முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 20 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 20

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 20

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

19. நாராயணகுரு ஏற்படுத்திய சமூக மாற்றம்!

தனி மனிதர்கள் நினைத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை சாதித்துக் காட்டிய தலைவர்கள் தென்னிந்தியாவில் அதிகம். கேரளத்தில் அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் நாராயண குரு ஆவார்.

முந்தைய அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டவாறு கேரளத்தின் பூர்வகுடி மக்களான ஈழவர்கள் பார்த்தாலே தீட்டு எனும் அளவுக்கு மோசமான தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நம்பூதிரிகளிடமிருந்து 36 அடி தூரத்திற்கு அப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கு அப்பாலுமே நிற்க முடியும். அதற்கு குறைவான தொலைவில் ஈழவர் ஒருவரை ஒரு நம்பூதிரி பார்க்க நேரிட்டால் அவர் தீட்டுப்பட்டவராகக் கருதப்படுவார்.  அவ்வாறு  தீட்டுப்பட்டவர் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அளவுக்கு கேரளத்தில் தீண்டாமை தலைவிரித்தாடியது.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் அரசு பணிகளில் தமிழ்நாட்டு பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தை நாயர் சமுதாயத்தினரும், பிள்ளை சமுதாயத்தினரும் தான் முன்னின்று நடத்தினார்கள் என்றாலும் கூட, அந்த போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் வலிமை சேர்த்தது  ஈழவர்கள் தான். அந்த போராட்டத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக மட்டும் ஈழவர்களை சேர்த்துக் கொண்ட உயர்சாதியினர், அதன்பின்னர் அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்க மறுத்து விட்டனர். தீண்டாமையும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுப்பும் தான் அவர்களுக்கு பரிசாகக் கிடைத்தன.

மற்றொருபுறம்  அரசவம்சம், நம்பூதிரி வம்சம், நாயர் வம்சம் ஆகிய மூவரைத் தவிர மற்ற சமுதாயங்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. மற்ற அனைத்து சமுதாய மக்களும் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும், இடுப்பில் இருந்து கால்முட்டி வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்பது அக்கால கேரளத்தில் சட்டமாக்கப்படிருந்தது. பெண்கள் எப்போதும் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். ஆண்களில் அரசனையும் நாயர்களையும் தவிர யாரும்  தாடி, மீசை வைத்து கொள்ளக் கூடாது. செருப்பு அணியக்கூடாது, குடைபிடித்து செல்லக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீசை, தாடி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தனியாக வரி செலுத்தவேண்டும்.

பெண்கள் மேலாடை அணிந்து மார்பை மறைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தனியாக முலைக்கரம் என்ற பெயரில் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்துவதாலேயே அவர்கள் எல்லா நேரமும் மார்பை மறைத்துக் கொள்ள முடியாது. முலைக்கரம் வரி செலுத்தினாலும், பிராமண நம்பூதிரிகள் எதிரில் வந்தால் தோள் சீலையை விலக்கி மார்பை காட்டி தான் நிற்க வேண்டும் என்று  நிபந்தனை விதிக்கப்பட்டது. முலைக்கரம் வரி செலுத்துவது நம்பூதிரிகள் அல்லாதோர் முன் மார்பை மறைப்பதற்காக மட்டும் தான் என்று உயர்சாதியினர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது தான் கொடுமை. அதுவும் மேற்கண்ட வரிகளை வாழை இலையில் வைத்து நம்பூதிரிகளிடம் பணிவாக கொடுக்க வேண்டுமாம்.

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக ஈழவ மக்கள் தங்கள் மனதிற்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களால் அரசர்களையும், உயர்சாதியினரையும் எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம்  சேர்தலா என்ற சிற்றூரில் நன்கேலி என்ற ஈழவ பெண் வாழ்ந்து வந்தார். ஒருமுறை நாயர்கள் முலைக்கரம் வரி வசூலிக்க வந்தபோது, ‘‘சற்று பொறுங்கள்’’ என்று கூறி உள்ளே சென்ற அந்த பெண்மணி,  ஒரு தலைவாழை இலையில் தமது இரு முலைகளையும் அறுத்து வைத்து கொண்டு வந்து, நாயர்களிடம் கொடுத்து விட்டு, அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார். அதைக் கண்டு அதிர்ந்து போன நாயர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

பின்னர் அங்கு வந்த நன்கேலியின் கணவன் சிறுகண்டன், மனைவியின் சிதையில் உடன்கட்டை ஏறி தற்கொலை செய்து கொண்டான். கேரளாவில் முலைக்கரம் வரிக்கு எதிராக வெடித்த முதல் புரட்சி இது தான். முலைக்கரம் வரிக்கு எதிராக 1836-ஆம் ஆண்டு முதல் அய்யா வைகுந்தர் போராட்டம் நடத்தி வந்தார். அதன்பிறகு நன்கேலி முலை அறுத்துக் கொண்ட புரட்சி குறித்து பரப்புரை செய்து தோல்சீலை போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பயனாக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் அளித்த நெருக்கடி காரணமாக அனைத்து சமுதாய பெண்களும் மேலாடை அணிந்து கொள்வதற்கு திருவாங்கூர் சமஸ்தானம் அனுமதி அளித்தது.

சொந்த ஊரில் நிம்மதியாக நடமாட முடியாமல், கல்வி கற்க முடியாமல், வேலைக்கு செல்ல முடியாமல்,  தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட ஈழவர்கள், இன்று உலகில் எதையும் சுண்டு விரலால் சாதிக்க முடியும் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளனர். கேரள அரசின் அனைத்து உயர்பதவிகளிலும் அவர்கள் தான் வீற்றிருக்கின்றனர். மத்திய அரசின் முக்கிய பதவிகள் அனைத்தும் அவர்கள் வசமே உள்ளது. உலகின் பல நாடுகளில் குடியேறியுள்ள ஈழவர்கள் அங்கும் முக்கியப் பதவிகளை வகித்து வருகின்றனர். இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனை 1980&களின் இறுதியில்  சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்தித்து பேசிய போது, ஈழவர்களின் வளர்ச்சி குறித்து பொறாமையுடன் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஒரு காலத்தில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஈழவர்கள் அந்த அளவுக்கு உலக அளவில் உயர்ந்துள்ளனர்.

இந்த சாதனைகளுக்கு பின்னணியில் இருக்கும் நாயகன் நாராயணகுரு ஆவார்....

நாராயணகுரு அவர்கள் 1854ல் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழந்தி என்ற கிராமத்தில் பிறந்தார்.  ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் வறுமையில் வாடினாலும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அய்யாவு என்ற தமிழருடன் கிடைத்த தொடர்பு அவருக்கு கல்வி கற்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.  அய்யாவு என்ற அந்த தமிழர் நாராயணகுருவுக்கு தமிழையும்,  தமிழில் உள்ள சிறந்த நூல்களையும் கற்றுத் தந்தார்.
ஓரளவு கல்வி பெற்ற பிறகு தான்  ஈழவர் சமுதாயத்திற்கு எதிராக தீண்டாமை தலைவிரித்தாடுவதை நாராயணகுரு அவர்களால் உணர முடிந்தது. அதை நினைத்து வேதனை அடைந்த அவர், தமது மக்களை தீண்டாமையின் பிடியிலிருந்து மீட்டு சமூகத்தில் உயர்நிலைக்கு கொண்டு வர வேண்டும்  என்று நினைத்தார். அப்போது அவரிடம் அந்த எண்ணம் மட்டும் தான் இருந்ததே தவிர வேறு எந்த செயல்திட்டமும் இல்லை.
ஆனால், அவரிடம் இருந்த எண்ணமும், சிந்தனையும் மிகவும் தெளிவானவை... உயர்வானவை.

ஆம்....

‘‘கல்வி, செல்வம், ஆன்மிகம் ஆகியவற்றில் தான் உயர்சாதியினர் நமது மக்கள் மீது தீண்டாமையை ஏவ முடியும். இந்த மூன்று விஷயங்களிலும் நமது மக்களை உயர்சாதியினரை விட உயர்ந்தவர்களாக்க வேண்டும். அது மட்டும் தான் ஈழவ மக்களை தீண்டாமைக் கொடுமையிலிருந்து  மீட்டுக் கொடுக்கும்’’ என்பது தான் நாராயணகுருவின் சிந்தனையாகும்.

அதன்படி, 1888-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அருகேயுள்ள அருவிக்கரை என்ற சிற்றூரில் ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்த நாராயண குரு, அதை கரையில் சிவலிங்கமாக நிறுவினார்.  ஈழவனுக்கு சிலை அமைக்கும் உரிமை உண்டா? என உயர்சாதியினர்  கேட்ட போது, ‘‘நான்  நம்பூதிரிகளின் சிவனை நிறுவவில்லை. அனைவருக்குமான சிவனை நிறுவினேன்” என்று நாராயணகுரு பதிலளித்தார்.  தொடர்ந்து பல ஊர்களில் சிவன், விஷ்ணு, சரஸ்வதி தேவி உள்ளிட்ட சிலைகளை நாராயணகுரு நிறுவினார். ஒவ்வொரு கோவிலிலும் கல்வியின் கடவுளான சரஸ்வதி சிலைக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஈழவர்கள் மத்தியில் நாராயணகுரு விதைத்தார்.

கேரளத்தில்  கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டுகரை, வயநாடு, தலைசேரி, கண்ணனூர், கோழிக்கோடு, ஆலுவா, கர்நாடகத்தில்  மங்களூர்,  தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு உள்ளிட்ட ஊர்களில் அவர் கோவில்களை அமைத்தார். அவை அனைத்தையும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களாக மாற்றினார். அதன்மூலம் ஈழவ மக்களிடையே தங்களுக்காக கோயில்களும், ஒன்று கூடும் இடங்களும் உள்ளன என்ற எண்ணம்  ஏற்படுத்தப்பட்டது.  அந்த எண்ணமே அவர்களிடையே நிலவி வந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கியது.

அந்த நேரத்தில் ஈழவ சமுதாயத்தில் பிறந்து, கர்நாடகத்தில் புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்த பல்பு என்கிற பத்மநாபன் நாராயணகுருவை சந்திக்க வந்தார்.  அவரும் கேரளத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் தான்.  கிறித்தவ பாதிரியார் ஒருவரின் உதவியுடன் அவர் இளங்கலை பட்டம் படித்தார். ஆனால், அவர் ஈழவர் என்பதாலேயே கேரள மன்னர் ஆட்சியில் அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி  ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த தீண்டத்தகாதவரான அவர் கடவுள் பெயரை வைத்துக் கொள்ளக் கூடாது என்று உயர்சாதியினர் கண்டித்ததுடன்,  பத்மநாபன் என்ற அவரது பெயரை பல்பு என்று கொச்சையாக மாற்றினார்கள்.  அதன்பின் மைசூருக்கு சென்று மருத்துவப் பயிற்சி பெற்ற பல்பு அங்கு மருத்துவத் துறையில் மிக உயர்ந்த பதவிக்கு வந்தார்.

கேரளத்தில் புழுக்களைவிட தாழ்ந்தவர்களாக வாழ்ந்த தமது மக்களுக்கு ஏதாவது செய்ய  வேண்டும் என்ற எண்ணத்துடன் நாராயண குருவை சந்தித்த  மருத்துவர் பல்பு,  அவரது வாழ்த்துகளுடன், ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா என்ற அமைப்பை  1903 -ஆம் ஆண்டில்  அருவிபுரத்தில் நிறுவினார். அந்த அமைப்பு தான் ஈழவ மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

ஆலயங்களை  அதிக அளவில் ஏற்படுத்திய பிறகு தமது மக்களின் கல்வி வளர்ச்சியில் நாராயண குரு கவனம் செலுத்தினார். அதற்கு உதவியாக இருந்தது எஸ்.என்.டி.பி. எனப்படும்  ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா அமைப்பு தான்.  அந்த அமைப்பின் மூலம் வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் கல்வி நிறுவனங்களை நாராயணகுருவும், பல்புவும் ஏற்படுத்தினார்கள்.  அதுவே ஈழவ மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழங்குவதற்காக எஸ்.என்.டி.பி.  அமைப்புக்கு  பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டது. ஈழவ மக்கள் ஒருமுறை தென்னை மரம் ஏறினால், அதற்காக கிடைக்கும் கூலியிருந்து ஒரு தேங்காயை எஸ்.என்.டி.பி.  அமைப்புக்கு  வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உருவாக்கப்பட்டது. அதன் மூலம் குவிந்த நிதியைக் கொண்டு ஈழவ மக்களுக்கு கல்வி வழங்கப்பட்டது.

இன்றைய நிலையிலும்  கேரளத்தில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்துவது எஸ்.என்.டி.பி.  அமைப்பு தான். பள்ளிகளும் கல்லூரிகளும் துவங்குவதும் படிக்கும் உரிமைக்காக போராடுவதும் அந்த இயக்கத்தின்  முக்கியப் பணியாக உள்ளது. ஈழவ சமூகமே படிப்புமிக்க சமூகமாக மாறியது.  ஆங்கிலக் கல்வியை வழங்குவதன் மூலமாகவே தமது சமுதாயத்தினரை முன்னேற்ற முடியும் என்று கருதிய நாராயண குரு அவர்கள், அதற்காக தமது சீடர்  நடராஜ குருவை ஐரோப்பாவுக்கு அனுப்பி ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் சார்ந்த தத்துவங்களைப் படிக்க வைத்தார். அதனால் அந்த சமுதாய மக்கள் இன்று கேரளத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல பதவிகளில் உள்ளனர். அதற்காக அவர்கள் நாராயண குருவுக்கு என்னென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றனர். நாராயணகுரு  மிகவும் ஏழையாக பிறந்தார். வறுமையில் வாடினார். அவரிடம் பெரிய சொத்துகள் இல்லை. ஆனால், தமது சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் நாராயண குருவுக்கு இருந்தது. அந்த எண்ணத்தை அவர் செயல்படுத்தியதால் தான் ஈழவ மக்கள் இன்று மரியாதையான நிலையில் உள்ளனர்.

வன்னியர்களுக்கான சமூகநீதிப் போராட்டங்களை நான் முன்னெடுத்து நடத்திய போது, எங்கெல்லாம் உரையாற்றினேனோ, அங்கெல்லாம் நாராயணகுரு ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் குறித்தும், அதற்காக அவர் கடைபிடித்த வழிமுறைகள் குறித்தும் பாராட்டி பேசாமல் இருந்தது இல்லை. சமூக நீதியையும், சமூக மாற்றத்தையும் ஏற்படுத்துவதில் எனது வழிகாட்டிகளில் ஒருவர் நாராயணகுரு என்பது குறிப்பிடத்  தக்கது.
நாராயணகுரு எந்த அளவுக்கு போற்றத்தக்கவர் என்பதற்கு ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறுகிறேன்.

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நாராயணகுரு போராடுவதை அறிந்த மகாத்மா காந்தியடிகள் 1925-ஆம் ஆண்டு அவரை சந்திக்க முடிவு செய்தார். அந்த சந்திப்புக்கு முன்பாக காந்தியடிகளை காஞ்சிபுரம் மடாதிபதியும், காஞ்சி பெரியவர் என்று அழைக்கப்பட்டவருமான சந்திரசேகர சரஸ்வதி  சந்தித்து தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள், ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆகியவற்றை கைவிட  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அத்தகைய செயல்களை இந்து சாஸ்திரங்கள் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார். அதைக் கேட்ட காந்தியடிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தினால் உயர்சாதி இந்துக்களின் ஆதரவு தமது போராட்டங்களுக்கு கிடைக்காதோ என்ற ஐயம் காந்தியடிகளின் மனதில் உருவானது.

சங்கராச்சாரியாருடனான சந்திப்புக்குப் பிறகு நாராயண குருவை சந்திக்க வேண்டுமா? என்ற ஐயம் காந்தியடிகளின் மனதில் எழுந்தது. சாமியார்கள் மீது நம்பிக்கை இல்லாத காந்தியடிகள் வழக்கமாக அவர்களை சந்திக்க மாட்டார். ஆனாலும் அரைகுறை மனதுடன் நாராயணகுரு அவர்களை காந்தியடிகள் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், நாராயணகுருவுடனான சந்திப்புக்குப் பிறகு வெகுநாட்களாக தமது மனதில் இருந்த ஐயங்கள் நீங்கி விட்டதாக தெரிவித்த காந்தியடிகள், நாராயணகுரு ஓர் அவதார புருஷர் என்றும் பாராட்டினார். காந்தியடிகளும் அந்த பாராட்டுக்கு நாராயணகுரு முழுக்க முழுக்க பொருத்தமானவர் என்பதில் ஐயமில்லை. 

நாளை....
ஆந்திர இட ஒதுக்கீட்டு வரலாறு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages