நவம்பர் 27.... விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள் என்றாலே உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே புத்தெழுச்சி பிறக்கும்; புதுவீரம் துடிக்கும்; நரம்புகள் புடைக்கும். நவம்பர் 27-ஆம் தேதி உண்மையில் துக்க நாள் என்றாலும் கூட, அதை வீரம் விதைக்கப்பட்ட நாளாகவே விடுதலைப் புலிகளும், ஈழத்தமிழர்களும் கருதுகின்றனர். அந்த நாளில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே உரையாற்றுவார். அன்றைய நாளில் தான் தமிழீழம் அமைப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உறுதியேற்றுக் கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மறக்க முடியாத நாள் என்று ஒன்று உண்டென்றால் அது மாவீரர்கள் நாளாகிய இன்று தான்.
மாவீரர் நாள் என்பது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு வகையில் பார்த்தால் அது வீரம் விளைந்த நாள். மாவீரர் நாள் 27-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அது வீரம் விதைக்கப்பட்ட நாள். அந்த வீரத்தின் பெயர் சங்கர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும், பிரபாகரனுக்கு நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர் அவர். இலங்கை ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவரை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பது தான் சிங்கள வெறியர்களின் நோக்கமாக இருந்தது.
தளபதி சங்கர் - முதல் மாவீரர்
1982-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தளபதி சங்கரை சிங்களப் படைகள் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தின. வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில், சிங்களப் படையினரின் முற்றுகையை தகர்த்து தப்பிக்கிறார். சிகிச்சைக்காக தமிழகம் வந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி நவம்பர் 27-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மடியில் தான் அவரது உயிர் பிரிந்தது. அவர் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக உயிரிழந்த முதல் போராளி ஆவார். பின்னாளில் 1989-ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையுடன் நடத்தப்பட்ட போரில் 419 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவையும் போற்றும் வகையில் 1989-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ஆம் தேதியை மாவீரர்கள் நாளாக விடுதலைப் புலிகள் இயக்கம் கடைபிடித்து வருகிறது. மாவீரர் நாள் கொண்டாடப்படுவதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அந்த நிகழ்வில் அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்களை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அறிவிப்பார்.
உலகம் முழுவதும் கடைபிடிப்பு
மாவீரர்கள் நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கடைபிடிக்கப்படும். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் அந்த நாடுகளின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களும், அரசியல் கட்சியினரும் கலந்து கொள்வார்கள். மொத்தத்தில் மாவீரர் நாள் நிகழ்வு என்பது ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வை தூண்டி எழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்.
மாவீரர்கள் நாள் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது விடுதலைப்புலிகளின் வீரத்தை, தியாகத்தை பெருமைப்படுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு தான். இந்த மாநாடு 1992-ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையில் நடைபெற்றது. 1991-ஆம் ஆண்டில் ராஜிவ்காந்தி திருப்பெரும்புதூரில் கொல்லப்பட்டதாலும், அதற்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று கூறப்பட்டதாலும் அந்த இயக்கத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. கூடுதலாக தடா சட்டமும் நடைமுறையில் இருந்ததால் விடுதலைப்புலிகள் பற்றி பேசவே திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட அஞ்சின. அந்த நேரத்தில் எதைப்பற்றியும் அஞ்சாமல் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நானே முன்னின்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்தினேன்.
வி.பி.சிங், பெர்னாண்டஸ்
அம்மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இராம்விலாஸ் பாஸ்வான், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கான்ஷிராம், ஃபார்வர்டு பிளாக் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் சிட்டபாசு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இப்போதைய காங்கிரஸ் தலைவரும், அப்போதைய எம்.ஜி.ஆர் அதிமுக கட்சித் தலைவருமான சு. திருநாவுக்கரசு, பழனிபாபா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக அணிவகுத்து வந்தனர். பேரணியில் இலங்கையில் தமிழீழம் அமைய வேண்டும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் பங்கேற்ற பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் உருவப் படங்களை ஏந்தி வந்தனர்.
தமிழுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் குரல் கொடுக்க எவரும் முன்வராத நிலையில் பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதால் தமிழுக்காக பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பிய உரிமைக்குரல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பரவியது. தமிழ் தலை நிமிர்ந்தது.
நானும், தலைவர்களும் கைது
தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியதற்காக என் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநாட்டில் பங்கேற்ற தமிழ்தேசிய இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்குகளைத் தொடர்ந்தது. அத்துடன் நிற்காமல் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த பழ. நெடுமாறன், பெ.மணியரசன், தியாகு, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோரையும், என்னையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பிறகுதான் தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் தமிழர் நலன் சார்ந்த முழக்கங்களும், போராட்டங்களும் வலுவடைந்தன. அந்த வகையில், முடக்கப்பட்டிருந்த தமிழர் வாழ்வுரிமையை மீட்டுக்கொடுத்தது பா.ம.க. என்பதில் எனக்கு பெருமை.
வீர வணக்கம்
மீண்டும் மாவீரர் நாளுக்கு வருவோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வீரத்தையும் உணர்வையும் தட்டி எழுப்பும் அந்த மாவீரனின் குரல் கடந்த 10 ஆண்டுகளாக ஒலிக்கவில்லை. ஆனாலும் மாவீரர் நாள் பாடல் வரிகளைப் பாடி மாவீரர்களுக்கு நாம் வீர வணக்கம் செலுத்துவோம்....
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
No comments:
Post a Comment