முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 12 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 12

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 12

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

11. தடைகளை உடைத்து நடைமுறைக்கு வந்த இட ஒதுக்கீடு!

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றான மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று மத்திய அரசு அறிவிப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை விட,  அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக இன்னும் கூடுதலான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது உயர்சாதியினருக்கு பிடிக்கவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கோ இதைப்பற்றி இன்றளவும் எதுவுமே புரியவில்லை.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்த நிலையில்,   இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1990-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்திரா சகானி என்ற பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடரப்பட்ட பின்னர் நடந்த முதல் விசாரணையிலேயே 27% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

27% இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக அத்தடையை நீக்க வலியுறுத்தியும் 1990-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியது.  அதுமட்டுமின்றி, அந்தப் போராட்டத்தை  முடித்துக் கொண்டு நானும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களும் தில்லிக்கு விரைந்து சென்றோம். அங்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் சந்திரசேகர் அவர்களின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்தினேன்.

1990-ஆம் ஆண்டு இறுதியில் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது, இந்த வழக்கை இரு நீதிபதிகள் தான் விசாரித்தனர்.  பின்னர் வழக்கை விசாரிக்கும்  நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாகவும், ஐந்தாகவும், ஏழாகவும் கடைசியாக ஒன்பதாகவும் அதிகரித்தது.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மதுக்கர் ஹிராலால் கனியா தலைமையிலான 9 பேர் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வில் எம்.என். வெங்கடாச்சலையா, எஸ். ரத்தினவேல் பாண்டியன், ஏ.எம்.அகமதி, பி.பி. ஜீவன்ரெட்டி, பி.பி.சாவந்த், குல்தீப் சிங், டி.கே. தொம்மீன், ஆர்.எம்.சஹாய் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த போதே பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை  1991-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் 27% இட ஒதுக்கீட்டு வழக்கின் விசாரணையில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களான கே.கே.வேணுகோபால், நானி பல்கிவாலா, பி.பி.ராவ், திருமதி. ஷியமளா பாப்பு ஆகியோரும், அவர்களுக்கு உதவியாக இளம்  வழக்கறிஞர்கள் பலரும் வாதிட்டனர். புகழ்பெற்ற வழக்கறிஞர் இராம்ஜெத்மலானி பிகார் அரசு சார்பில் நேர்நின்று வாதிட்டார். மூத்த வழக்கறிஞர்கள் கே.பராசரன், ராஜிவ்தவான் ஆகியோரும், அவர்களுக்கு உதவியாக இளம் வழக்கறிஞர்கள் பலரும் நேர் நின்று வாதிட்டனர். இவர்கள் அனைவரையும் தவிர இட ஒதுக்கீட்டுக்காக தொடக்கம் முதல் போராடி வந்த இராம் அவதேஷ்சிங் அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தாமே நேர்நின்று வாதிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும்.

இந்த வழக்கை விசாரித்த அமர்வின் தலைவரும், தலைமை நீதிபதியுமான கனியா 1992-ஆம் ஆண்டு  நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக 16.11.1992-இல் இந்த வழக்கில்  தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி கனியா, எம்.என். வெங்கடாச்சலையா, ஏ.எம்.அகமதி ஆகியோர் சார்பில் நீதிபதி பி.பி.ஜீவன்ரெட்டி தீர்ப்பை எழுதினார். நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் தனித் தீர்ப்பு எழுதினார். இன்னொரு நீதிபதி பி.பி. சாவந்த்தும் தமது தீர்ப்பை தனியாக எழுதி வாசித்தார். இந்த நீதிபதிகள் ஆறு பேருமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி 13.08.1990-இல் பிறப்பிக்கப்பட்ட ஆணை செல்லும்  என்று தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் குல்தீப் சிங், டி.கே. தொம்மீன், ஆர்.எம்.சஹாய் ஆகிய மூவரும் தனியாக தீர்ப்பளித்தனர். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் 27% இட ஒதுக்கீடு அளித்து 13.08.1990-இல் வி.பி.சிங் அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று அவர்கள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.

‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் 27% இட ஒதுக்கீடு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செயல்படுத்துவதற்கு  ஏற்றதல்ல.  எங்களைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு என்பது காலம்காலமாக வரலாறுகளை கடந்து  பாகுபாட்டை அனுபவித்து வருபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டியதாகும். காலம் காலமாகவும், அண்மைக்காலமாகவும் பாகுபாட்டை அனுபவித்து வரும் மக்களுக்கு இதர அஃபர்மேட்டிவ் (Affirmative) செயல்திட்டங்களை செயல்படுத்தலாம்; இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை’’ என்று  அந்த 3 நீதிபதிகளும் தங்களின் தீர்ப்புகளில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனாலும் 6 நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருந்ததால் பெரும்பான்மை அடிப்படையில் 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு செல்லும்.

2. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும்; பொருளாதார அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடாது.

3. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரையும் ஒன்றாக பார்க்கக் கூடாது.

4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் விலக்கி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது.

5. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம்; அவர்களுக்கு தொகுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டு வழங்கலாம்.

6. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% இடங்களுக்கு மிகக்கூடாது.  நியாயமான காரணங்கள் இருந்தால் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கலாம். எனினும் இதில் அதிக கவனமும், எச்சரிக்கையும் செலுத்தப்பட வேண்டும்.

7. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது.

8. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கும், சில குறிப்பிட்ட பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது.

ஆகியவை தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் 27% இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கு ஆபத்து இல்லை என்றாலும் கூட, சமூக நீதிக்கு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. அவற்றில் முதலாவது கிரீமிலேயர் எனும் புதிய கோட்பாடு திணிக்கப்பட்டது ஆகும். கிரீமிலேயர் என்ற கோட்பாடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் இல்லை. பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் அப்படி ஒரு கோட்பாடு இல்லை. அதுமட்டுமின்றி, 27% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களின் கோரிக்கையும் அது அல்ல. ஆனாலும் உயர்சாதியினரை திருப்திப்படுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்படி ஓர் நிபந்தனையை விதித்தனர்.
அதுமட்டுமின்றி, 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்ததும் தேவையற்றது ஆகும். இதுவும் சமூகநீதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

கர்நாடகத்தில் அவானூர் ஆணையப் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட போதே அங்கு 68% இட ஒதுக்கீடு வழக்கத்தில் இருந்து வந்தது. அதை எதிர்த்து பாலாஜி என்பவர் 1963&ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கும் மிகக் கூடாது என்று தீர்ப்பளித்தது. எனினும் அந்தத் தீர்ப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், மண்டல் ஆணைய பரிந்துரைகள் தொடர்பான வழக்கில், பாலாஜி வழக்கில் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாகக் கூடாது என்று தீர்ப்பில் உறுதிபடத் தெரிவித்திருந்தது. அதனால் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிராக பல அம்சங்களைக் கொண்டிருந்தது .  இந்தத் தீர்ப்பு வந்த போது மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்றுக்  கொண்டிருந்தது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அவருக்கும் சில தயக்கங்கள் இருந்தன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு அறிவித்த வி.பி.சிங் அவர்களுக்கு எதிராக போராடிய உயர்சாதி மக்கள் தங்களுக்கு எதிராகவும் திரும்பிவிடக் கூடாது என்ற அச்சத்தால் ஏற்பட்ட தயக்கம் தான் அதுவாகும். உயர்சாதி மக்களின் கோபத்தை தணிப்பதற்காகவே அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க நரசிம்மராவ் அரசு முடிவு செய்தது. ஆனால், அதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதைத் தவிர நரசிம்மராவ் அரசுக்கு வேறு வழியில்லை. ஆனாலும்  மிகவும் நிதானமாக யோசித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான 10 மாதங்களுக்குப் பிறகு 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் 27% இட ஒதுக்கீட்டை தமது அரசு செயல்படுத்தும் பிரதமர் நரசிம்மராவ் அறிவித்தார்.

அதன்பின் 6 மாதங்கள் கழித்து மண்டல் ஆணைய பரிந்துரைப்படி வி.பி.சிங் அரசால் அறிவிக்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டின்படி 1994-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இராஜசேகர ஆச்சாரி என்ற இளைஞருக்கு முதன்முதலாக மத்திய அரசுப் பணியில் வேலை வழங்கப்பட்டது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் நீண்டகாலமாக செயல்படுத்தப்படாததால் மனம் வெறுத்து 1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தில்லியை விட்டு வெளியேறிய விபிசிங், 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டும் தான் மீண்டும் தில்லி திரும்புவேன் என்று சபதம்  மேற்கொண்டார்.

அவ்வாறு வி.பி.சிங் தில்லியை விட்டு வெளியேறியதற்கு அடுத்த மாதமே மண்டல் ஆணைய பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று நரசிம்மராவ் அரசு அறிவித்தது. ஆனாலும் அப்போதும்  விபிசிங் தில்லிக்கு வர மறுத்து விட்டார். மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி இராஜசேகர ஆச்சாரிக்கு  பணி ஆணை வழங்கப்பட்ட பிறகு தான் 8 மாதங்கள் கழித்து வி.பி.சிங் தில்லிக்கு திரும்பினார். தொடர்ந்து 02.04.1994 அன்று தில்லியில் இராஜசேகர ஆச்சாரி வாடகைக்கு குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற சிறிய விழாவில் வி.பி.சிங் அவர்களும், பிற ஜனதாக் கட்சித் தலைவர்களும் இராஜசேகர ஆச்சாரிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இப்படியாக 1979-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு 1980-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரைகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்தன.

நாளை.....

27% இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages