கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் முதல் நாள் மாலையில் மட்டை வீசத் தொடங்கி, இரவு இடைவெளி முடிந்த பின்னர் அடுத்த நாள் காலையிலும் தொடர்ந்து விளையாடும் மட்டை வீச்சாளர்களை இரவுக் காவலர் (Night Watchman) என்பார்கள். இதேபோல், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் முதல் நாளில் பேசத் தொடங்கிய ஒருவர் அடுத்த நாளும் தொடர்ந்து பேசியிருக்கிறார், அவர் ஒரு இந்தியர் என்ற சுவையான தகவல் உங்களுக்கு தெரியுமா.... தெரியாதோர் தெரிந்து கொள்ளுங்கள்...
ஐக்கிய நாடுகள் அவையின் 762-ஆவது கூட்டம் 1957-ஆவது ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவிருந்தது. அப்போது ஐ.நா அமைப்புக்கான இந்தியாவின் தூதராக வி.கே. கிருஷ்ண மேனன் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஜனவரி மாதம் 23-ஆம் தேதி காஷ்மீர் சர்ச்சை குறித்து பேச்சைத் தொடங்கிய கிருஷ்ண மேனன் மிகவும் ஆக்ரோஷமாக உரையாற்றினார். மேனன் அமைதி விரும்பி என்றாலும் கூட அவரது உரையில் நெருப்பு பறந்தது. இடையில் நீண்ட நேரத்துக்கு தண்ணீர் கூட குடிக்காமல் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ண மேனன், 5 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், சோர்வடைந்து, மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த நாள் ஓரளவு குணமடைந்தவுடன் மீண்டும் அவைக்கு சென்று பாதியில் விட்ட தனது உரையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று துடித்தார்.
ஆனால், அதற்கு மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் காஷ்மீர் குறித்து பேசினாலே அவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது தான். எனினும் மேனன் உறுதியாக இருந்ததால், மருத்துவர்களின் கண்காணிப்புடன் பேச அவர் அனுமதிக்கப்பட்டார். அதன்படி ஜனவரி 24-ஆம் தேதி மீண்டும் பேசத் தொடங்கிய மேனன் 2 மணி நேரம் 48 நிமிடம் இடைவிடாமல் பேசிய நிலையில் சோர்வு காரணமாக தமது உரையை முடித்துக் கொண்டார். ஐ.நா. பாதுகாப்பு அவையில் அவர் 7.48 மணி நேரம் ஆற்றிய உரை தான் அதிக நேரம் ஆற்றிய உரையாகும். அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. காஷ்மீர் குறித்து அவர் ஆவேசமாக பேசியதால் மேனன் ‘‘ காஷ்மீர் ஹீரோ’’ என்று அழைக்கப்பட்டார்.
ஐ.நா. உரையில் உரையாற்றிய 3 மாதங்களில் அவர் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஐ.நா மன்றத்தில் அவரது பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. பலராலும் அவரது பணி பாராட்டப்பட்டது. சீனாவை ஐ.நாவில் சேர்ப்பதற்கு அமெரிக்க ஆதரவு நாடுகளின் தூதர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில், மேனன் மட்டும் ஆதரித்தார். இதனால் அவருக்கு எதிராக மேலை நாடுகளின் தூதர்கள் அணி சேர்ந்தாலும் ஆசிய நாடுகளிடம் அவருக்கு மரியாதை அதிகரித்தது.
பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த போது சீனாவுடனான போரில் மோசமான உத்திகளை வகுத்து தோல்விக்கு வழி கோலியதால் அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. எந்த சீனா அவரது உயர்வுக்கு வழி வகுத்ததோ, அதே சீனா தான் அவரது சரிவுக்கும் வழி வகுத்தது.
தனிப்பட்ட முறையில் கிருஷ்ண மேனன் மிகவும் நேர்மையானவர். புகை, மது, புலாலை தவிர்த்தவர். தூதராக பணியாற்றிய போது மாத ஊதியமான ஒரே ஒரு ரூபாய் மட்டுமே பெற்றவர். பின்னர் ஊதியமே வேண்டாம் என்று மறுத்தவர். இங்கிலாந்து தூதராக இருந்த போது அவர் வசிக்க மாளிகை வழங்கப்பட்ட போதும், அதை மறுத்து தூதரகத்தில் உள்ள ஒற்றை அறை போதும் என்று கூறி எளிமையாக வாழ்ந்தவர். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் குறிப்பு: ஐ.நா பாதுகாப்பு அவையில் மிக அதிக நேரம் உரையாற்றியவர் வி.கே. கிருஷ்ண மேனன் என்றால், ஐ.நா பொது அவையில் மிக அதிக நேரம் உரையாற்றியவர் கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஆவார். அவர் 1960-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நான்கரை மணி நேரம் உரையாற்றினார்.
No comments:
Post a Comment