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், விசாரணைக் குழுவின் இம்முடிவு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி நடந்த விபத்தில் காயமடைந்த  கேரளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சேலம் வினாயகா மிஷன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மே 21-ஆம் தேதி அவர் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்த வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதுபற்றி மணிகண்டன் உறவினர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மணிகண்டனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயமும், நுரையீரலும் தனியார் மருத்துவமனைகளில்  இருந்த இந்திய நோயாளிகளுக்கு ஒதுக்கப்படாமல் வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது என்பது தான் முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும். கொடையாகப் பெறப்பட்ட இதயம் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்ளூர் நோயாளிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உறுப்பு லெபனான் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. உள்ளூர் நோயாளிக்கு இதயத்தை பொருத்த வேண்டிய மூத்த மருத்துவர் ஊரில் இல்லை என்பதால் அது உக்ரைன் நோயாளிக்கு மாற்றப்பட்டதாகவும், ஆனால், அவரை விட லெபனான் நோயாளியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு இதயம் பொருத்தப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தலைமையிலான விசாரணைக்குழு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

அதேபோல், குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியருக்கு ஒதுக்கப்பட்டிருந்த  நுரையீரல், அவருக்கு பொருந்தவில்லை என்று கூறி இஸ்ரேல் நோயாளிக்கு மாற்றப்பட்டது.  இதிலும் எந்த மோசடியும்  நடக்கவில்லை என்று விசாரணைக்குழு கூறியுள்ளது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் அயல்பணி அடிப்படையில் பணியாற்றி வந்த இரு பணியாளர்கள், உடல் உறுப்புக்காக காத்திருந்த நோயாளிகளின் அடையாள எண்களை தவறாக குறிப்பிட்டது தான் குழப்பங்களுக்கு காரணம் என்றும் விசாரணைக்குழு கூறியுள்ளது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், நுரையீரல் மறுக்கப்பட்ட இந்தியருக்கு புனே மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட நுரையீரல் பொருத்தப்பட்டு, காப்பாற்றப்பட்டதாகவும், அதனால் இவ்விஷயத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று விசாரணைக் குழு கூறியிருக்கிறது. மோசடியை நியாயப்படுத்தும் விசாரணைக் குழுவின் அறிக்கை கண்டிக்கத்தக்கது.

உடல் உறுப்பு தானத்தில் நடைபெற்ற மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, அந்த மோசடியை நியாயப்படுத்தி ஊழலே நடக்கவில்லை என்று சான்றிதழ் அளித்திருக்கிறது. விசாரணைக் குழுவின் தலைவரான எட்வின் ஜோ உரிய தகுதிகள் இல்லாமல் மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டவர். அவரது நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் விதிகளை வளைத்து அப்பதவியில் நியமிக்கப்பட்டவர். அதற்கு நன்றிக்கடனாக உடல் உறுப்பு தான் ஊழலை மூடி மறைத்திருக்கிறார். மலர் மருத்துவமனையில் உள்ளூர் நோயாளிக்கு இதயத்தை பொருத்த வேண்டிய மருத்துவர், ஊரில் இல்லாததால் தான் அந்த இதயம் வெளிநாட்டு நோயாளிக்கு மாற்றப்பட்டது என்பது அப்பட்டமான பொய் ஆகும். சம்பந்தப்பட்ட மருத்துவர் சம்பந்தப்பட்ட நாளில் ஊரில் இருந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்த நிலையில், அதைக் கருத்தில் கொள்ளாமல் மருத்துவமனை அளித்த விளக்கத்தை விசாரணைக்குழு அப்படியே ஏற்றுக்கொண்டது துரதிருஷ்டவமானது ஆகும்.

உடலுறுப்பு மாற்று ஆணையத்திற்கு அயல் பணியில் வந்த இரு பணியாளர்கள் தான் குழப்பங்களுக்கு காரணம் என்று கூறி இதில் சம்பந்தப்பட்ட மற்ற அனைவரும் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள்  விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக   எந்த விசாரணையும் நடத்தப்பட வில்லை; எந்த மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் உடல் உறுப்புக் கொடை பெறுவதற்கு ஓர் உள்ளூர் நோயாளி, பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு நோயாளி ஒருவர் என 3 பேர் கொண்ட முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று எட்வின் ஜோ குழு பரிந்துரைத்துள்ளது. இது உடல் உறுப்பு தான ஊழலை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி ஆகும். இதை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது.

சில திருடர்கள் மீது திருட்டுக் குற்றஞ்சாற்றப்படும் போது, அவர்கள் தங்களுக்கு கீழே உள்ளவரை நீதிபதியாக்கி, தாங்கள் அனைவரும் உத்தமர்கள் என்று சான்றளிக்க வைப்பது எப்படி இருக்குமோ? அதேபோல் தான் உடல் உறுப்பு தான ஊழல் குறித்த இந்த விசாரணை அறிக்கையும் அமைந்துள்ளது. யார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோ அவர்களே தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரியைக் கொண்டு  விசாரணை நடத்தி நற்சான்று பெறுவது சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.  தமிழகத்தில் அமைச்சர்கள், பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நான் தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால், இது குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தி யார் மீதும் தவறு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு விட்டதாக காட்டுவதற்காகத் தான் இந்த நாடகத்தை தமிழக பினாமி ஆட்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூட்டணி அமைத்துக் கொண்டு உடல் உறுப்பு தான ஊழலில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பை கொடையாகப் பெற்று பொருத்த ரூ.12 கோடி வரை பெறப்படுகிறது. இது ஊழலில் சம்பந்தப்பட்டவர்களால்  பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த வகையில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்திருக்கக் கூடும். வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள்  விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் என்னென்ன உறுப்புகள் பொறுத்தப்பட்டன? அதற்காக எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? அதில் விதிமீறல்கள் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இது குறித்து மாநில அமைப்புகள் விசாரித்தால் உண்மை வெளிவராது. இந்த ஊழலில் வெளிநாடுகளில் இருந்து ஹவாலா முறையில் பணம் கொண்டுவரப்பட்டிருப்பதால், இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக நடுவண் புலனாய்வு விசாரணை  மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages