சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா 15. 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வருமா?
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள போதிலும், அதன் பயன்கள் இன்னும் உரியவர்களைச் சென்றடையவில்லை என்ற விமர்சனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் 25 விழுக்காட்டை வெறும் 10 சமூகங்கள் மட்டுமே அனுபவிக்கின்றன என்பது தான் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்த உண்மையாகும்.
அதுமட்டுமின்றி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள 983 சமூகங்கள் இட ஒதுக்கீட்டின் பயன்களை இன்னும் அனுபவிக்கவே இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த அநீதிக்கு தீர்வு காண்பதற்காக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரோகினி தலைமையில் தனி ஆணையம் கடந்த 2017&ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் ஆய்வு இன்றும் தொடர்கிறது.
இந்த ஆணையத்தின் ஆய்வில் குறிப்பிடத்தக்க பல உண்மைகள் தெரியவந்துள்ளன. அதாவது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 1900&க்கும் கூடுதலான சமூகங்கள் இதுவரை 3 விழுக்காட்டுக்கும் கூடுதலான இட ஒதுக்கீட்டையே பெற்றுள்ளன. அதாவது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 270 இடங்கள் ஒதுக்கப்பட்டால், இந்த சமூகங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே 7 இடங்கள் மட்டும் தான் கிடைக்கின்றன.
இந்த அநீதிக்கு முடிவு கட்டும் வகையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% ஒதுக்கீட்டில் இந்த 1900 சாதிகளுக்கு மட்டும் 10% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் நீதிபதி ரோகிணி ஆணையம் பரிந்துரைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் பயன்களை இன்னும் அனுபவிக்காத 983 சமூகங்களை தனி பிரிவாக பிரித்து அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப் படலாம். இட ஒதுக்கீட்டின் பயன்களை அதிகமாக அனுபவித்த 10 சமூகங்களுக்கு வெறும் 7% மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படலாம் என்பது தான் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் ஆய்வில் உள்ள பரிந்துரை ஆகும். இந்த பரிந்துரை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் போது, அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு மூன்று அடுக்காக பிரிக்கப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் கூட, அது துல்லியமானதாக இருக்காது. ஏனெனில் இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் சாதிகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டவை தானே தவிர, ஒவ்வொரு சாதியிலும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டவை அல்ல. இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் மட்டும் தான் அது துல்லியமானதாக இருக்கும். அதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
எனவே...
இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இன்றைய உடனடி சமூகநீதித் தேவை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான்!
முற்றும்.
No comments:
Post a Comment