தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-10
தமிழ்நாட்டில் முதன்முதலில் உழவர் சந்தை துவக்கம்.
நமது நாட்டில் முதல் துறை, ஆதாரத்துறை,மிக முக்கிய பங்கு வகிப்பது வேளாண்மை.15 ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் பா.ம.க சார்பில் நிறைய வாதாடி வந்தோம்.எல்லாவற்றையும் இங்கே குறிப்பிட முடியாமல் சில மட்டுமே குறிப்பிடுகின்றேன்.பேச்சின் சுருக்கம்...
நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு,உடை, இருப்பிடம் எனும் மூன்றில் முதலாவது இருக்கின்ற உணவு வழங்குவது வேளாண்மையே.மனித சமூகம் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்துள்ள நிலையில் வேளாண்மையே முதன்மையாக கொண்டுள்ளது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவர்
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
என்று சுழன்று இயங்கும் உலகில் உழவுத் தொழிலுக்கு பின்னர் தான் அனைத்தும் என்றும் உழவர்களைப் பற்றி
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி சிறப்புக்குரிய உழவுத் தொழிலும் உழவர்களின் நிலையும் மிகக் கவலை அளிப்பதாகவே உள்ளது.
சமூக,பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படை விவசாயம். நமது முன்னோர்கள் மாடு கட்டி போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போர் அடித்த மண் தமிழ்நாடு.
மக்கள் தொகை பெருகி வருகிறது. விளை நிலத்தின் பரப்பு சுருங்கி வருகிறது.உணவுஉற்பத்தி குறைந்து வருகிறது.மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உற்பத்தி இல்லை.2001ல் 6,24,06,000 மக்கள் தொகை.2011ல்_7,21,47,030 மக்கள் தொகை. சாகுபடி நிலப்பரப்பு 27 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 21 இலட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.நிலமும் பாழ்பட்டுள்ளது.
நமது முன்னோர்கள் பெற்ற அனுபவத்தின் விளைவாக சொன்னது சீரைத் தேடின் ஏரைத் தேடு_அகல உழுவதை விட ஆழ உழு_பருவத்தே பயிர் செய்_உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கோல் கூட மிஞ்சாது என்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது.
அமைச்சர்: ஜி.கே.மணி அவர்களே, கடந்த கால விவசாயப் பெருமைகளைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள்.மகிழ்ச்சி. தற்போதைய நிலையில் என்ன சொல்ல வருகிறீர்கள்,சுருக்கமாகச் சொல்லுங்கள்.
ஜி.கே.மணி: அமைச்சர் அவர்களே, இப்படி பெருமைக்குரிய விவசாயம் தற்போது எவ்வாறு நலிவடைந்து வருகிறது என்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நமது புள்ளிவிவரங்களைப் பார்த்தால் 1990ல் உற்பத்தி குறைந்திருக்கிறது.2000ல் மோசமடைந்துள்ளது.
பசுமைப் புரட்சி,வெண்மைப் புரட்சி என சொல்லப்பட்டது.இன்றைய நிலை விவசாயிகள் கடனிலே பிறந்து,கடனிலே வாழ்ந்து,கடனிலே இறந்து,கடனே விட்டுப்போக பிறப்பெடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.
மொத்த மக்கள் தொகையில் 65% விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழிலையும் நம்பியுள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஆக உள்ளது.
விவசாயம் தட்பவெப்பநிலை, பண்பாடு,நீர் ஆதாரம், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இவை நிலத்தோற்றம்,மண் வளம்,நீர் வளம்,காலநிலை,விவசாயப்பணி செய்வோர் இவைகளைக் காரணிகளாகவே வைத்துள்ளது. அதிலும் செம்மண்,கரிசல் மண், வண்டல் மண்,களி மண் ஆகிய வகைகளில் பயிர் செய்யப்பட்டு, செயற்கை இரசாயன உரம், பூச்சிக்கொல்லி இவற்றினால் மண்ணின் தன்மை மாறி மலட்டுத்தன்மையாகியுள்ளது.
நான் சுருக்கமாக சொல்கிறேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் விவசாயத்தை விட்டே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை.விவசாயிகள் நாங்கள் வாழ்வதா? சாவதா? என்று கேட்கின்றனர்.
விவசாய உற்பத்தி எடுத்த எடுப்பிலேயே வந்துவிடுவதில்லை. முதலில் நிலத்தை உழுதல், சமன்செய்தல்,நாற்று விடுதல், நடுதல்,எரு இடுதல்,தண்ணீர் பாய்ச்சுதல்,களை எடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல், விற்பனை செய்தல்_இப்படி கஷ்டப்பட்டு இறுதியில் கணக்கு பார்த்தால் நட்டமே.இந்நிலையில் எத்தனை ஆண்டு காலம் விவசாயிகள் இப்படி நீடித்து வாழ்வது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பெற வேண்டாமா? தமிழ்நாட்டில் நெல் அதிகளவு உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது ஆனால் சமீப காலமாக ஆந்திரா,கர்நாடக, மகாராட்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து நெல் விலைக்கு வாங்கி கொண்டிருக்கின்றோம். தமிழகத்தின் நெல் உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தி குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறேன்.
அரசு விவசாயத்திற்கு தொழில் துறை அந்தஸ்து கொடுக்க வேண்டும்.
அதிக முக்கியத்துவம் வேண்டும்.
இதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பா.ம.க சார்பில் தொடர்ந்து ஆண்டுதோறும் முன்மாதிரியான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை(SHADOW BUDGET FOR AGRICULTURE)வெளியிட்டு வருகின்றோம்.அதைப் போல தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கை (AGRICULTURE BUDGET)வெளியிட வேண்டும்.அதில் வேளாண் வளர்ச்சி, விவசாயிகளின் நலன் உள்ளிட்ட எல்லாம் அடங்கும்.
உதாரணத்திற்கு ஒன்று,விவசாயி உற்பத்தி செய்த நெல் விலை குறைவு.அதையே கடையில் வாங்கும்போது அரிசி விலை இரண்டு மடங்கு.ஆக உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.அரிசி பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதலான விலை.இது முரண்பாடு இல்லையா? களையப்பட வேண்டாமா?
நாட்டில் குண்டூசி,சோப்பு,சீப்பு, கண்ணாடி என எந்தப் பொருள் உற்பத்தி செய்தாலும் உற்பத்தி செய்கின்றவனே விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உள்ளது. கடையில் 'ஹமாம் சோப்பு'ஒன்று கொடுங்கள்,விலை எவ்வளவு என்று கேட்டால் அதிலே போட்டிருக்கிறதே பாருங்கள் என்கிறார் கடைக்காரர்.
ஆனால் விவசாயி உற்பத்தி செய்யும் எந்த பொருளுக்கும் விலை நிர்ணயம் இல்லை. சில நேரத்தில் லாபம் கிடைக்கும்.சில நேரத்தில் பெரிய நட்டம் ஏற்படும்.
உதாரணத்திற்கு விவசாயி கஷ்டப்பட்டு உழைத்து அதிக விலைக்கு உரம்,பூச்சி மருந்து வாங்கி பயன்படுத்தி,வறட்சி அல்லது மழைச் சேதத்தையும் சந்தித்து தக்காளி உற்பத்தி செய்து விற்பனைக்கு எடுத்துச் சென்றால் சில நேரத்தில் கூடை ரூ40,ரூ 50, சிலநேரம் ரூ100,சில நேரம்10, ரூ 5 அல்லது கீழே கொட்டிவிட்டு வரும் நிலை.இது சரியான நிலைப்பாடா?
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி அவர்களே,நிறைய செய்திகளை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அரசு என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை முறையை கொண்டு வாருங்கள்.நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன் விவசாய சங்கத்தினர்,விவசாயிகள்,வேளாண் விஞ்ஞானிகள் ஆகியோரை அழைத்து ஆலோசித்து ஆண்டு வளர்ச்சி, தேவையைக் கொண்டு நிதி ஒதுக்குங்கள்.வேளாண்மை துறை முதல் துறை,ஆதாரத்துறை, முக்கியமான துறை. இதை வேளாண் துறை,வேளாண் விற்பனைத்துறை, தோட்டக் கலைத் துறை என மூன்றாகப் பிரித்து மூன்று அமைச்சர்களை, அமைச்சகங்களை உருவாக்குங்கள்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் எனது நண்பர் நாகப்பா வேளாண் விற்பனை துறை (AGRICULTURAL MARKETING DEPARTMENT)அமைச்சராக உள்ளார். அவரை சந்தித்து பலமுறை பேசியுள்ளேன்.சிறப்பாக செயல்படுவதாக சொல்கின்றார். மற்ற மாநிலங்களிலும் விற்பனைத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகச் சொல்கின்றார்.
முதலமைச்சர் அவர்கள்: மணி அவர்களே,எங்கே எப்படிப்பட்ட நடைமுறை உள்ளது.கூறுங்களேன்.
ஜி.கே.மணி: முதலமைச்சர் அவர்களே,கர்நாடகாவில் ஒவ்வொரு வட்ட(தாலுக்கா)அளவிலும் விற்பனை மையங்கள் உள்ளது. பெரிய,பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டு,நெல்,ராகி, மக்காச்சோளம்,வெங்காயம் உள்ளிட்ட விவசாய உற்பத்தியை அங்கே கொண்டுவந்து அதிகாரிகள் முன்னிலையில் வெளியூர், வெளி மாநில வியாபாரிகள் வந்து ஏலம் கூறியும் சில நேரம் விலை நிர்ணயம் செய்தும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் மேலும் கூடுதல் விலைக்கு விற்க விரும்பினால் அங்கே உள்ள கிடங்கில் அடுக்கி இருப்பு வைத்துவிட்டு அன்றைய விலை நிலவரத்தில் பாதி(50%)தொகை அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளலாம். மீதியை தேவையான பொழுது விற்பனை செய்துவிட்டு கிடங்கு பொறுப்பு அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளலாம்.என்று மேலும் விளக்கிக்கூறினேன்.இதற்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்கிறேன்.விரிவாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்கின்றேன்.தற்போது நீங்களும் இடம்பெறுகின்ற அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், தமிழ்நாடு வர்த்தக சங்க தலைவர் மதுரை இரத்தினவேலு ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்றை நியமிக்கிறேன்.அந்தக் குழுவை அழைத்துக்கொண்டு முதலில் கர்நாடக அமைச்சரை சந்தித்து அங்குள்ள நடைமுறையை பார்வையிடுங்கள்.மற்ற மாநிலங்களுக்கு சென்று நடை முறையை அறிந்து வாருங்கள்.
(குழு நியமிக்கப்பட்டது )
முதலில் குழு கர்நாடகா சென்று அமைச்சர் நாகப்பாவையும் முதலமைச்சரையும் சந்தித்துப் பேசிவிட்டு அமைச்சருடன்,அங்குள்ள துறை அதிகாரிகளுடன் சென்று சில இடங்களை பார்வையிட்டு அவர்கள் செயல்பட்ட முறையை அறிந்து கொண்டோம்.
அடுத்து ஆந்திரா,மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்,பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களுக்குச் சென்று முதலமைச்சர்,துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு முழு விவரங்களையும் அறிந்து கொண்டு சண்டிகரிலிருந்து நானும் இரத்தினவேலுவும் முதலமைச்சரிடம் விவரங்களை சொன்னோம்.தமிழ்நாடு திரும்பி வந்தோம்.
சென்னை விமான நிலையத்திற்கு இரவு 9:30 மணிக்கு குழு வந்தடைந்தது, அங்கிருந்து முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். சென்று வந்த விவரங்களை சுருக்கமாக கூறினேன். மணி நீங்களும் குழுவினரும் தலைமைச் செயலகத்திற்கு முழு விவர அறிக்கையுடன் வாருங்கள் என்று கூறிவிட்டு, மணி அங்கே செயல்படும் நிர்வாக அமைப்புக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் என்று கேட்டார். பெயர்களைச் சொன்னேன்.அந்தப் பெயர்களை சுருக்கமாக,விவரமாக சொல்லுங்கள் என்று கேட்டார்.உடனே அது "ரைத்தர் பஜார்" என்று கூறினேன்.அதற்கு தமிழில் என்ன பொருள் என்று கேட்டார்."ரைத்தர் என்றால் விவசாயிகள் " "பஜார் என்றால் விற்பனை மையம்". விற்பனை வளாகம்,ஆங்கிலத்தில் மார்க்கெட் என்று கூறினேன்.
காலையில் வீட்டில் தினத்தந்தி செய்தித்தாள் படித்தேன்.முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி தமிழ்நாட்டில் 100 இடங்களில் "உழவர் சந்தை" துவக்கப்படும்.முதல் உழவர் சந்தை மதுரை அண்ணா நகரில் தொடங்குவதாக முதலமைச்சர் அறிவிப்பு என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அடுத்து முதலமைச்சர் அவர்களை சந்தித்து முழு விவரங்களையும் தெரிவித்தேன். செய்தித்தாளில் செய்தி வந்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.உழவர் சந்தை எந்த அடிப்படையில் எவ்வாறு செயல்படும் என்று கேட்டேன்.அதன் முழு விவரங்களை தெரிவிக்கிறேன் என்றார்.
இவ்வாறு தமிழ்நாட்டில் முதல் "உழவர் சந்தை" மதுரை அண்ணா நகரில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 14.11.1999 அன்று துவங்கப்பட்டது.
நாளை அடுத்த நிகழ்வுகள் குறித்து தொடரும்... பகுதி-11
No comments:
Post a Comment