இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது - Agnipuratchi

இவர்கள் 60 வயதைக் கடந்து வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது

Share This

இவர்கள் 60 வயதைக் கடந்து  வாழ்ந்து இருந்தால்....? - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை கவர்ந்தது

5. மாவீரன் அலெக்சாண்டர்!

விளையும் பயிர் முளையிலே தெரியும்....
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் உண்டு...
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு....

இத்தனை பழமொழிகளுக்கும் ஒற்றை உதாரணம் கூற வேண்டுமென்றால்.... மாவீரன் அலெக்சாண்டர்  என்று தான் கூற வேண்டும்.

ஆம.... நமது ‘‘ இவர்கள் 60 வயதை கடந்து வாழ்ந்து இருந்தால்?’’ தொடரின் கதாநாயகர்களுக்கான இலக்கணங்களைப் போலவே மாவீரன் அலெக்சாண்டரும் இளம் வயதிலேயே சாதனைகளை படைத்து உயிர் துறந்தவர். ஒரே வித்தியாசம்.... நமது தொடரின் நாயகர்கள் எல்லாம் வறுமையில் வாடியவர்கள்... இவர் அரச குடும்பத்தில் பிறந்தவர் என்பது தான்.

கிரேக்க நாட்டில் உள்ள மாசிடோனியா நாட்டின் மன்னர் இரண்டாம் பிலிப்புக்கும் அவரது நான்காவது மனைவி ஒலிம்பியாசுக்கும் கி.மு. 356 ஆவது ஆண்டு, அதாவது 2376 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் அலெக்சாண்டர். அவரது எட்டாவது வயது வரை தாயார் ஒலிம்பியாசிடம் வளர்ந்தார். மற்ற தாயார்களைப் போல ஒலிம்பியாஸ் அவரது மகனை செல்லம் கொடுத்து வளர்க்கவில்லை. மாறாக, வீரத்தையும், துணிச்சலையும், ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அதையும், ஏமாற்றத்தையும் தாங்குவதற்கான மனநிலையை ஊட்டி வளர்த்தாள். எட்டாவது வயதுக்குப் பிறகு அலெக்சாண்டர் அவரது தாயாரின் உறவினாரான லியோனிதஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அலெக்சாண்டருக்கு கல்வி, போர்க்கலைகளை கற்றுக் கொடுத்தார். விளையும் பயிர் முளையிலே  தெரியும் என்பதற்கு அடையாளமாக மாவீரன் அலெக்சாண்டர் அவரது  வீரம், திறமை ஆகியவற்றை  வெளிப்படுத்த அவரது பத்தாவது வயதில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அலெக்சாண்டர் குதிரையை அடக்கிய கதையைப் பார்ப்போம்...

அலெக்சாண்டருக்கு 10 வயது நடந்து கொண்டிருந்த போது தெசாலி என்ற ஊரைச் சேர்ந்த வணிகர் ஒருவர் கம்பீரமான குதிரை ஒன்றை விற்பனைக்காக கொண்டு வந்தார். நமது ஊரில் காளைகளுக்கு காங்கேயம் எவ்வாறு பெயர் பெற்றதோ, அதேபோல் மாசிடோனியாவில் தெசாலி என்ற ஊர் குதிரைகளுக்கு பெயர் பெற்றது ஆகும். அந்தக் குதிரையின் கம்பீரத்தில் மயங்கிய மன்னர் பிலிப்  அதை என்ன விலை கொடுத்தாவது வாங்க வேண்டும் என்று நினைத்தார். குதிரை வணிகரோ 13 எடை( அந்த நாட்டின் நாணய மதிப்பு) கொடுத்தால் குதிரையை கொடுத்து விடுவதாக கூறினார். குதிரையும் மன்னரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. குதிரையை ஓட்டி சோதித்துப் பார்க்கும்படி தமது வீரர்களுக்கு பிலிப் கட்டளையிட்டார். ஆனால், எவராலும் குதிரை மீது ஏற முடியவில்லை. தம் மீது ஏற வந்தவர்களையெல்லாம் உதறியும், உதைத்தும் தள்ளியது குதிரை. அதனால் ஏமாற்றமடைந்த  மன்னர் பிலிப் அந்த குதிரையை அங்கிருந்து அழைத்துச் செல்லும்படி வணிகருக்கு ஆணையிட்டார். அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அலெக்சாண்டர், அந்தக் குதிரையை தாம் அடக்குவதாகக் கூறினார். அதை ஏற்க பிலிப்புக்கு மனம் இல்லை. தமது மகனால் குதிரையை அடக்க முடியாது; அது தமது மகனை காயப்படுத்தி விடும் என்று நினைத்தார்; அதனால் மகன் அலெக்சாண்டரை தடுத்தார்.

ஆனால், குதிரையை அடக்குவதில் உறுதியாக இருந்தார் அலெக்சாண்டர். குதிரையை மற்றவர்கள் அடக்க முயன்று தோற்ற போது நடந்தவற்றை எல்லாம் பார்த்த அலெக்சாண்டர் அதிலிருந்து ஓர் விஷயத்தை கற்றுக் கொண்டிருந்தார். அதாவது மன்னருக்கு முன் சூரிய ஒளி படும் திசையில் குதிரை நிறுத்தப்பட்டிருந்ததால், தரையில் அதன் நிழல் மிகவும் பிரமாண்டமாக படர்ந்திருந்தது. அதைப் பார்த்த பயத்தில் தான் அந்தக் குதிரை முரட்டுத்தனமாக நடந்து கொண்டது. அதை உணர்ந்திருந்த அலெக்சாண்டர், குதிரையை நிழல் வராதபடி எதிர்திசையில் நிறுத்தச் செய்தார். பின்னர் அருகில் சென்று குதிரையை தட்டிக் கொடுத்தார். குதிரையும் அந்த சிறுவனைப் பார்த்து புன்னகைத்தது. சிறிது தூரம் குதிரையை நடத்தி அழைத்துச் சென்ற அலெக்சாண்டர், அதன் பின் அந்த குதிரை மீது  இலாவகமாக ஏறி அமர்ந்து சவாரி செய்தார். அப்போது அலெக்சாண்டர் சொன்னதையெல்லாம் அந்த குதிரை செய்தது. அதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னர் பிலிப் அந்த குதிரையை வாங்கி, மகனுக்கு பரிசளித்தார். அப்போது மகனைக் கட்டிப் பிடித்து, முத்தமிட்டு பாராட்டிய பிலிப்,  ‘‘மகனே... மாசிடோனியா உனக்கு மிகச்சிறிய நாடு. உனது லட்சியத்திற்கு ஏற்றவாறு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நீ உருவாக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அன்று தந்தை கூறிய வார்த்தைகளை தாம் மன்னரானவுடன் நிரூபித்துக் காட்டியவர் தான் மாவீரன் அலெக்சாண்டர்.

தம்மால் அடக்கப்பட்ட குதிரைக்கு ப்யூசிபாலஸ் என்று அலெக்சாண்டர் பெயரிட்டார். அதன்பின் அலெக்சாண்டர் மன்னராகி நடத்திய அனைத்துப் போர்களிலும் அது தான் அவரை சுமந்து சென்றது.  இந்தியப் படையெடுப்பின்போது ஏற்பட்ட பின்னடைவால் அலெக்சாண்டரின் படைகள் கலகலத்து போயிருந்த நேரத்தில்  ப்யூசிபாலஸ் குதிரை அதன் 30&ஆவது வயதில் இறந்து போனது. அந்தக் குதிரையை பெருமைப்படுத்தும் வகையில், அதற்கு சில நாட்கள் முன்பு தாம் வென்ற நகருக்கு ப்யூசிபாலா என்று அலெக்சாண்டர் பெயரிட்டார். அந்த நகரம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. குதிரை இறந்த சில ஆண்டுகளில் அலெக்சாண்டரும் இறந்து விட்டார் என்பது தான் சோகம்.

குதிரையை அலெக்சாண்டர் அடக்கியதுமே மகனுக்கு மன்னர் ஆவதற்கான பயிற்சிகளை வழங்க பிலிப் முடிவு செய்தார்.  அதற்கான தகுதிகளை பெற வேண்டும் என்பதற்காக அலெக்சாண்டரை கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் மாணவனாக சேர்த்தார் பிலிப். அரிஸ்டாட்டிலிடம் தான் அறிவியல், அரசியல், தத்துவம், தர்க்கவியல், மருத்துவம் போன்ற பல்வேறு பாடங்களை அலெக்சாண்டர் கற்றுத் தேர்ந்தார். அரிஸ்டாட்டிலின் மாணவர் என்பதில் பெருமை அடைந்த அலெக்சாண்டர், தாம் மன்னராக பதவியேற்ற பின்னர் அனைத்து முக்கியப் பதவிகளிலும் அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் தம்முடன் பயின்ற நண்பர்களையே அமர்த்தினார்.

தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் 16 வயதில் கல்வியை முடித்த அலெக்சாண்டர் தமது தந்தையுடன் இணைந்தார். அப்போது மகனை தமது நாட்டின் தற்காலிக அரசராக நியமித்து விட்டு, பைசாண்டின் நாடு மீது போர்த்தொடுக்கச் சென்றார் பிலிப். அந்த நேரத்தில் மாசிடோனியாவுக்கு எதிராக தராசியன் மேடி என்ற நாடு புரட்சி செய்தது. அவர்களை விரட்டியடித்த அலெக்சாண்டர் அவர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை இணைத்து அலெக்சாண்ட்ரா போலிஸ் என்ற நகரத்தை உருவாக்கினார். அதற்குள் பைசாண்டின் நாட்டை வென்று திரும்பிய பிலிப், அலெக்சாண்டருக்கு தனிப்படை அமைத்துக் கொடுத்து தங்களின் ஆளுகைக்குள் இருந்து கொண்டு தங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நாடுகளை அடக்கும்படி ஆணையிட்டார். அதை அலெக்சாண்டர் செய்து முடித்தார். பின்னர் தந்தையும், மகனும் இணைந்து போர்த் தொடுத்து ஏராளமான பகுதிகளை வென்றார்கள். ஒரு போரில்  தமது தந்தையின் உயிரை அலெக்சாண்டர் காப்பாற்றினார்.

போர் வெற்றிக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறுகிறது. சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிலிப், தமது தளபதி அட்டாலசின் உறவுக்கார பெண்ணான கிளியோபாட்ராவின் ( இவள் உலகப் பேரழகி கிளியோபாட்ரா அல்ல) அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு பிறக்கும் மகனை அரசனாக்கவும் நினைக்கிறார். அதற்காக எந்த மகன் அலெக்சாண்டர் உலகை ஆள வேண்டும் என்று நினைத்தாரோ, அந்த மகனை மட்டம் தட்டத் தொடங்கிறார். பிலிப்புக்கும், அலெக்சாண்டருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. அலெக்சாண்டர் தமது தாயார் ஒலிம்பியாசுடன் தப்பிச் செல்கிறார். படைகளை திரட்டி தமது நாட்டை மீட்க நினைக்கிறார். அதற்குள் இரு தரப்புக்கும் இடையே சமரசம்  ஏற்படுகிறது. ஆனால், அலெக்சாண்டரை மன்னனாக்க தந்தை விரும்பவில்லை. கி.மு. 337-ஆம் ஆண்டு அலெக்சாண்டரின் தங்கை கிளியோபாட்ராவுக்கும் (இவர் வேறு கிளியோபாட்ரா) அவரது மாமாவுக்கும் திருமணம் நடக்கும் நாளில் பிலிப் கொல்லப்படுகிறார். அலெக்சாண்டர் மன்னராக முடி சூடிக் கொள்கிறார். அப்போது அவருக்கு வயது 20.

பிலிப் கொல்லப்பட்ட செய்தி பரவியதும் அவரது ஆளுகைக்குள் இருந்த சிறிய நாடுகள் புரட்சி செய்யத் தொடங்கின. அவற்றை அதிரடியாக ஒடுக்கிய அலெக்சாண்டர், மன்னன் பதவிக்கு தமக்கு போட்டியாக இருந்த அரச குடும்பத்தினரையும் கொன்று குவித்தார். 20 வயதில் தொடங்கிய அவரது  படையெடுப்பு பண்டைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை வெல்லும் வரை நீடித்தது.

கிரேக்கப்பகுதியில் தமக்கு எதிராக இருந்த அனைத்து நாடுகளையும் வீழ்த்திய அலெக்சாண்டருக்கு,  இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதற்கான படையெடுத்து வந்த அலெக்சாண்டர், லிவண்ட், சிரியா, எகிப்து, காஜா, மெசபடோமியா (ஈராக்), பாபிலோன், ஆப்கானிஸ்தான், கஜிகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினார். அங்கிருந்து சிந்து நதியைக் கடந்து பாகிஸ்தானில் இப்போதுள்ள பஞ்சாப் நாட்டின் மீது அலெக்சாண்டர் படையெடுத்தார். அதுவரை  அலெக்சாண்டர் போரிட்ட எந்த நாட்டிலும் அவருக்கு பெரிய சவால்கள் இல்லை.

ஆனால், பஞ்சாபை ஆண்ட போரஸ் என்கிற புருசோத்தமனின் படைகள் அலெக்சாண்டரின் படைகளை  எதிர்த்து கடுமையாக போரிட்டன. அதுவரை யானைப்படையை பார்க்காத அலெக்சாண்டருக்கு புருசோத்தமனின் யானைப்படையை பார்த்ததும் அச்சம் வந்தது. பஞ்சாப் நாட்டிற்குள் வெகுதூரம் முன்னேறி வந்திருந்த போதிலும், தோல்வியடைந்தால் மானக்கேடு ஆகிவிடும் என்று அஞ்சிய அலெக்சாண்டர், புருஷோத்தமனுடன் சமரசம் செய்து கொண்டார். அதுமட்டுமின்றி பஞ்சாப் நாட்டை மட்டுமின்றி, அந்தப் பகுதியில் தாம் வென்ற மேலும் பல நாடுகளையும் புருசோத்தமனிடம் ஒப்படைத்தார்.

அதன்பின்னும் போர்வெறி தணியாத அலெக்சாண்டர் கங்கையை கடந்து வந்து இப்போதுள்ள இந்திய  பகுதிகள் மீது போர்த் தொடுக்க நினைத்தார். ஆனால், அதற்கு அவரது படைகள் தயாராக இல்லை. முதலில் இந்திய மன்னர்களிடம் மிகப்பெரிய அளவில் யானைப்படைகள் இருப்பதாக அவர்களுக்கு கிடைத்த தகவல் அச்சத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, கங்கை ஆற்றைக் கடக்கும் போது பல்லாயிரக்கணக்கான படையினரை பலி கொடுக்க வேண்டும் என்று அஞ்சினர். அதுமட்டுமின்றி, மாசிடோனிய படைவீரர்கள் அவர்களின் பெற்றோரையும், மனைவியரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் தங்கள் வாழ்வில் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக செலவிட அனுமதிக்க வேண்டுமென்றும் விரும்பினார்கள். இதை அலெக்சாண்டரிடம் அவரது தளபதி எடுத்துக் கூறியதும், நிலைமை உணர்ந்து கொண்ட அவர், கங்கைக்கு அப்பால் இந்தியா மீது போர் தொடுக்கும் திட்டத்தை கைவிட்டு மாசிடோனியாவுக்கு திரும்ப ஆயத்தம் ஆனார்.

மாசிடோனியா திரும்பும் வழியில் பாலைவனப் பயணத்தின் போது தமது படையினரில் பெரும்பகுதியை இழந்தார். பஞ்சாப் நாட்டின் மீது போர் தொடுக்கும் போதே தமது குதிரை ப்யூசிபாலஸ் இறந்து விட்டது. அப்போது தான் பஞ்சாபில் குதிரையின் பெயரில் ப்யூசிபாலா என்ற நகரை நிர்மாணித்தார். சொந்த நாட்டை நெருங்குகையில் தமது நண்பனும், நம்பிக்கைக்குரிய தளபதியுமான ஹெபஷெஷன்  உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மாசிடோனியா திரும்பியதும் தமது நாடு இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போரில் வென்ற நாடுகளில் இருந்து கைப்பற்றிய பொருட்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி மக்களை வளமாக வாழ வைக்கும்படி அலெக்சாண்டர் கூறியிருந்தார். ஆனால், யாரிடம் அவர் ஆட்சிப் பொறுப்பை நம்பி வழங்கினாரோ, அவர்கள் அலெக்சாண்டருக்கு துரோகம் செய்தார்.

மாசிடோனியா திரும்பி சில காலம் ஓய்வெடுத்த அலெக்சாண்டர் அடுத்த போருக்கு தயார் ஆனார். அதற்காக தமது மற்றொரு தளபதி நெர்ச்சோசை கவுரவிக்கும் வகையில் விருந்து அளித்தார். அந்த விருந்தின் போது மது அருந்திய அலெக்சாண்டர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். 14 நாட்கள் பேசக் கூட முடியாமல் அவதிப்பட்ட அலெக்சாண்டர் கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி தமது 32-ஆவது வயதில் காலமானார். அவர் அருந்திய மதுவில் விஷம் கலக்கப்பட்டிருந்ததால் தான் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

மன்னராக ஒருந்த போதிலும் போர் புரிவதில் தான் கவனம் செலுத்தினாரே தவிர, அரச சுகங்களை அவ்வளவாக அனுபவிக்கவில்லை. மன்னர்களுக்கே உரிய பழக்கமான அதிக பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் வழக்கம் அலெக்சாண்டருக்கு இருந்ததாக கூறுவோரும் உண்டு; இல்லை என்போரும்  உண்டு. அந்த சர்ச்சை நமக்கு தேவையில்லை. தாயால் வீரனாக உருவாக்கப்பட்ட அலெக்சாண்டர் கடைசி வரை யாராலும் வீழ்த்த முடியாத வீரனாக திகழ்ந்தார். அவர் மட்டும் நினைத்தவாறு இரண்டாம் கட்ட போரை தொடங்கி, 60 ஆண்டுகளுக்குப் பிறகும் வாழ்ந்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் அவரது குடையின் கீழ் வந்திருக்கலாம். அலெக்சாண்டர் அவரது பெயருக்கு ஏற்றவாறு ஒரு மாவீரன் தான்.

நிறைந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages