கிரேட்டா துன்பர்க்: என்னை வியக்க வைத்த சிறுமி - முகநூல் பதிவு- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

கிரேட்டா துன்பர்க்: என்னை வியக்க வைத்த சிறுமி - முகநூல் பதிவு- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

கிரேட்டா துன்பர்க்....

இந்த 16 வயது சிறுமியின் பெயரைக் கூறினாலே வாடிய பூக்கள் மலரும், வறட்சியால் வெடித்த நிலங்களில் நீர் ஊறும், பட்ட மரங்கள் துளிர்க்கும். காரணம்.... அந்த சிறுமியின் எண்ணமும் சிந்தனையும் அப்படிப்பட்டவை.
புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் குறித்து பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்தாலும் கூட, அதைப்பற்றி நமது மாநிலத்தின் பெரியவர்கள் கூட புரிந்து கொள்ளாத நிலையில், தனது 15 வயதில் புவிவெப்பமயமாதலின் தீமைகளை புரிந்து கொண்டு அதற்காக தனி ஒருத்தியாக போராட்டத்தைத் தொடங்கியவள் இந்த சிறுமி. அவளது போராட்டம் இன்று உலகையே அவளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பிறந்த இந்த சிறுமி, அவளது 8-ஆவது வயதில், அதாவது 2011-ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் பற்றி முதலில் கேள்விப்பட்டாள். ஆனால், புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படாதது ஏன்? என்பதை அந்த சிறுமியால் உணர முடியவில்லை. ஆனாலும், புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடுத்த இரு ஆண்டுகளில் அவளுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. மனம் சார்ந்த பல நோய்கள் ஏற்பட்டன.

ஆனாலும், அவளது எண்ணம் புவியைக் காக்க எதையாவது செய்ய வேண்டும் என்பதில் தான் இருந்தது. அதற்காக தமது 13-ஆவது வயதில் தமது குடும்பத்தின் மூலம் வெளியாகும் கார்பன் - டை- ஆக்சைடு வாயுவின் அளவை குறைக்கும் வகையில் குடும்பத்தில் எவரும் மாமிசம் உண்ணக்  கூடாது, விமானங்களில் பறக்கக்கூடாது என்று அன்புக் கட்டளையிட்டாள். அச்சிறுமியின் தாயார் மெலினா எர்ன்மான் உலகப்புகழ் பெற்ற ஓபரா பாடகி. அதன்மூலம் அவர்களின் குடும்பத்திற்கு கோடிக் கணக்கில் வருமானம் கிடைத்து வந்தது. அதேபோல், அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக   அசைவம் உண்ணும் குடும்பம். ஆனாலும், அன்பு மகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவளின் பெற்றோர் முழுமையாக சைவத்துக்கு மாறினார்கள். தாயார் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை என்று அறிவித்தார்.

தனது குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்ட நிலையில், உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்த  முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. 2018-ஆம் ஆண்டு ஸ்வீடன் நாளிதழான   Svenska Dagbladet   நடத்திய கட்டுரைப் போட்டியில் புவிவெப்பமயமாதல் குறித்து கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றாள். ‘‘ இந்த உலகில் நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், மனிதகுல வரலாற்றில் புவிவெப்பமயமாதல் எனும் மிகப்பெரிய  நெருக்கடியில் நாம் இருக்கும் போது நான் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்?  (I want to feel safe. How can I feel safe when I know we are in the greatest crisis in human history?)’’ என்ற வாசகம் தான் அவளுக்கு முதல் பரிசை பெற்றுத் தந்தது.

அதன்பின்னர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டு, ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்துக்கு முன் தனி ஆளாக அமர்ந்து ‘‘ பருவநிலை காக்க பள்ளி வேலை நிறுத்தம்’’ என்ற பதாகை தாங்கி போராட்டம் நடத்தினாள். தொடக்கத்தில் எதற்காக இந்த சிறுமி போராட்டம் நடத்துகிறாள் என்று தெரியாமல் அந்த ஊர் மக்கள் குழம்பினார்கள். பின்னர் சிறுமியின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்க கிரேட்டாவுக்கு அழைப்புகள் வந்தன. அதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் செப்டம்பர் 23-ஆம் தேதி ஐ.நா. காலநிலை மாற்ற சிறப்பு மாநாட்டுக்கு அழைக்கப் பட்டார். சுற்றுச்சூழலை கெடுக்கும் விமானங்களில் பயணிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கும் கிரேட்டா,  பிரிட்டனில் இருந்து படகில் புறப்பட்டு 6 நாள் பயணத்திற்கு பிறகு நியூயார்க் நகரைச் சென்றடைந்தார்.

அந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரை உலகத் தலைவர்களின் மனசாட்சியை உலுக்கியது.

‘‘இளைய சமுதாயம் உங்களை (உலகத் தலைவர்கள்) உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள்.சுற்றுச்சூழல் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன துணிச்சல்?’’ என்பது தான் அந்த சிறுமி ஆற்றிய உரையின் முக்கிய அம்சம்.

உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் கூடியிருந்த அவையில் துணிச்சலுடன் வினா எழுப்பிய அந்த சிறுமி தான் எனது நெஞ்சில் நிறைந்திருக்கிறாள். அவர் பாராட்டப்பட வேண்டியவள். அவளுக்கு நான் இங்கிருந்து சல்யூட் செய்கிறேன். அவளது உறுதியும், துணிச்சலும் பின்பற்றப்பட வேண்டியவை. அவளது துணிச்சலைப் பாராட்டி டைம்ஸ் இதழ் அட்டையில் அச்சிறுமியின் படத்தை வெளியிட்டதுடன், வருங்காலத் தலைவி என்றும் கொண்டாடியது. இந்த ஆண்டில் மட்டும் அச்சிறுமிக்கு 8 விருதுகளும், பதக்கங்களும் கிடைத்துள்ளன. அமைதிக்கான நோபல் பரிசும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நூலிழையில் அந்த வாய்ப்பு தவறி விட்டது. அநேகமாக அடுத்த ஆண்டில் அந்த பெருமை சிறுமிக்கு கிடைக்கலாம். அது கிடக்கட்டும்....

16 வயதில்  உலகைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் போராடும் அந்த சிறுமியை பின்பற்றி, புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால் அது தான் அவளுக்கு நாம் செய்யும் மரியாதை.... அது தான் அவளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது.

என்ன..... செய்வீர்களா?
                   

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages