கோயில் என்றாலே தில்லை என்பதை இலக்கியங்களில் காணமுடிகிறது. அதிக பக்தி இலக்கியங்களில் பாடப்பட்ட சைவ தலங்களில் முதன்மையானது தில்லை.
இத்தலம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற புகழான சைவ சமய புலவர்களால் தேவார பாடலில் பாடப்பட்ட திருத்தலம்.
கோயில் கட்டப்பட்டது 1000- 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என ஆய்வுகள் கூறினாலும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் பாடிய திருமந்திரத்திலேயே தில்லை கோயில் இடம்பெற்றுள்ளது.
இது பழங்காலத்திலிருந்தே அங்கு கோயிலுக்கான முகாந்திரம் இருந்ததற்கான மூலாதாரம். அந்த இடம் மகத்துவமான மனிதரால்தான் தேர்வுசெய்யப்பட்டிருக்கும்.
திருமூலர், பதஞ்சலி முனிவர், வியாக்கியபாதர் போன்ற முனிவர்களால் வணங்கப்பட்டுள்ளது.
மனித உடலோடு தொடர்பு
நம் அறிவுக்கு எட்டியதும் எட்டாததுமாக அறிவியல் பூர்வமான பல உண்மைகள் விஞ்ஞானத்தோடு மட்டுமல்லாமல் மனித உடற்கூறுகளோடும் சம்பந்தப்பட்டுள்ளது.
இங்குள்ள பூமியின் காந்த சக்தி வரும் பக்தர்களின் நோய்களை குணப்படுத்தவல்லது. அணுத்துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்பதை நடனமாடும் நடராஜர் சிலை மூலம் உணர்த்தி, அதை காந்த சக்தியின் மையத்தில் வைத்து கோயில் கட்டியுள்ளனர்.
இந்த கோயிலில் மொத்தம் ஒன்பது வாசல், மனித உடலில் ஒன்பது துளைகள் இருப்பதை குறிக்கிறது. கோயில் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை 21,600 தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் ஒரு நாளைக்கான சராசரி சுவாசம் 21,600 தடவையாகும். அந்த தகடுகளைப் பொறுத்த 72 ஆயிரம் தங்க ஆணிகள், அது மனித உடலில் உள்ள மொத்த நாடிகளின் எண்ணிக்கையாம், அதில் கண்ணுக்குத் தெரியாமலே உடலின் பல பாகங்களுக்கு சக்தியளிக்கும் நாடிகளும் சேர்கிறது.
திருமூலர் பாடலில் தில்லை
ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த திருமூலர் திருமந்திரத்தில், மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார்.
இதன் பொருள் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் மனித வடிவில் உள்ள சிவலிங்கம், அதுவே சதாசிவம் மானுட உடலே கூத்து வடிவானது என்ற பொருளைக் குறிக்கிறது.
கலை, வேத, ஆகம தொடர்பு
நடராஜரின் தாண்டவம் ’காஸ்மிக் டான்ஸ்’ என்றும் வெளிநாட்டு அறிஞர்களால் இப்போது ஒப்புமைப்படுத்தப்படுகிறது. பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது.
நம் உடலில் இதயம் இடப்பக்கமே இருக்கிறது. நடராஜர் தாண்டவம் இதயத் துடிப்பே! இங்குள்ள பஞ்சாட்சர படிகள் சி, வா, ய, ந, ம என்ற ஐந்து எழுத்துக்களை குறிப்பது.
இங்கு உள்ள கனகசபைக்கு வழி பிற கோயில்களில் இருப்பது போல நேராக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இதன் நான்கு தூண்கள் நான்கு வேதங்களையும். பொன்னம்பலத்தில் உள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களையும் குறிக்கிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள (64+64) மேற்பலகைகள் 64 கலைகளை குறிக்கிறது. பொற்கூரையில் இருக்கும் 9 வகையான கலசங்கள் உடலில் உள்ள 9 வகையான சக்தியை குறிக்கிறது.
அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்களையும் அதன் அருகில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கின்றன.
சிதம்பர ரகசியம் என்ன
சிதம்பரத்தில் எல்லோரும் அறியத்துடிக்கும் மர்மம் அதன் ரகசியம்தான். இக்கோயிலின் சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாயில் உள்ளது.
அதன் திரைவிலக்கி உள்ளே கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. ஆனால், அங்கே எந்த சிலையும் இருக்காது.
தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று மட்டும் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் இதன் ரகசியம் ஆண்டவன் ஆகாய வெளியாக இருப்பதை அங்கு உணர்த்துகிறார்கள். அதுதான் சிதம்பர ரகசியம்.
விஞ்ஞான நுட்பங்கள் கூட போட்டிபோட முடியாத சிறப்புகளை நம் முன்னோர்கள் தங்கள் மெய்ஞான அறிவால் உருவாக்கியிருப்பதற்கு சாட்சியே தில்லை நடராஜர் கோயில்.
சிறப்புக்கள்
இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும், சொல்லப்படும்.
பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம்.
பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
"சிற்றம்பலம்" நடராசப்பெருமான் திருநடனம்புரிந்தருளும் இடம் - 'தப்ரசபா' எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தகசோழன் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் 'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது.
"பொன்னம்பலம் (கனகசபை)" நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.
"பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.
"நிருத்த சபை" ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
"இராச சபை" இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.
வியாக்ரபாதர் (புலிக்கால்முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும்; சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும்; பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.
வைணவத்திலும் 'திருச்சித்திரக்கூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப் பதி.
சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.
திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான்.
திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபபதி.
No comments:
Post a Comment