சமூக நீதி& சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா
7. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள்!
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 52% என்று மண்டல் ஆணையம் கண்டறிந்தது. இந்தியாவில் மொத்தம் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று ஆணையம் அறிவித்தது. 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 5013 ஆக அதிகரித்து விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை சாதிவாரியாக இல்லை. இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதால், 1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கணக்கெடுக்கப்பட்டனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் முன்னேறிய வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய சமுதாயங்களின் மக்கள்தொகையை கழித்து மீதமுள்ள மக்கள்தொகை தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று மண்டல் ஆணையம் கணக்கிட்டது.
இந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை விழுக்காடு இருப்பார்களோ, அதே அளவில் தான் இந்துக்கள் அல்லாதவர்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டது. இறுதியாக இந்திய மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் அளவு 52 விழுக்காடு என்ற அளவுக்கு மண்டல் ஆணையம் வந்தது. முதலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கத்தான் மண்டல் ஆணையம் தீர்மானித்தது.
ஆனால், மொத்த இட ஒதுக்கீடு 50%க்கும் மேல் செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்ததால், அதை மீறக்கூடாது என்று கருதி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வல்லுனர்கள் தீர்மானித்தார்கள். பின்னர் அதுவே ஆணையத்தின் பரிந்துரையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தாக்கல் செய்யப்பட்டது.
நாளை....
மண்டல் பரிந்துரைகள்: செயல்படுத்துவதில் இடையூறுகள்!
No comments:
Post a Comment