நீதியரசர் ச.மோகன் மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ் பற்றாளருமான நீதியரசர் ச.மோகன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
நீதியரசர் மோகன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தமிழ் வளர்ச்சி பணிகளை மனம் திறந்து பாராட்டியவர். பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ் பண்ணிசை விழாக்களில் பல முறை கலந்து கொண்டிருக்கிறார். என்னுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றி பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ள அவர், சிறந்த இலக்கியவாதியும் ஆவார். மாணிக்கத்தேன் உள்ளிட்ட பல நூல்களை அவர் எழுதியிருக்கிறார். தீர்க்கப்படாத பல சிக்கல்களை தீர்த்து வைத்திருக்கிறார்.
1999-ஆம் ஆண்டில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதற்காக நீதியரசர் மோகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தலைசிறந்த தமிழ்ப் பற்றாளரான அவருக்கு அரசுத் தரப்பில் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதற்கெல்லாம் பணியாமல் தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கினார். அவை அரசால் செயல்படுத்தப்படவில்லை என்றாலும் கூட அத்தகைய பரிந்துரையை வழங்கியதற்காக ச.மோகன் தமிழறிஞர்கள், உணர்வாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பார்.
நீதியரசர் மோகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment