பொருளாதார பாதிப்பை சமாளிக்க களத்தில் இறங்கிய, சார்க் நாடுகள் - Agnipuratchi

பொருளாதார பாதிப்பை சமாளிக்க களத்தில் இறங்கிய, சார்க் நாடுகள்

Share This

பொருளாதார பாதிப்பை சமாளிக்க களத்தில் இறங்கிய, சார்க் நாடுகள்

இஸ்லாமாபாத் : கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சமாளிப்பதற்காக, 'சார்க்' எனப்படும், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகள், முதலீட்டை ஊக்குவிக்கவும், ஏழைகளை மீட்பதற்கும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களுடன், களத்தில் இறங்கியுள்ளன.

'சார்க்' அமைப்பில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில், 180 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, இந்த நாடுகளில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் துறை முழுமையாக முடங்கியுள்ளது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. தினக்கூலி தொழிலாளர்கள், ஏழைகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இது குறித்து உலக வங்கி கூறியதாவது:

கொரோனாவால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை, சார்க் நாடுகள் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏழைகள், மேலும் மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் தள்ளப்படுவர்.

இதைத் தடுக்க, சார்க் நாடுகள், நிவாரண திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, உலக வங்கி கூறியுள்ளது.

இதையடுத்து, நம் மத்திய அரசு, 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை மற்றும் நிவாரண திட்டங்களை அறிவித்தது.

ஏழை பெண்களின் வங்கி கணக்கில், தலா, 500 ரூபாய் டிபாசிட்; இலவச காஸ்; கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட கூலி உயர்வு; சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

வங்கிகளில் கடன் வாங்கியோர், மூன்று மாத தவணையை செலுத்த, தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டது. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதமும் குறைக்கப்பட்டது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும், 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை மற்றும் நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

தொழில் துறையினர் மற்றும் ஏழைகளுக்கு பல்வேறு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு, 7,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

வங்கதேசத்தில், பொருளாதாரத்தை ஊக்கவிக்க, 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

விவசாயம், சேவை, சமூக பாதுகாப்பு, தயாரிப்பு ஆகிய துறைகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளிலும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், ஏழைகளை வறுமையிலிருந்து மீட்பதற்காகவும், பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன.

'சார்க் நாடுகள் அறிவித்துள்ள இந்த திட்டங்களால், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் சரி செய்யப்பட்டனவா என்பது, அடுத்த சில மாதங்களில் தெரிய வரும்' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages