ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் உலகெங்கும் வலிமை பெற்று வருகின்றன. இந்த வாரம் உலகம் முழுவதும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டது.
நீரியல் விரிசல் (Fracking) திட்டங்களுக்கு எதிர்ப்பு (Global Gasdown-Frackdown Day of Action) என்கிற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உட்பட ஆறு கண்டங்களிலும் 90 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அந்த போராட்டத்தின் ஒரு அங்கமாக, இந்தியாவில் தமிழ்நாட்டின் கடலூர், நாகை மாவட்டங்களில் பசுமைத் தாயகம் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் 15.10.2018-ல் நடத்தப்பட்டது. சிதம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட ஊர்களில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு பதாகைகளுடன் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
இதே நேரத்தில் சமூக ஊடகங்களில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. #FrackFreeTN, #PMKagainstHydrocarbon, #GasdownFrackdown - என பயன்படுத்தப்பட்ட மூன்று ஹாஷ் டாக்குகளும் தமிழக அளவில் டிவிட்டர் டிரென்டிங்கில் வந்தது.
உலகம் முழுவதும் நடந்த போராட்டங்களில் தமிழ்நாட்டின் கொள்ளிடத்திலும், இந்தோனேசியாவின் பாலியிலும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்பாகவே, இங்கிலாந்தில் போராட்டம் நடத்திய மூன்றுபேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோகார்பன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பசுமைத் தாயகம் அமைப்பினர் 24 பேரை, காரணம் எதுவும் சொல்லாமல் கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்தனர். பின்னர் IPC 151 பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்தியாவின் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு திறந்தவெளி அனுமதி திட்டம் (Open Acreage Licensing Policy- OALP) உரிமம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டின் 3 பகுதிகள் உள்ளன. இத்திட்டம் அமையவுள்ள நாகை, கடலூர் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இவர்கள் செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பசுமைத் தாயகம் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
உலகம் முழுவதுமான போராட்டத்தை ஒருங்கிணைத்த Gastivists Network அமைப்பினர் கொள்ளிடத்தில் பசுமைத் தாயகம் அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் சமூக ஊடகங்களில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பிரச்சாரம் முன்னிலை பெற்றதற்கும் உலகளவிய போராட்டங்களை முன்னெடுத்த அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
காலநிலை மாற்றம் குறித்த சிக்கல்கள் முக்கியத்துவம் பெரும் நிலையில் - காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரும் வகையிலும் இனி ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு முக்கியத்துவம் பெரும். (இத்திட்டத்தால் அதிக அளவில் வெளியாகும் மீத்தேன் ஒரு மிக முக்கியமான காலநிலை மாற்ற பசுங்குடில் வாயு ஆகும்).
மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பு உலகளாவிய ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு இயக்கத்தில் தொடர்ந்து பங்கெடுக்கும்.
மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் ஆணைப்படி, தமிழ்நாட்டை ஹைட்ரோகார்பன் திட்டம் இல்லாத மாநிலமாக (Frack Free Tamil Nadu) மாற்ற பசுமைத் தாயகம் அமைப்பு பாடுபடும்.
No comments:
Post a Comment