வாருங்கள்... திருக்குறளின் சிறப்புகளைப் பார்ப்போம்! மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம்.
திருக்குறள் பல சிறப்புகளைக் கொண்டது. திருக்குறளே ஒரு அதியசம் தான். ஈரடிகளை கொண்ட திருக்குறளில் 7 சீர்கள் (வார்த்தைகள்) மட்டும் தான் இருக்கும். ஆனால், அவற்றில் அனைத்து மனிதர்களுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் புதைந்து கிடக்கும்.
திருக்குறளுக்கு உள்ள சிறப்புகளில் தனித்துவமானது ஈரடிகளில் வரும் 7 வார்த்தைகளில் இரண்டு வார்த்தைகள் தலா இரண்டு இடங்களில் திரும்பத் திரும்ப ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் இடம் பெறுவது ஆகும்.
நான் ஆய்ந்த வகையில் மொத்தம் 5 குறள்களில் இவ்வாறு இரு வார்த்தைகள் தலா இரு இடங்களில் மீண்டும், மீண்டும் வருகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்....
-----------------------------------------
1) குறள் எண் 12 அதிகாரம்: வான் சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
இந்தக் குறளில் துப்பார்க்கு என்ற சொல் உண்பவருக்கு என்ற பொருளிலும், துப்பாய என்ற சொல் உணவாக என்ற பொருளிலும் இரு இடங்களில் வருகின்றன என்பது தான் இந்த திருக்குறளின் சிறப்பு ஆகும்.
-------------------------------------------------------------
2) குறள் 297 அதிகாரம்: வாய்மை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பொருள்: பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்யாமல் இருப்பதும் நல்லது ஆகும்.
இந்தக் குறளில் பொய்யாமை என்ற சொல் பொய் கூறாமை அல்லது தீங்கு இழைக்காமை என்ற பொருளில் ஓர் இடத்திலும், உண்மையாகவே என்ற பொருளில் இரண்டாவது இடத்திலும் வருகிறது. அதேபோல் செய்யாமை என்ற சொல் ஓரிடத்தில் செய்யக்கூடாதவை என்ற பொருளிலும், செய்யாமல் இருத்தல் என்ற பொருளில் இன்னொரு இடத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
-----------------------------------------------------------
3) குறள் 310 அதிகாரம்: வெகுளாமை
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
பொருள்: எல்லையில்லாத கோபம் கொண்டவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள்; கோபத்தை அடியோடு கைவிட்டவர்கள் துறவிகளுக்கு ஒப்பானவர்கள்.
இறந்தார் என்ற சொல் இந்த குறளில் இரு இடங்களில் வருகிறது. ஓர் இடத்தில் இறந்தார் என்பது எல்லையில்லாத என்ற பொருளிலும், மற்றொரு இடத்தில் உயிரிழந்தவர் என்ற பொருளிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதேபோல், துறந்தார் என்ற சொல் ஓரிடத்தில் கைவிட்டவர் என்ற பொருளிலும், இன்னொரு இடத்தில் துறவி என்ற பொருளிலும் வருகிறது.
------------------------------------------------------------------------
4) குறள்: 623 அதிகாரம்: இடுக்கண் அழியாமை
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
பொருள்: துன்பம் வந்த போது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
இடும்பைக்கு என்ற சொல்லும், இடும்பை என்ற சொல்லும் தலா இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடும்பைக்கு என்பது துன்பத்திற்கு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இடும்பை என்ற சொல் ஓர் இடத்தில் துன்பம் என்ற பொருளிலும், இன்னொரு இடத்தில் வருத்தம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
----------------------------------------------------
5) குறள்: 1041 அதிகாரம்: நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
பொருள்: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
இந்தக் குறளில் இன்மையின் என்ற சொல்லும், இன்னாதது என்ற சொல்லும் இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரு இடங்களிலும் இன்மையின் என்ற சொல் இல்லாமை/வறுமை என்ற பொருளிலும், இன்னாதது என்ற சொல் துன்பமானது என்ற பொருளிலும் இரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கண்ட 5 குறள்கள் தவிர இந்த இலக்கணத்திற்குட்பட்டு வேறு ஏதேனும் குறள்கள் உங்களுக்கு தெரிந்தால் அதை தெரியப்படுத்தலாம்.
No comments:
Post a Comment