இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்...? மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது. - Agnipuratchi

இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்...? மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது.

Share This

இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்...? மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது.

1. மகாகவி பாரதியார்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பிடியிலிருந்து தமிழகம் எவ்வாறு மீளும்? என்பது குறித்த சிந்தனைகளிலேயே எனது பகல்  பொழுதுகள் கழிகின்றன.

இரவு நேரம் வந்தால் உறக்கம் வருவதற்கு பதிலாக புதிய, புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. அத்தகையதொரு தருணத்தில் தான், இளம் வயதில் சாதனை படைத்து, அதை உலகம் உணருவதற்கு முன்பாகவே உயிர் நீத்த பல திறமையாளர்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு வந்தன. முப்பதுகளுக்கு முன்பே மறைந்த அவர்கள், 60 வயதைக் கடந்தும் வாழ்ந்திருந்தால் எத்தகைய சாதனைகளை படைத்து இருப்பார்கள் என்பது குறித்த எண்ண ஓட்டம் தான் இந்த முகநூல் பதிவு தொடர் ஆகும்.

‘‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா -- அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா - அதைக்
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா’’  என்று கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்களால் போற்றப்பட்ட மகாகவி பாரதியாரைப் பற்றி முதலில் பார்ப்போம்.

மகாகவி பாரதியாரைப் பற்றி உங்களில் பெரும்பான்மையானோருக்கு மிகவும் விரிவாக தெரிந்து இருக்கும். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882-ஆம் ஆண்டு பிறந்த பாரதியார் 11-ஆவது வயதிலேயே கவிதைகள் படைக்கத் தொடங்கினார். தேச விடுதலை உணர்ச்சியை ஊட்டும் வகையில் ஏராளமான பாடல்களை இயற்றினார். 15 வயதில் திருமணம் செய்து கொண்ட அவர், கவிதை எழுதுவதை விடுத்து தொழில் செய்யத் தொடங்கினார்.  தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அனைத்தையும் இழந்ததால் எட்டயபுரம் அரண்மனையில் பணிக்கு சேர்ந்தார். பாரதியாரின் கவித்திறனையும், தேசப்பற்றையும் அறிந்திருந்த எட்டயபுரத்து மன்னர், பாரதியாரை தனி அரண்மனையில் தங்க வைத்து  விருந்தினரைப் போல உபசரித்தார். பாரதியார் திடீர், திடீரென அவரது நிலையை மாற்றிக் கொண்டு காசி, சென்னை என புறப்பட்டு விடுவார். அப்போதெல்லாம் எட்டயபுரத்து மன்னர் அவரது அதிகாரிகளை அனுப்பி பாரதியாரை அழைத்து வந்து உபசரிப்பார். இவையெல்லாம் பாரதியாரின் 16 முதல் 22 வயதுக்குள் நடந்தவை. இந்த காலத்தில் அவர் கவிதை எதையும் எழுதவில்லை. இன்று நாம் கொண்டாடும் பாரதியாருக்கான இலக்கணங்கள் எதுவும் அப்போது இருந்த பாரதியாருக்கு இல்லை.

7 ஆண்டுகளாக கவிதை எழுதாமல் இருந்த பாரதியார், 1904-ஆம் ஆண்டு அவரது 22-ஆவது வயதில் மதுரையில் எழுதிய பாடல் விவேக பானு இதழில் வெளியானது. அதன்பிறகு தான் பாரதியாரின் இலக்கியப் பயணம் மீண்டும் தொடங்கியது.

அதன்பின் 1904-ஆம் ஆண்டு தொடங்கி 1920-ஆம் ஆண்டு வரையிலான 16 ஆண்டுகளில் சுதேசமித்ரன்,  சக்கரவர்த்தினி, இந்தியா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் என பல இதழ்களில் உதவி ஆசிரியராக  பாரதியார் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் பாரதியார் குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட 23 அற்புதமான படைப்புகளை உருவாக்கினார். அவற்றின் விவரம்:

1.குயில் பாட்டு
2. கண்ணன் பாட்டு
3. பாப்பா பாட்டு
4.சுயசரிதை (பாரதியார்)
5. தேசிய கீதங்கள்
6. பாரதி அறுபத்தாறு
7. ஞானப் பாடல்கள்
8. தோத்திரப் பாடல்கள்
9. விடுதலைப் பாடல்கள்
10. விநாயகர் நான்மணிமாலை
11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)
12. பதஞ்சலியோக சூத்திரம்
13. நவதந்திரக்கதைகள்
14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
16. சின்னஞ்சிறு கிளியே
17. ஞான ரதம்
18. பகவத் கீதை
19. சந்திரிகையின் கதை
20. பாஞ்சாலி சபதம்
21. புதிய ஆத்திசூடி
22. பொன் வால் நரி
23. ஆறில் ஒரு பங்கு

பாரதியார் 100 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் விடுதலைக்காக குரல் கொடுத்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை மகாபாரதப் போராகவும் இந்தியத் தாயை பாஞ்சாலியாகவும் உருவகம் செய்து பாஞ்சாலி சபதம் படைத்தார். இந்தியா விடுதலை அடைவது உறுதி என்று முழங்கினார். பெண்ணுரிமை, இந்திய விடுதலை என அவர் என்னவெல்லாம் கனவு கண்டாரோ, அவை அனைத்தும் நடந்தன. ஆனால், அவை நடக்கும் போது அவற்றைப் பார்க்க பாரதியார் உயிருடன் இல்லை.

பாரதியாருக்கு பாரத நாட்டின் மீது அளவு கடந்த மரியாதையும் பாசமும் உண்டு. அதை வெளிப்படுத்தும் வகையில் அவர் இயற்றிய மன்னும் இமயமலை எங்கள் மலையே என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது ஆகும்.
‘‘மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?’’ என்று தொடங்கும் அந்த பாடலில் இந்தியாவின் சிறப்புகள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும்.

பாரத நாட்டையும் தாண்டி தமிழ் மீது அவர் மிகுந்த பற்று கொண்டிருந்தார். அதனால் தான் பல மொழிகளை அறிந்த அந்தப் புலவன், ‘‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று கவி பாடினான். அதுமட்டுமின்றி தமிழின் சிறப்பை உலகுக்கு உணர்த்துவதற்காக தமிழ் வாழ்த்து என்ற தலைப்பில் தனிப்பாடல் ஒன்றையே பாரதி உருவாக்கினார். என்னைக் கவர்ந்த அந்த பாடலைத் தான் மக்கள் தொலைக்காட்சியின் மொழி வணக்கப் பாடலாக நான் தேர்வு செய்தேன்.

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும்  அளந்திடும்
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

எங்கள் தமிழ்மொழி! ...
எங்கள் தமிழ்மொழி! ...
என்றென்றும் வாழிய வே!

பாரதியாரின் பாடல்கள் எப்போதும் வீர உணர்வையும், எழுச்சியையும் தூண்டுவதாக எழுதப்பட்டிருக்கும். அத்தகைய பாடல்களில் ஒன்றான....
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!’’ என்பது நான் அடிக்கடி மனதில் படிக்கும் பாடல் ஆகும்.

இளம் வயதில் இத்தனை சாதனைகளைப் படைத்த பாரதியார் 1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால்  உடல் நலம் பாதிக்கப்பட்டு,  செப்டம்பர் மாதம் 11&ஆம் தேதி காலமானார். பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் மீது ஆங்கிலேய அரசு எத்தனையோ அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது; ஆனால், அவர் கலங்கவில்லை.
அவர் மறைந்து 25 ஆண்டுகள் கழித்து தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

38 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பாரதியார், 16 ஆண்டுகள் மட்டுமே தீவிரமாக எழுதினார். அவர் மட்டும் 60 ஆண்டுகளைக் கடந்து உயிருடன் இருந்திருந்தால் பெண்கள் உரிமைக்காகவும், குழந்தைகள் உரிமைகளுக்காகவும் கவிதைகள் படைத்திருப்பார். அவர் படைத்த இலக்கியங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும். இவற்றுக்கெல்லாம் மேலாக இந்தியாவின் நாட்டுப்பண் ( தேசிய கீதம்) தமிழில் எழுதப்பட்டிருந்திருக்கும்; அதை பாரதியார் மிகச்சிறப்பாக படைத்து இருந்திருப்பார். சிறுவர்கள் மனதிலும் தேசப்பற்றை விதைத்த பாரதியாரைப் போற்றுவோம்!

நாளை...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages