தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-7 - Agnipuratchi

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-7

Share This

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-7 
     
குடிநீர் பிரச்சினை குறித்து நீண்ட கால விவாதம்.நிறைவேற்றப்பட்ட திட்டங்களுள் சிலமட்டுமே - அன்றைய முதலமைச்சர் அவர்களுடன் வாதலும்,பதிலும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் சுருக்கமும்:
      
மனிதன் உயிர் வாழ்வதற்கும் விலங்குகள்,பறவைகள்,தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் உயிர்வாழ மிக முக்கியம் தண்ணீர்.
"நீரின்றி அமையாது உலகு"என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் குறிப்பிட்டது எவ்வளவு உண்மை என புலப்படும்.பூமியின் மொத்த நீரில் 97.5% கடல் நீர்.வெறும் 2.5% மட்டுமே குடி தண்ணீர்.  
  
மனிதனுக்கு குடிநீரில் தான் அதிகமான நோய் உண்டாகிறதென மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 40லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வேண்டு மென்பதே தற்போதைய நியதி மட்டுமல்ல,நீண்ட காலத்திற்கு முன்பே உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 
     
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட எல்லா மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனை அடிக்கடி மேலோங்கி வருகின்றது.வறட்சிக் காலங்களில் எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியவில்லையே. அரசு இதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டாமா?சில மாவட்டங்களில் ஆற்றுப் பகுதிகளில் நீர் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் நிலை.பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை கிணறு (போர்வெல்)கைப்பம்பில் அடித்து பெண்கள் உடல் வலிக்க தண்ணீர் எடுக்கும் நிலை.அன்றாட தேவைக்காக பெண்களும் குழந்தைகளும் 1 கிலோமீட்டர், 2 கிலோமீட்டர் நடந்தே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை,வறட்சிக் காலங்களில் தெருக் குழாய்களில் இரவு 12-00மணி,1-00 மணிக்கு கூட பெண்கள் காலி குடங்களை வரிசையாக வைத்து காத்திருக்கும் அவல நிலை.குடிநீருக்கே இவ்வளவு கஷ்டம்.
      
பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் தலைநகர் சென்னைக்கு தெலுங்கு_கங்கை ஒப்பந்தம் அதாவது கிருஷ்ணா நதி நீர் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ல் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்_ஆந்திரா என்.டி.இராமராவ் இருவரும் கையெழுத்திட்டபடி 15 டிஎம்சி லிருந்து 12 டிஎம்சி ஆக குறைக்கப்பட்டதை முழு அளவில் நிறைவேற்ற வேண்டும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு கொண்டுவரப்பட்டு அதிலிருந்து சோழவரம் ஏரி,புழல் ஏரி, செம்பரப்பாக்கம் ஏரி ஆகியவற்றில் நிரப்பி சென்னைக்கு பயன்படுத்தும் திட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள். அதன்பின்னர் கிருஷ்ணா நதிநீர் முழு அளவில் கிடைத்தவுடன் பூண்டி ஏரிக்குக் கீழ் புதிதாக 5, 6 ஏரிகளை உருவாக்கி தண்ணீரைத் தேக்கி சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுங்கள் என்று இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் ஆட்சிக்காலத்திலும் வாதாடி வந்தோம்.
    
அதேபோல காவிரி,பாலாறு, தென்பெண்ணை,பவானி,வைகை, தாமிரபரணி,சிறுவாணி,கோமுகி, பெரியாறு,செய்யாறு,ஆரணியாறு, மணிமுத்தாறு,அமராவதி மேலும் அனைத்து ஆற்று பகுதிகளிலிருந்து எல்லா மாவட்டங்களுக்கும் மாவட்டஅளவிலும்,ஒன்றியங்கள் அளவிலும் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டங்களை தயாரித்து, நிதியும் ஒதுக்கீடு செய்து திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் பா.ம.க சார்பில் தொடர்ந்து வாதாடி வந்தோம்.
      
குடிநீர் பஞ்சத்தை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமென்று நானும் பா.ம.க உறுப்பினர்களும் தொடர்ந்து வாதாடி வந்ததோடு மற்றக்கட்சி உறுப்பினர் களும் வாதாடியதை ஏற்று அ.தி.மு.க - தி.மு.க ஆட்சிகளில் இரண்டு முன்னாள் முதலமைச்சர் காலத்தில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இடையிடையே பா.ம.க சார்பில் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் குடிநீர் பிரச்சனைக்கு பல போராட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டது. இதையெல்லாம் சுட்டிக்காட்டியும் வாதாடினோம்.
  
அதன் பிறகுதான் ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரங்கள் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நிறைய உள்ளதில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.உதாரணத்திற்கு ஒன்று...
         
தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குடிநீர் பஞ்சம் அதிகம் உள்ளவை. நிலத்தடி நீரில் புளோரைடு என்னும் நச்சுத்தன்மை கலந்துள்ளதால் இந்த தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு எலும்பு சம்பந்தமானதும் வேறு சில நோய்களும் வரும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதன் அறிகுறி இப்பகுதி மக்களுக்கு பற்கள் பலருக்கு பழுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். எனவே பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் கிடைத்திட ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர்த்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று 1997ல் காரிமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களே உங்களிடம் கோரிக்கை வைத்தேன். நிறைவேற்றுவதாக உறுதியளித்தீர்கள். அதன் பின்னர் இதே சட்டமன்ற அவையில் பலமுறை தங்களிடம் வலியுறுத்தினேன். நிறைவேற்ற வில்லையே என்று வாதாடினேன். (அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது)   
  
மீண்டும் தொடர்ந்து நிறைய நாட்கள் வாதாடினேன்.நிறைவேற்ற ப்படவில்லை.மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் தொப்பூரிலிருந்து தர்மபுரி- கிருஷ்ணகிரி-ஓசூர் வரை ஒருநாள் மனிதசங்கிலிப்போராட்டம். பல ஆர்ப்பாட்டங்கள். இதற்காகவே தருமபுரியில் பா.ம.க மாநாடு. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. நிலத்தடி நீர் ஆய்வு செய்து ப்ளோரைடு நச்சுத்தன்மை அறிக்கை அரசுக்கு கொடுக்கப்பட்டும். நிறைவேற்றப்பட வில்லை மருத்துவர் அய்யா அவர்களின் ஆலோசனைப்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் எனது பெயரில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றமும் உடனே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் படி உத்தரவிட்டது. இதையெல்லாம் சுட்டிக்காட்டியும் வாதாடினேன்.

முதலமைச்சர் அவர்கள்: மிஸ்டர் ஜி.கே.மணி அவர்களே உங்கள் கோரிக்கையை,இந்தத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றுகிறேன் என்று வாக்குறுதியளித்தார். 5 ஆண்டுகள் கடந்தும் திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. (ஆட்சி மாற்றம் ஏற்பட்டது)
துணை முதலமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை உணர்ந்து ரூபாய் 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அரசு நிறைவேற்றும். (துணை முதலமைச்சர் அறிவித்தார்).          
  
ஜி.கே.மணி:துணை முதலமைச்சர் அவர்களே,இராமநாதபுரம் மாவட்டதிற்கு குடிநீர் அவசியம் தேவைதான். அறிவித்திருப்பது நல்லது.நான் உங்களை கேட்பது, காவிரிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் எவ்வளவு தூரம் இருக்கிறதே,இதை அறிவிக்க உங்களுக்கு மனம் இருக்கிறது. ஆனால் நீண்டகாலம் வற்புறுத்தி வருகிற தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு காவிரி ஒகேனக்கல் திட்டத்தை அறிவிக்க உங்களுக்கு மனம் இடம் கொடுக்க வில்லையே!  ஏன்? காவிரி கரையோரம் இருக்கின்ற எங்கள் மக்கள் "காவிரி தண்ணீரை பார்க்க முடிகிறதே பருக கிடைக்க வில்லையே"ஏன் இந்த நிலை?    
   
முதலமைச்சர் கலைஞர் அவர்களே உங்களைக் கேட்கிறேன்,ஏன் இந்த திட்டத்தை இவ்வளவு காலம் நிறைவேற்றவில்லை?எங்கள் மாவட்ட மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் இந்த துரோகம் செய்கிறீர்கள்(என்றேன்). உடனே அமைச்சர்கள்,ஆளும் கட்சி M.L.A க்கள் எதிர்ப்புக்குரல்,ஒரே கூச்சல், பெரும் சத்தம்,அவையே கொந்தளிப்பாக காணப்பட்டது. ஜி.கே.மணி பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று எதிர்ப்புக்குரல் பலமாக ஒலித்தது.
    
முதலமைச்சர் அவர்கள்:(ஆவேசத்துடன்) நண்பர் ஜி.கே.மணி அவர்களே,நீங்கள் தடித்த வார்த்தை பேசுகிறீர்கள். இது உங்களுக்கு அழகல்ல. மணி அவர்களே, "உங்கள் மக்கள் பாவிகளுமல்ல.இந்தக் கருணாநிதி துரோகியுமல்ல".(என்று கூறினார்).
  
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே"எங்கள் மக்கள் பாவிகளுமல்ல நீங்கள் துரோகியுமல்ல"ஆனால் இந்தத் திட்டம் மட்டும் அறிவிக்கவில்லையே? ஏன்? என்ன காரணம்?
 
முதலமைச்சர் அவர்கள்:காரணம் ஒன்றுமில்லை.முக்கியக்காரணம் நிதி பற்றாக்குறைதான்.
  
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,உங்களிடம் கருணையும் இருக்கிறது,நிதியும் இருக்கிறது.(இது மறைமுகமாக குறிப்பிட்டது கருணை+நிதி=கருணாநிதி என்பதற்காக).
   
முதலமைச்சர் அவர்கள்:நண்பர் மணி அவர்களே உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன்.இப்பொழுதே அறிவிக்கிறேன்.நண்பர் ஜி.கே.மணி அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தத் திட்டம் தொடங்கப்படும், விரைவில் நிறைவேற்றப்படும். (ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார்).இவ்வாறு பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைய மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டது.
வேறு திட்டங்கள் குறித்து நாளை தொடரும். பகுதி - 8

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages