சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா
4. மண்டல் ஆணையம் என்றால் என்ன?
இந்தியா விடுதலை அடைந்து 30 ஆண்டுகள் கடந்தும் கூட மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அச்சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பின்தங்கிய நிலையில் வாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக பிகார் மாநிலம் மாதேபுரா மக்களவை தொகுதி உறுப்பினரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை 1979-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அப்போதைய ஜனதாக் கட்சி ஆட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைத்தார். அது தான் சமூக. கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்/ மண்டல் ஆணையம் என்று அழைக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்படும் பாகுபாடுகளை களைவதற்காக அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும், சமூக, கல்வி, பொருளாதாரம் சார்ந்த 11 காரணிகளின் அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை கண்டறியும்படியும் மண்டல் ஆணையத்திற்கு ஆணையிடப்பட்டது.
பிந்தேஸ்வரி மண்டல் பிகாரில் ஜாமீன்தாரி யாதவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட வாழ்க்கையில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை சந்தித்தவர். அதைப் போக்க இட ஒதுக்கீடு அவசியம் என்பதில் மண்டல் உறுதியாக இருந்தார். மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 11 காரணிகளின் அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்ட மண்டல் ஆணையம், 52% மக்கள் தொகை கொண்ட அந்த சமூகத்திற்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரை அறிக்கையை 1980-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசிடம் தாக்கல் செய்தது. அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 13.04.1982 அன்று காலமானார். ஆனால், அவர் இறக்கும் வரை அவரது பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. 27% இட ஒதுக்கீடும் நடைமுறைபடுத்தப்படவில்லை.
நாளை.....
பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை அடையாளம் காண பயன்படுத்தப்பட்ட 11 காரணிகள்.
No comments:
Post a Comment