உருவம் தெரியாத எதிரியுடன் ஓர் உலகப் போர்! - மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம். - Agnipuratchi

உருவம் தெரியாத எதிரியுடன் ஓர் உலகப் போர்! - மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம்.

Share This

உருவம் தெரியாத எதிரியுடன்
ஓர் உலகப் போர்! - மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்து உகாண்டா நாட்டின் அதிபர்- யோவேரி முசெவேனி அந்நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். போர்க்காலங்களில் நாம் எவ்வாறு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போமோ, அதே போல் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த அவர்,‘‘உலகில் இப்போது ஒரு போர் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது துப்பாக்கிகளும், குண்டுகளும் இல்லாத போர். வீரர்கள் இல்லாத போர். தேச எல்லைகள் இல்லாத போர்’’ என்று கூறியிருந்தார்.

சற்றே சிந்தித்து பார்த்தால் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக நாம் நடத்திக் கொண்டிருக்கும் போர் மூன்றாவது உலகப் போருக்கு சற்றும் குறைவில்லாதது தான். இதையே மூன்றாவது உலகப் போராக கருத முடியும். 1914-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 1918 ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதி வரை மொத்தம் 4 ஆண்டுகள், 3 மாதங்கள், 2 வாரங்கள் நடைபெற்ற முதலாவது உலகப் போர்  தான், அந்த காலத்தில் மிகப்பெரிய போராக கருதப்பட்டது. அந்தப் போரில் ஒட்டுமொத்தமாக பங்கேற்ற நாடுகள் 32 மட்டும் தான்.

அதேபோல், 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 1945-ஆம் ஆண்டு செப்டம்பர்  2-ஆம் தேதி வரை  6 ஆண்டுகளுக்கு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 30 மட்டும் தான்.

ஆனால், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான மூன்றாவது உலகப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

212 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. இது முதல் மற்றும் இரண்டாவது உலகப் போர்களில் கலந்து கொண்ட நாடுகளின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகமாகும்.
சரி... உலகப் போரிலாவது அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜப்பான், இத்தாலி, பெல்ஜியம், தாய்லாந்து ஆகிய நாடுகள் நேச நாடுகள் என்ற பெயரில் ஓரணியாகவும், ஜெர்மனி, பல்கேரியா, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் மைய நாடுகள் என்ற பெயரில் இன்னொரு அணியாகவும் பிரிந்து சண்டையிட்டன. இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகள் அணியில் இருந்த ஜப்பானும், இத்தாலியும் மைய நாடுகள் அணிக்கு மாறி, அந்த அணியின் பெயர் அச்சு நாடுகள் என்று மாற்றப்பட்டதை தவிர வேறு மாற்றம் எதுவும் நிகழவில்லை.

ஆனால், இப்போது நடைபெற்றுவரும் மூன்றாவது உலகப் போரில் உலக வல்லரசுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் ஒரே அணியில் உள்ளன.  உலகப் போர்களில் முக்கிய சக்திகளாக விளங்கிய ஜெர்மனியும், இத்தாலியும் கூட இதே அணியில் தான் உள்ளன. இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளும் இதில் தான் உள்ளன. சுருக்கமாக கூற வேண்டுமானால் ஒட்டுமொத்த உலகமும் ஒரே அணியில் தான் உள்ளன.

அப்படியானால் எதிரணியில் யார் இருக்கிறார்கள்?

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமி மட்டும் தான் உள்ளது. அதன் உருவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் கருவிகள் மூலம்  அவற்றை உற்று நோக்கிய போது உருண்டை மீது ஆங்காங்கே கொம்புகள் முளைத்தது போன்ற  உருவத்தைக் காட்டுகிறார்கள். உருவம் தெரியாத அந்த கிருமி தான் இப்போது உலகத்தின் எதிரியாக மாறி நிற்கிறது.

உலகப் போர்களின் போது ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு தான் அச்சுறுத்தல் இருந்தது. அவர்கள் தான் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு அச்சத்தில் உறைந்து இருந்தனர். அதுவும் கூட போர் விமானங்கள் பறக்கும் போது மட்டும் தான். மற்ற நேரங்களில் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை.

ஆனால், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 400 கோடிக்கும் கூடுதலான மக்களை அச்சத்தில் வைத்துள்ளது. உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கு காரணமாக வெளியில் வர முடியாமல் உள்ளனர். 200 கோடிக்கும் கூடுதலான மாணவச் செல்வங்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று கல்வி கற்க முடியாமல் தவிக்கின்றனர்.

முதல் உலகப் போரின் போது வீரர்கள், பொதுமக்கள் என ஒரு கோடியே 60 லட்சம் பேரும், இரண்டாம் உலகப் போரின் போது சுமார் 8 கோடி பேரும் உயிரிழந்தனர். அதாவது இரு உலகப் போர்களிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகளில் ஒன்பதரை கோடி பேர் உயிரிழந்தனர். ஆனால், மூன்றாவது உலகப் போராக பார்க்கப்படும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கி 4 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தம் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகப் போர்களின் போது ஏற்பட்டதை விட மிக மோசமான பொருளாதார இழப்புகளை உலகம் சந்திக்கவுள்ளது. இதிலிருந்து உலகம் மீள இன்னும் பல ஆண்டுகள் ஆகக் கூடும்.

தடுப்பூசி கண்டுபிடிப்பதன் மூலம் தான் கொரோனா பரவலை நிரந்தரமாக தடுக்க முடியும். அதற்காகத் தான் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இன்னும் தடுப்பூசி சாத்தியமாகவில்லை. நமது அறிவியல் - தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் கொரோனா பெரும் சவாலாக உள்ளது.

உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்டோ, அணுகுண்டுகளைக் கொண்டோ கொரோனாவை வீழ்த்த முடியாது. மாறாக மக்களை தனிமைப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தல், அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு சோதனை செய்தல் ஆகியவற்றின் மூலமாக மட்டும் தான் கொரோனாவை ஒழிக்க முடியும். ஆகவே, தனித்திருப்போம், தவிர்த்திருப்போம்,   விழித்திருப்போம், கொரோனாவை வீழ்த்துவோம்!

#COVID19 #StayHomeStaySafeSaveLives

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages