வாருங்கள் மலர்வனத்துக்கு... வெல்லுங்கள்... ரூ. 1 லட்சம் பரிசை!- மருத்துவர் இராமதாசு. - Agnipuratchi

வாருங்கள் மலர்வனத்துக்கு... வெல்லுங்கள்... ரூ. 1 லட்சம் பரிசை!- மருத்துவர் இராமதாசு.

Share This

அரசியல் மற்றும் சொந்தப் பணிகள் காரணமாக சென்னை சென்றிருந்த நான் நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பினேன். வரும் வழியில் எனது மனதிற்கு மிகவும் பிடித்த இடமான  வன்னியர் கல்வி அறக்கட்டளையின் கல்விக் கோயிலுக்கு சென்றேன். அங்கு நெடிதுயர்ந்து வளர்ந்து இருந்த மரங்களும், வாசனை வீசும் மலர்களும் என்னை அழைத்தன. எனது வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று அவற்றுடன் உரையாடினேன். மகிழ்ச்சியில் அந்த மலர்கள் மலர்ந்ததைக் கண்டு  என் மனமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது. இவையெல்லாம் பிறரால் உணர முடியாத, எனக்கு மட்டுமே சாத்தியமான சில உணர்வுகள்.
அப்போது என் மனம் மலரும் நினைவுகளை அசைபோட்டது....

சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்தக் கல்விக் கோயிலை பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் அரும்பாடு பட்டு உருவாக்கினேன். இந்தக் கல்விகோயில் வளாகம் கல்வி வழங்குவது மட்டுமின்றி, கவலைகளை மறந்து  கற்கவும், சிந்திக்கவும் ஏற்ற இரம்மிய சூழலையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குகிறது.

கல்விக்கோயில் வளாகத்தில் பூத்துக்குலுங்கும் அரிய வகை மரங்களும், செடி-கொடிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மனதைக் கவரும் பாம் (PALM ) வகை மலர்ச்செடிகள் காணும் திசையெல்லாம் நிறைந்து கிடக்கின்றன. நெடிதுயர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் பல திசைகளில் இருந்தும் பறவைகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் கவர்ந்து இழுப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் கல்விக் கோயில் வளாகத்தில் பல்லாயிரக் கணக்கில் மரங்களும், செடி, கொடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. இத்தகைய மலர்கள் நிறைந்த கல்விச் சோலையில் நடமாடும்போது மனதிற்குள் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் பரவுவதை உணர முடியும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வேறு எங்காவது இத்தகைய இரம்மியமான, மணம் வீசும் சூழலில் கல்விச் சாலைகள் அமைந்திருக்குமா? என்பது ஐயம் தான்.

வளாகத்தில் உள்ள அனைத்து மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தையும் அறக்கட்டளையின் நிறுவனராகிய நானே தனி மனிதனாக பல்வேறு இடங்களில் இருந்து வரவழைத்து,  எனது நேரடி மேற்பார்வையில் நட்டு, வளர்த்து ஆளாக்கியிருக்கிறேன்.  இந்த செடிகளில் பெரும்பாலானவற்றை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டிகையில்  நர்சரி வைத்து நடத்தி வரும் பெருமாள் என்பவரை அழைத்துக் கொண்டு  ஆந்திர மாநிலம் ராஜமந்திர் & கடியம் என்ற பகுதியில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய நர்சரிக்கு நானே நேரில் சென்று வாங்கி வந்தேன். அந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகச்சிறந்த அழகியலுடன் கல்விக்கோயில் பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் எங்கும் இல்லாத செடி, கொடிகளும், மரங்களும் இங்கு இருப்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இதை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்த வேண்டும் என்பது தான் எனது அவா. இதற்காக இது வரை 4 முறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறேன்.‘‘கல்விக் கோயில் வளாகத்திலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றை காணொளியில் ஆவணப்படுத்துவதுடன், அவற்றின் பெயர், குடும்ப வகை, வகை வாரியாக மரங்கள் மற்றும் செடி-கொடிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களுடன் விரிவான கட்டுரையும் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், இதேபோன்ற மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவை தமிழகத்தில் வேறு எங்கேனும் இருந்தால் அதை அவற்றின் பெயர், வரலாறு உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இப்போட்டியில் சிறப்பான முறையில் விவரங்களை ஆவணப்படுத்தி அளிக்கும் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்’’ என அறிவித்தும், அதை செய்ய  இதுவரை எவரும் முன்வரவில்லை.

கல்விகோயில் வளாகத்தில் இயற்கை எழிலையும், அதை ஆவணப்படுத்த எவரும் முன்வராததையும்  நினைக்கும் போது இயற்கையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ? இயற்கை அழகு மீது எவருக்கும் அக்கறை இல்லையோ? என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டது. தமிழகத்திலுள்ள வனக் கல்லூரி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மாணவர்கள் இதை சவாலாக எடுத்துக் கொண்டு செய்யலாம். தாவர வகைகள் குறித்து ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதும் அளவுக்கு கல்விக் கோயிலில்  செடி, கொடிகளும், மரங்களும் உள்ளன. ஆதலால் இது தாவரவியல் மாணவர்களின் அறிவுக்கும், அனுபவத்துக்கும் தீனி போடுவதுடன் ரூ.1 லட்சம் பரிசையும் அள்ளித் தரும்.

ஆகவே.... 5&ஆவது முறையாக அறிவிக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் கல்விக் கோயிலுக்கு வாருங்கள். கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ஆவணப்படுத்தும் பணிகளை தொடங்குங்கள்.  ரூ. 1 லட்சம் பரிசை வெல்லுங்கள். உங்களுக்காக காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages