சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா
11. 27% இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை!
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 27 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், பிற பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அந்த விவரங்களை உங்கள் பார்வைக்காக மீண்டும் ஒரு முறை முன்வைக்கிறேன்.
2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் உள்ள தொகுதி ஏ பணிகளில் 17 விழுக்காட்டை மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கைப்பற்றி உள்ளனர். ஒட்டுமொத்தமாக 57 வகை அலுவலகங்களில் தொகுதி ஏ பணிகளில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 14% மட்டும் தான்.
தொகுதி பி பணிகளை பொறுத்தவரை, முதல் 24 அமைச்சகங்களில் 14% பணிகளை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகிக்கின்றனர். 57 வகை அலுவலகங்களை கணக்கில் கொண்டால் இது 15% ஆக உள்ளது. தொகுதி சி பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலைவாய்ப்பு விகிதம் முறையே 11%, 17% ஆக உள்ளது. தொகுதி டி பணிகளில் இது முறையே 10%, 18% ஆக உள்ளது.
மத்திய அரசின் அதிகாரம் மிக்க பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டிருக்கின்றனர். உதாரணமாக மத்திய அரசின் அதிகாரபீடமாக கருதப்படும் மத்திய அமைச்சரவை செயலகத்தில் மொத்தம் 64 தொகுதி ஏ பணிகள் உள்ளன. அவற்றில் குறைந்தது 18 பணியிடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு பணியிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. 60 பணியிடங்கள் உயர்சாதியினரை கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. 4 இடங்கள் பட்டியலினத்தவரால் நிரப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
தொடரும் அநீதி
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய சமூக அநீதி நடைபெற்று வருவதை தேசிய பிற பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கண்டறிந்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் சுமார் 25 விழுக்காட்டை (இது 27 விழுக்காட்டில் 25% அல்ல.... மாறாக பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காட்டை 100% என்று வைத்துக் கொண்டால் அதில் 25%) வெறும் 10 சமூகங்கள் மட்டுமே அனுபவிக்கின்றன என்பது தான் அந்த அதிர்ச்சி தகவலாகும்.
அதுமட்டுமின்றி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள 983 சமூகங்கள் இட ஒதுக்கீட்டின் பயன்களை இன்னும் அனுபவிக்கவே இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த அநீதிக்கு தீர்வு காண்பதற்காக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்தும், இதற்காக தனி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பின்னர் விளக்குகிறேன்.
நாளை....
உயர்கல்வியில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு கோரிக்கை!
***
No comments:
Post a Comment