இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கவர்ந்தது. - Agnipuratchi

இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கவர்ந்தது.

Share This

இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கவர்ந்தது.

4. கணிதமேதை இராமானுஜன்!

பாரதியாரில் தொடங்கி புதுமைப்பித்தன் வரை இந்த தொடரில் இடம்பெற்ற அனைவருக்கும் பொதுவான அம்சம் அவர்கள் அனைவருமே தாங்கள் சார்ந்த துறையில் இளம் வயதில் சாதனை படைத்து, மிகக் குறைந்த வயதில் இறந்தவர்கள் என்பது தான். அதைத் தாண்டி அவர்கள் அனைவரையும் இணைக்கும் இன்னொரு விஷயமும் உண்டு. அவர்கள் அனைவருமே மிகவும் வறுமையில் வாடியவர்கள்; நோயால் பாதிக்கப்பட்டு தரமான மருத்துவம் கூட எடுத்துக் கொள்ள முடியாமல்  உயிரிழந்தவர்கள் ஆவர்.

அவர்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் சாதனையாளருக்கும் உண்டு. அவர் தான் கணிதமேதை இராமானுஜன் ஆவார். ஆம்... இராமானுஜன்  உலகம் வியந்த கணித மேதை. ஆனால், மிக மோசமான வறுமையிலும், கொடிய நோயிலும்  வாடியவர்.

இராமானுஜனின் சொந்த ஊர் கும்பகோணம். அவரது தந்தை சீனிவாசன். சீனிவாசனும், அவரது தந்தையும் கும்பகோணத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றினார்கள். இராமானுஜனின் தாய் கோமளம். ஈரோட்டைச் சேர்ந்தவர். தாயார் கோமளத்தின் தந்தை ஈரோட்டில் உள்ள நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றியவர். இராமானுஜன் 1887-ஆம் ஆண்டு திசம்பர் 22-ஆம் நாள் ஈரோட்டில் தாய் வீட்டில்  பிறந்தார். இராமானுஜன் பிறந்த சில ஆண்டுகளில், அதாவது 1891-ஆம் ஆண்டு அவரது தந்தையும், தாத்தாவும் பணியாற்றிய துணிக்கடை காஞ்சிபுரத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால் இராமானுஜனின் குடும்பமும் காஞ்சிபுரத்திற்கு மாறியது.

1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்கத் தொடங்கினார் இராமானுஜன். அடுத்த இரு ஆண்டுகளில் அவரது குடும்பம் மீண்டும் சொந்த ஊருக்கு மாறியதால், இராமானுஜத்தின் பள்ளியும் மாறியது.கும்பகோணத்தில் உள்ள கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்த அவர்,  1897 ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். பின்னர் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து முறையாக கணிதம் கற்கத்  தொடங்கிய இராமானுஜன், அப்போதே கணிதத்தில் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத் தொடங்கினார். ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அண்டை வீட்டு மாணவனின் கல்லூரி கணிதப் பாடங்களை மிகவும் எளிதாக  செய்து முடித்தார். இராமானுஜனின் திறமை அவரது ஆசிரியர்களுக்கே பெரும் புதிராக இருந்தது.

1903-ஆம் ஆண்டில் இராமானுஜன் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிக் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து உயர்கல்விக்காக கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், எந்தக் கணிதப் பாடம் அவரை உலகப் புகழ் பெறச் செய்ததோ, அதே கணிதப் பாடம் தான் அவரை பிற பாடங்களை படிக்கவிடாமல் தடுத்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் அவர் கணித ஆய்வுக்காகவே செலவழித்தார். அதனால் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, வடமொழி ஆகிய பாடங்களை அவரால் படிக்க முடியவில்லை. இந்த பாடங்கள் அனைத்திலும் தோல்வி அடைந்ததால் முன்பட்டப் படிப்பை இராமானுஜத்தால் முடிக்க முடியவில்லை. அதனால் அவருக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இராமானுஜன் ஆந்திராவுக்கு சென்று அங்கு சுற்றித் திரிந்தார். மீண்டும் கும்பகோணம் திரும்பி கல்லூரித் தேர்வை எழுத முயன்ற போது  அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் கல்லூரியிலிருந்து விலகி சென்னை பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கணிதப் பேராசிரியர் எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரின் அறிமுகம் கிடைத்தது.  எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். அவர் இராமானுஜத்தின் கணிதத் திறமைகளை அறிந்து, அவரை மாணவராக பார்க்காமல், ஆராய்ச்சித் துணையாக கருதி ஆய்வுகளில் சேர்த்துக் கொண்டார். அவரது வழிகாட்டுதலில் ஏராளமான கணித கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றை தமது குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்திருந்தார் இராமானுஜன். ஆனாலும் அவரது வாழ்வில் விதி மீண்டும் விளையாடியது. கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இராமானுஜன், கல்லூரித் தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்தார்.

ஒரு கட்டத்தில் கல்வி முயற்சியை முடித்துக் கொண்டு கும்பகோணம் திரும்பிய இராமானுஜன், 1909-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், பல்வேறு இடங்களில் பணியாற்றி 1912-ஆம் ஆண்டில் சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார். அது தான் அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அங்கு அவரது உயரதிகாரியாக பணியாற்றிய ஆங்கிலேய பொறியாளர் சர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங், அவரது மேலாளர் வி. ராமசுவாமி ஐயர் ஆகிய இருவரும் ராமானுஜனின்  கணிதத் திறமையைப் பார்த்து வியந்தனர். அவர்களில் இராமசுவாமி ஐயர் இந்திய கணிதக் குழுவை (Indian Mathematical Society)  அமைத்தவர். அவர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள கணித வல்லுனர்களுடன் தொடர்பு இருந்ததால், இராமானுஜத்தை இங்கிலாந்து அனுப்பி கணித ஆராய்ச்சியில் ஈடுபட வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி இங்கிலாந்தில் உள்ள 3 கணித வல்லுனர்களுக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். அத்துடன் அவர்கள் பார்வைக்காக கணிதத் துறையில் ஆராய்ச்சி செய்து இராமானுஜன் நிகழ்த்திய கண்டுபிடிப்புகளையும் அவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களில் ஜி.எஸ். ஹார்டி என்பவர் மட்டுமே இராமானுஜத்தை ஏற்றுக் கொள்ளவும், தமது கணித ஆராய்ச்சியில் சேர்த்துக் கொள்ளவும் முன்வந்தார். மற்ற இருவர்களிடமிருந்தும் எந்த பதிலும் இல்லை. உண்மையில் ஹார்டியுடன் இணைந்து கணித ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பும் இராமானுஜனிடமிருந்து கை நழுவி போக இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் அதிசயம் நிகழ்ந்ததால் இராமானுஜனுக்கு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில்  1913 ஜனவரி 16 ஆம் தேதி கிடைத்தது.அதை மேலோட்டமாகப் பார்த்த ஹார்டி , ஏதோ ஒரு பைத்தியம் கிறுக்கி அனுப்பியிருப்பதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார். பின்னர் இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய நண்பரான ஜான் லிட்டில்வுட்டும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித சூத்திரங்களையும், கணித தேரங்களையும் ஆழ்ந்து படித்தார்கள்.  சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். தாங்கள் படிப்பது  ஒரு பைத்தியகாரனின் கிறுக்கல் அல்ல; ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள் என்பது தான் அவர்களின் உறுதியாக முடிவாகும்.

உடனடியாக, இராமானுஜனை இங்கிலாந்துக்கு வரும்படி ஹார்டி அழைத்தார். அதன்படி 1914-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றார் அவர். அங்கு பல்வேறு அமைப்புகள் அவருக்கு கல்வி உதவித் தொகை வழங்கின. அங்கு சிறப்பாக படித்த இராமானுஜன், 1917 ஆம் ஆண்டில் தி இராயல் ஃபெல்லோஷிப் விருதையும், டிரினிடி கல்லூரியின்  ஃபெல்லோஷிப்  விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் இராமானுஜன் ஒருவரே! 

இராமானுஜன் கண்டுபிடித்த கணிதப் படைப்புகளை இதுபோன்ற கட்டுரைகளில் விளக்குவது சாத்தியமல்ல; அதை புரிந்து கொள்ளவும் முடியாது. முந்தையக் கட்டுரைகளில் பாரதியாரின் கவிதைகள், பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், புதுமைப்பித்தனின் கதைகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டியது போன்று இராமானுஜனின் கணிதப் படைப்புகளை இங்கு விளக்க முடியாது. ஆனால், இங்கிலாந்தில் இராமானுஜன் புகழ் பெறுவதற்கு காரணமான ஹார்டி, இராமானுஜன் பற்றி கூறிய கருத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்...

‘‘இராமானுஜனின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, எனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின்  தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் என் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயங்கள். இராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை. அவரது கணித மெய்ப்பாடுகள் என்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டன. அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கியிருக்க முடியாது’’ என்று ஹார்டி பதிவு செய்திருக்கிறார். இராமானுஜனின் திறமைக்கு இதை விட பெரிய சான்று எதுவும் தேவையில்லை.

ஆனால், இராமானுஜனின் சாதனைகளுக்கு அவரது உடல்நிலை பெரும் தடையாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் குளிர்ச்சியான சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, இங்கிலாந்து  உணவு முறை அவருக்கு ஒத்து வராததால் எப்போதாவது கிடைக்கும் இந்திய காய்கறி உணவை மட்டும் சாப்பிட்டு வந்ததால் அவரது உடல் பலவீனமடைந்தது. அவருக்கு கடுமையான காசநோய் ஏற்பட்டது. அந்த நோய்க்கு அப்போது இங்கிலாந்தில் கூட மருந்து இல்லை. ஒரு கட்டத்தில் நோய் முற்றிய நிலையில், 1919-ஆம் ஆண்டு இராமானுஜன் தாயகம் திரும்பினார். அடுத்த சில மாதங்களில் அதாவது 1920 ஏப்ரல் 26-ஆம் நாள் தமது 32-ஆவது வயதில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள இல்லத்தில் காலமானார்.

அவர் மாணவனாக இருந்த காலத்தில் குறிப்பேட்டில் எழுதி வைத்த பழைய கணித படைப்புகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்றைய கணினித் தொழில்நுட்பத்திற்கு பின்புலமாக இருப்பது இராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் தான்.

32 வயதில் உயிர்நீத்த இராமானுஜன் 60 வயதைக் கடந்தும் வாழ்ந்திருந்தால் ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பார். அது இந்தியாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு அப்பால் முன்னேற்றியிருக்கும். கிடைத்த சில தருணங்களில் உலகமே வியக்கும் வகையில் கணிதக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இராமானுஜன் தமிழகத்தின் தனிப்பெருமை  என்றால் அது மிகையில்லை.

நாளை....

மாவீரன் அலெக்ஸாண்டர்!
அத்துடன் இத்தொடர் நிறைவு பெறும்!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages