முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 15
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
14.அகில இந்திய ஒதுக்கீட்டில் குழப்பங்கள்!
தமிழ்நாட்டு அரசியலில் இன்று மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயம் என்றால், அது மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருவது குறித்த சர்ச்சை தான். அது மிகப்பெரிய சமூக அநீதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து முதலில் விளக்குகிறேன். அதன் பின்னர் நமக்கு இழைக்கப்படும் சமூக அநீதி குறித்து விவாதிக்கலாம்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும் கூட, வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசு பணிகளில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றும் அதிகாரிகளின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாகவும் 1992&ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டவை தான் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு ஒதுக்கீடு இடங்கள் ஆகும்.
அகில இந்திய தொகுப்பு என்ற கோட்பாட்டின்படி மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட வேண்டும். அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் முதலில் 25% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. பின்னர் இது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் (Directorate General of Health Services - DGHS) மூலம் கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படுகின்றன. அவ்வாறு நிரப்பப்படும் போது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% , பொதுப்பிரிவினருக்கான இடங்களில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இடங்களை ஒதுக்கிய மத்திய அரசு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27% இடங்களை ஒதுக்க மறுக்கிறது. இதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2500-க்கும் கூடுதலான இடங்கள் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. இது தான் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு இழைக்கும் அநீதி ஆகும். அதுகுறித்து பார்ப்போம்....
2020-21 ஆம் மருத்துவக் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக 9550 இடங்கள் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் நடத்திய கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றில் பட்டியலினத்தவருக்கு 1385 (14.50%) இடங்களும், பழங்குடியினருக்கு 669 (7.00%) இடங்களும் கிடைத்துள்ளன. பட்டியலினம், பழங்குடியினருக்கு அரசியல் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள முறையே 15%, 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் இந்த எண்ணிக்கை அமைந்திருக்கிறது.
மீதமுள்ள இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 7125 இடங்கள் அதாவது 74.60% இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. பொதுப்பிரிவினருக்கான இடங்களில் 653 (7.00%) இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர்த்த 371 இடங்கள், அதாவது 3.8% இடங்கள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ளன. தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் , வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி , பெங்களூரில் உள்ள இ.எஸ்.ஐ. முதுநிலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற மத்திய அரசின் மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப் பட்ட 27% இட ஒதுக்கீட்டின் மூலம் தான் இந்த இடங்களாவது பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்துள்ளன.
அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப் படும் 27% இட ஒதுக்கீடு அகில இந்திய தொகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தால், முதற்கட்டமாக நிரப்பப்பட்ட 9550 இடங்களில் 2579 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு பெறப்பட்ட இடங்களுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும்; ஆனால், மாநில அரசு கல்வி நிறுவனங்களிடமிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு பெறப்பட்ட இடங்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்ற மத்திய அரசின் கொள்கை நிலைப்பாடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு திட்டமிட்டு மத்திய அரசு இழைக்கும் அநீதியாகும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் தான் அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் தான் எனும் போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மற்ற பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மத்திய, மாநில அரசுகளின் கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட இடங்கள் என்றாலும் கூட, அவை மத்திய அரசின் மூலம் நிரப்பப்படுவதால், அவை மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களாகவே கருதப்பட வேண்டும். அந்த இடங்கள் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படியே நிரப்பப்பட வேண்டும். ஆனால், இல்லாத விதிகளைக் காரணம் காட்டி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியாவில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு விடுதலைக்கு முன்பிலிருந்தே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தாலும் கூட 2007-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதே இல்லை என்பது பலரும் அறியாத உண்மை.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், அதை எதிர்த்து அபய்நாத் என்பவர் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கு நீண்டு கொண்டே சென்ற நேரத்தில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க தமது துறை முடிவு செய்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தார். அதன்பிறகு 2007-08 ஆம் ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு பட்டியலினம் மற்றும் பழங்குடியின அமைப்புகள் சார்பில் சென்னையில் 28.03.2008-இல் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய தேசிய பட்டியலின, பழங்குடியின ஆணையத்தின் தலைவர் பூட்டா சிங்,‘‘ கடந்த 20 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மாணவ & மாணவியருக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தான் மத்திய சுகாதாரத்துறையில் உள்ள பல மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடி இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார்’’ என்று புகழாரம் சூட்டினார்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் நான் வலியுறுத்திப் பெற்றுக் கொடுத்தேன். இதுகுறித்த கொள்கை முடிவு 2006-ஆம் ஆண்டே எடுக்கப்பட்டு, அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை முடித்து இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர 2008-ஆம் ஆண்டு ஆகி விட்டது. 2008-09 ஆம் ஆண்டில் கூட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 9% இடஒதுக்கீடு மட்டும் தான் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பதால் பொதுப்போட்டிக்கான இடங்கள் குறைந்து விடக் கூடாது என்று மத்திய அரசு முடிவு எடுத்தது. ஆனால், ஒரே ஆண்டில் அத்தகைய இடங்களை உருவாக்கி விட முடியாது என்பதால், மொத்தம் 3 ஆண்டு கால இடைவெளியில் கூடுதல் இடங்களை உருவாக்கவும், ஒவ்வொரு ஆண்டும் 9% வீதம் 3 ஆண்டுகளில் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதென்றும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2008-09 ஆம் ஆண்டில் 9% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டது. பின்னர் 2009-10 ஆம் ஆண்டில் 18% ஆகவும், 2010-11 ஆம் ஆண்டில் 27% ஆகவும் அதிகரிக்கப்பட்டது. 2010-11 ஆம் ஆண்டில் தான் 27% இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைக்கு வந்தது.
மருத்துவர் அன்புமணி 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மட்டும் தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்திலேயே 27% இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைக்கு வந்திருந்தால், அந்த இட ஒதுக்கீட்டை அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கும் நீட்டித்திருக்க முடியும். பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கிய அன்புமணி இராமதாஸ், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு 4 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தது. திமுகவைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அமைதியாக பதவியின் பயன்களை மட்டும் அனுபவித்தனர்.
2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசும் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சலோனிகுமாரி என்பவர் 2015-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைக் காரணம் காட்டி கடந்த 5 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
உண்மையில் சலோனிகுமாரி வழக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு அல்ல... மாறாக ஆதரவான வழக்கு ஆகும். இதேபோன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது தான், அந்த வழக்கின் கோரிக்கைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்து பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இட ஒதுக்கீடு வழங்கினார். ஆனால், அந்தப் பெருந்தன்மை இப்போதைய அரசிடம் இல்லை என்பதால், பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இன்னும் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்காகத் தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறது. விரைவில் அந்த வழக்குகளில் வெற்றிக்கொடி நாட்டி, பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிச்சயமாக இட ஒதுக்கீட்டை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றுத் தரும். இது உறுதி.
கல்வியில் இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அவசரமாக செய்யப்பட வேண்டிய பணி இன்னொன்று உள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்ட மசோதா 2006 நிறைவேற்றப்பட்டபோது கீழ்க்கண்ட 8 கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவற்றின் விவரம் வருமாறு:
1. ஹோமிபாபா தேசிய நிறுவனம், மும்பை மற்றும் அதன் 10 துணை நிறுவனங்கள்.
2. டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், மும்பை
3. வடகிழக்கு பிராந்தியத்திற்கான இந்திராகாந்தி சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஷில்லாங்
4. தேசிய மூளை ஆராய்ச்சி மையம், குருகிராம்
5. ஜவகர்லால் நேரு நவீன அறிவியல் ஆராய்ச்சி மையம், பெங்களூரு
6. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அகமதாபாத்
7. விண்வெளி இயற்பியல் ஆய்வகம், திருவனந்தபுரம்
8. இந்திய தொலையுணர்வு ஆராய்ச்சி நிறுவனம், டேராடூன்
மேற்கண்ட 18 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் ஆராய்ச்சித் துறைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களால் தடம் பதிக்கவோ, சாதனை படைக்கவோ முடியவில்லை. இந்த நிலையை மாற்றி அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும். அப்போது தான் உண்மையான சமூக நீதி மலரும். அதற்காக சமூகநீதிப் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.
நாளை....
27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு!
No comments:
Post a Comment