முதுபெரும் தமிழறிஞரும், பிரஞ்சிந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ் பெரும்புலவருமான கி.த.பச்சையப்பனார் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவு தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலவர் கி.த.பச்சையப்பனாரை அறியாத தமிழ் ஆர்வலர்கள் எவரும் இருக்க முடியாது. புதுச்சேரியில் பிறந்த அவர், பதின்வயதிலேயே பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1953-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 65 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார். தமிழாசிரியராக பணியாற்றிய அவர், சென்னை ஆசிரியர் சங்கத் தலைவர், சென்னை மாநகர தமிழாசிரியர் கழகத் தலைவர், தமிழகத் தமிழாசிரியர் கழகத் தலைவர் ஆகிய பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்றினார். ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது பல்வேறு போராட்டங்களை நடத்தி ஏராளமான உரிமைகளை வென்றெடுத்துள்ளார். தமிழ், தமிழர்கள் நலனுக்காக எங்கு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அங்கு பச்சைத் துண்டுடன் பச்சையப்பனாரை பார்க்க முடியும்.
புலவர் பச்சையப்பனார் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். 2006-ஆம் ஆண்டில் தமிழ் ஓசை நாளிதழை நான் நிறுவிய போது அவரைத் தான் மொழிநடை ஆசிரியராக அமர்த்தினேன். பிறமொழிக் கலப்பில்லாத தமிழ் நாளிதழாக தமிழ் ஓசை வெளிவருவதற்கு அவர் ஆற்றிய பணிகள் கணக்கிலடங்காது. தமிழ் ஓசை நாளிதழில் அறிமுகம் செய்யப்பட்ட பல தனித்தமிழ் சொற்கள் இப்போது பெரும்பான்மையான நாளிதழ்களிலும், அரசு செய்திக் குறிப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான பெருமை அவரையே சேரும். பச்சையப்பனாரின் மறைவு தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
புலவர் பச்சையப்பனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment