முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 22
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
21. பிரதமர் நரசிம்மராவ் வீடு முன் பா.ம.க.
நடத்திய போராட்டமும், அதிர்ந்த தில்லியும்!
‘‘இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் பல கட்சிகள் உள்ளன. ஆனால், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மட்டுமின்றி தில்லி வரை சென்று போராடிய ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்’’
- பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக்கான கட்சி என்று மேற்கண்டவாறு சான்றிதழ் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல.
மாறாக, தேசிய அளவில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 1978-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலும், வட இந்தியாவிலும் பல்வேறு இயக்கங்களை நடத்தி வெற்றி பெற்ற மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெரியவர் ஆனைமுத்து அவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதிப் போராட்டங்களைப் பாராட்டி மேற்கண்டவாறு சான்றிதழ் அளித்தார்.
ஆம்.... இப்போது நினைத்தாலும் மலைப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது. சமூகநீதிக்காகவும், அதன் அங்கமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும் அவ்வளவு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்ததில்லை. ஏன்? .... இந்திய அளவில் கூட எந்தக் கட்சியும் இந்த விஷயத்தில் பா.ம.கவுக்கு இணையாக முடியாது.
இப்போதும் சவால் விட்டு கூறுகிறேன்.... சமூக நீதிக்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அளவுக்கு போராட்டங்களை வேறு எந்தக் கட்சியாலும் நடத்த முடியாது. அவ்வளவு ஏன்?.... பா.ம.க. தொடங்கிய நாள் முதல் இன்று வரை சமூகநீதிக்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களை பட்டியலிடுவது கூட தமிழகத்தில் இன்றுள்ள கட்சிகளால் முடியாது. அந்த அளவுக்கு சமூகநீதிக்கான இயக்கங்களை நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. அந்த வகையில் பெரியவர் ஆனைமுத்து கூறியது 100% உண்மை.
பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையிலேயே சமூகநீதிக் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் அதாவது 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அறிவித்தார். இடைப்பட்ட காலத்தில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானதுமே அதற்கு எதிராக வட மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தில் மண்டல் ஆணைய பரிந்துரை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை. ஆனால், காஞ்சிபுரம் நகரத்தில் ஒரு சில முணுமுணுப்புகள் எழுந்தன. அந்த நேரத்தில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தியதற்காக பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் நன்றி அறிவிப்பு பேரணிகளை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்தது.
நன்றி அறிவிப்பு பேரணிகள்
முதல் நன்றியறிவிப்பு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. எனது தலைமையில் நடைபெற்ற பேரணியில் பா.ம.க. தலைவர் பேராசிரியர் தீரன், சி.ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்திய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘‘ வாழிய, வாழிய, வாழியவே.... வி.பி.சிங் வாழியவே.... மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நிரைவேற்றிய வி.பி.சிங் வாழியவே’’ என்று உரத்தக் குரலில் ஆக்ரோஷமாக முழக்கமிட்டுக் கொண்டே நான் வேகமாக நடந்து முன்னே செல்வேன். அதே முழக்கத்தை ஒலித்துக் கொண்டே மற்றவர்கள் என்னை பின்தொடர்ந்து வருவார்கள். நான் நடந்து செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நிர்வாகிகளில் பலர் வேகமாக ஓடி வருவார்கள். அந்த அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நன்றி அறிவிப்பு பேரணிகள் உற்சாகமாக நடந்தன.
வேலூர் உள்ளிட்ட இரு மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பேரணிகளில் மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெரியவர் ஆனைமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 24.10.1990-இல் விழுப்புரத்தில் நன்றி அறிவிப்புப் பேரணியை நானே தலைமையேற்று நடத்தினேன். ஒரு மாத அவகாசத்திற்குள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நன்றி அறிவிப்பு பேரணிகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முழு அடைப்பு
மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியதற்காக பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேரணிகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்திக் கொண்டிருந்த போது, அடுத்தடுத்து இரு செய்திகள் இதயத்தைத் தாக்கின. முதலில் 27% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 01.10.1990-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அடுத்த சில நாட்களில் அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 27% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்பாத பாரதிய ஜனதாக் கட்சி, வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து 1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் தோல்வியடைந்து பதவி விலகினார். மற்றொருபுறம் சந்திரசேகர் தலைமையில் தமது ஆதரவுடன் பொம்மை அரசு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த தீமைகளுக்கு எதிராகவும் பா.ம.க. போராடியது.
மண்டல் குழு பரிந்துரைகளை செயல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்தும், அந்தத் தடையை நீக்க வலியுறுத்தியும் 19.10.1990-இல் தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, 02.01.1991-இல் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் முன்பாக, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது.
அதுமட்டுமின்றி, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்திய வி.பி.சிங் அரசைக் கவிழ்த்து விட்டு,புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகரைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 10.11.1990-இல் அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது.
பிரதமர் நரசிம்மராவ் வீட்டு முன் போராட்டம்
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் ஆணைக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை ஓராண்டாகியும் நீக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இன்னொரு அரசாணையை நரசிம்மராவ் தலைமையிலான அரசு பிறப்பித்தது. அதை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. 27% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கும், 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணையும், தீர்ப்பும் மேலும் தாமதமாகலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற தடையை நீக்கி 27% இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியும் தில்லியில் பிரதமர் நரசிம்மராவ் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அந்தப் போராட்டத்திற்கான நாளாக 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி குறிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என சுமார் 700 பேர் சென்னையிலிருந்து தில்லிக்கு தொடர்வண்டியில் சென்றோம்.
19.10.1991 பிற்பகல் 2.00 மணிக்கு பிரதமர் நரசிம்மராவ் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்....
அதற்கு முன்பாக 2 கி.மீ தொலைவிலிருந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக சென்றோம். சென்னையிலிருந்து 700 பேர் சென்ற நிலையில் அவர்களை விட கூடுதலாக 50 அல்லது 100 பேர் மட்டும் தான் ஊர்வலத்திலும், போராட்டத்திலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாங்களே வியக்கும் அளவுக்கு 2500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்திலும், போராட்டத்திலும் கலந்து கொண்டனர். தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் எங்களின் போராட்ட அழைப்பை ஏற்று பெருந்திரளாக வந்திருந்தனர். எங்களின் மிக நீண்ட ஊர்வலத்தைப் பார்த்து தில்லி அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அங்குள்ள ஊடகங்களும் வியந்தன. தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்குச் சென்று போராட்டம் நடத்திய எந்தக் கட்சிக்கும் எங்களுக்கு கூடிய அளவுக்கு கூட்டம் கூடியிருக்காது. போராட்டத்திற்காக குவிந்த பா.ம.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தலைநகர் தில்லி குலுங்கியது.
ஊர்வலம் முடிவடைந்தவுடன் பிரதமர் நரசிம்மராவ் வீட்டு முன் நடைபெற்ற போராட்டத்திற்கு நான் தலைமையேற்றேன். அப்போதைய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன், அன்றைய பொதுச் செயலாளர் தலித் எழில்மலை, பொருளாளர் குணங்குடி ஆர்.எம்.அனீபா, அன்றைய தொண்டர் அணித் தலைவரும், இன்றைய பா.ம.க. தலைவருமான ஜி.கே.மணி, சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, பாதிரி கோவிந்தசாமி, சி.ஆர்.பாஸ்கரன், இராம. முத்துக்குமார், உத்திரமேரூர் விஸ்வநாதன், சந்தானமூர்த்தி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெரியவர் ஆனைமுத்து, லோக்தளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இராம் அவதேஷ்சிங், அன்றைய ஜனதாதள மூத்த தலைவர்களில் ஒருவரும், இன்றைய மத்திய அமைச்சருமான இராம்விலாஸ் பாஸ்வான், தலித் வாய்ஸ் ஆசிரியர் பெங்களூர் வி.கே. இராஜசேகர ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை அகற்றி, 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனைவரும் மத்திய அரசை வலியுறுத்தினர்.
தலைநகர் தில்லியின் அதிகார மையமான பிரதமர் இல்லத்திற்கு அருகில் நாங்கள் போராட்டம் நடத்திய போது, அந்த பகுதி முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகளாக காட்சியளித்தது. எனது இளையமகளும், அப்போதைய இதழியல் மாணவியுமான கவிதா அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், பேரணி மற்றும் போராட்டக் காட்சிகளை புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதி பயணத்தில் அந்த போராட்டம் முக்கிய மைல்கல்லாகும்.
27% இட ஒதுக்கீட்டுக்காக மாநிலங்களுக்கு
சென்று ஆதரவு திரட்டினேன்!
வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் கூட, அந்த வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அடிப்படையான கல்வியில் இட ஒதுக்கீட்டை பெறுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. கல்வியில் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக 2006-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரி தலைவர்கள் கூட்டத்தில் நான் நடத்திய போராட்டங்கள், அதன் பயனாக கல்வியில் 27% இட ஒதுக்கீடு கிடைத்தது குறித்து 13-ஆவது அத்தியாயத்தில் விரிவாக விளக்கியிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் போராடியதால் மட்டும் இட ஒதுக்கீடு கிடைத்து விடவில்லை. மாறாக இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக அக்கூட்டத்திற்கு முன்பும், அக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின்படி அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக கூட்டத்திற்கு பிறகும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டியிருந்தது. கல்வியில் 27% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், போராட்டத்தின் தேவையற்ற தன்மை குறித்து மக்களிடம் விளக்கி, 27% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதும் எனது பயணத்தின் கூடுதல் நோக்கமாகும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பே, அதாவது 2006-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதியே, கல்வியில் 27% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னையில் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் உரையாற்றிய நான்,‘‘ தேசிய அளவில் கல்வியில் 27% இட ஒதுக்கீட்டைப் பெறவும், சென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். அதேநேரத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழ்நாடு தலைவர் என்ற முறையிலும் இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்க முதலமைச்சர் கலைஞர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினேன். ஆனால், 27% இட ஒதுக்கீடு விவகாரத்தில் கலைஞர் கடைசி வரையில் எந்த உதவியும் செய்யவில்லை.
அதைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு மே மாதம் 15, 16, 17 ஆகிய 3 நாட்களும் தலைநகர் தில்லியில் தங்கி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வியில் 27% இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வதற்காக கூட்டணி தலைவர்களைச் சந்தித்து பேசினேன். மே 15-ஆம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகிய தலைவர்களை சந்தித்து, கல்வியில் 27% இட இதுக்கீடு வழங்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை அவர்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டனர்.
மே 16-ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங்கை சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதித்தேன். 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உயர்சாதி மாணவர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும் விவாதித்தோம். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி உயர்சாதி மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக கூடுதல் இடங்களை வாங்கி அனுபவித்து வருவதை அவரிடம் சுட்டிக் காட்டினேன். அதைக் கேட்ட அர்ஜுன்சிங், தேசிய அளவிலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இடங்கள் குறையாத அளவுக்கு கூடுதல் இடங்களை ஏற்படுத்திக் கொடுத்தாவது 27% இட ஒதுக்கீட்டை நிச்சயம் செயல்படுத்துவோம் என்று என்னிடம் உறுதியாகக் கூறினார். அது எனக்கு நம்பிக்கை தந்தது.
தொடர்ந்து தில்லியில் சமூகநீதித் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரையும் சந்தித்து 27% இட ஒதுக்கீட்டுக்காக ஆதரவு திரட்டினேன். தில்லியில் இருந்தபடியே பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். மே 17-ஆம் தேதி மண்டல் இட ஒதுக்கீட்டு நாயகர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து அவர் அமைத்துக் கொடுத்தப் பாதையில் கல்வியில் 27% இட ஒதுக்கீடு பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கினேன்.
மே 15, 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் தில்லியில் நான் நடத்திய சந்திப்புகள் தான் மே 23-ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் எனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக மற்ற தலைவர்கள் திரும்புவதற்கும், 27% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கும் காரணமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அத்துடன் எனது பணி முடிவடைந்து விடவில்லை. 27% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அதைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கவும், 27% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்டவும் மாநிலத் தலைநகரங்களுக்கு படை எடுத்தேன். தில்லியில் இருந்து நேரடியாக மே 25-ஆம் தேதி மும்பை சென்ற நான், அங்கு மராட்டிய மாநில துணை முதல்வரும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சகன் புஜ்பல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினேன். தொடர்ந்து சகன் புஜ்பலுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தேன். 27% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களை மருத்துவ மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். எனது முயற்சிக்கு மராட்டிய தலைவர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
மராட்டிய மாநில பயணத்தைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி பெங்களூரில் அப்போதைய மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான சித்தராமைய்யா உள்ளிட்ட தலைவர்களுடன் 27% இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினேன். இந்த சந்திப்பின் போது 27% இடஓதுக்கீட்டுக்காக தொடக்கம் முதல் போராடி வரும் இராம் அவதேஷ்சிங், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து இட ஒதுக்கீட்டைக் காப்பதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிகள் குறித்து விரிவாக விளக்கினேன்.
மே 25-ஆம் தேதி மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேசினேன். என்னுடன் இராம் அவதேஷ்சிங், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர். மேற்குவங்க தலைவர்களுடனான சந்திப்பு சுமூகமாக முடிவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், 27% இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே பத்திரிகையாளர்கள் வினா எழுப்பினார்கள். அவர்களின் அனைத்து ஐயங்களுக்கும் நான் விடை அளித்தேன். ஆனாலும், அவர்களின் மனநிலை மாறவில்லை.
மே 27-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவுக்கு சென்றோம். என்னுடன் இராம் அவதேஷ்சிங், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர். லக்னோவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினோம். அதன் விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிக் கூறினேன். தொடர்ந்து பிகார், ஒதிஷா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் சென்று அம்மாநிலத் தலைவர்களை சந்தித்து 27% இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கினேன். அனைத்து மாநிலங்களிலும் தலைவர்களுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினேன். இவற்றில் பெரும்பாலான சந்திப்புகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பேராசிரியர் மு.இராமதாசும் என்னுடன் இருந்தார். இத்தகைய பரப்புரையால் அடுத்த சில நாட்களில் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, 2006-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு நான் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியக் காரணமாகும்.
சமூகநீதிக்கான இயக்கங்கள்
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்து தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் பல்வேறு இயக்கங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது.
2000-ஆவது ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதில் தில்லியில் உள்ள தல்கோத்ரா அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அகில இந்திய சமூகநீதி மாநாடு நடைபெற்றது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தான் இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மாநாட்டுக்கு இரு நாட்கள் முன்பு கூட மாநாட்டு நிகழ்வுகள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ஆனால், மாநாட்டுக்கு முன் அவருக்கு தொண்டைவலி ஏற்பட்டதால் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி விட்டதால் அவரால் பங்கேற்க முடியவில்லை. மாறாக வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
எனது தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில், மக்களவைத் தலைவர் பாலயோகி, மத்திய அமைச்சர்கள் சரத்யாதவ், இராமவிலாஸ் பாஸ்வான், மம்தா பானர்ஜி, சந்தோஷ் கங்குவார், சமூகநீதித் தலைவர்களான சீதாராம் கேசரி ( காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்), முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார், ராஜேஷ் பைலட், தமிழ்நாட்டிலிருந்து வைகோ, டி.ஆர்.பாலு, சு.திருநாவுக்கரசு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டின் பங்கேற்ற அனைத்துப் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக பதவி வகிக்க மருத்துவர் இராமதாசு தான் தகுதியானவர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராஜேஷ் பைலட் அறிவித்தார். அதனடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.
இந்த மாநாட்டில் பேசிய நான், நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதனடிப்படையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது சமூக நீதி மாநாடு
2006-ஆம் ஜூலை 2-ஆம் தேதி தில்லியில் இரண்டாவது முறையாக சமூகநீதி மாநாட்டை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. மாவ்லாங்கர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை மண்டல் நாயகர் வி.பி.சிங் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வி. தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், பாரதிய ஜனதா சார்பில் சந்தோஷ் கங்குவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.இராஜா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சகன் புஜ்பல், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, பாரதிய ஜனசக்தி சார்பில் உமாபாரதி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சரத்யாதவ், கேரள மாநிலத்தில் நாராயணகுரு அவர்களால் தொடங்கப்பட்ட எஸ்.என்.டி.பி எனப்படும் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபா அமைப்பின் சார்பில் வெள்ளப்பள்ளி நடேசன், இராம் அவதேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீதித்துறையில் இட ஒதுக்கீடு கோரிக்கை
கீழமை நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2006-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி தில்லி மாவ்லாங்கர் அரங்கத்தில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எனது தலைமையில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி. சாவந்த் (இவர் மண்டல் ஆணையம் - இந்திரா சகானி வழக்கில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர்), கே.இராமசாமி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இரவிவர்மகுமார், ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் தேவேந்திர பிரசாத் யாதவ், சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவர் இராம்கோபால் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.
குடிமைப் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டிருப்பதைப் போலவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்ய அகில இந்திய நீதித்துறை பணியாளர் தேர்வாணையத்தை அமைக்க வேண்டும் என்று அந்த கருத்தரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உரிய பிரதிநித்துவம் கோரி பேரணி
மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது தலைமையில் 2007-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி தில்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டமும், பேரணியும் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தில் சீதாராம் யெச்சூரி, கே.வி.தங்கபாலு, டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.... சமூக நீதிக்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் குறித்து நினைக்கும் போதே வியப்பாக உள்ளது. இவ்வளவு இயக்கங்களை நடத்திய பிறகும் கூட முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க முடியவில்லை. இந்த பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், நானும் ஓயப்போவதில்லை. முழுமையான சமூகநீதி வென்றெடுக்கப்படும் வரை எனது போராட்டப்பயணம் தொடரும்.
நாளை....
சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளும், கலைஞர் அரசு பரிசளித்த துரோகமும்!
No comments:
Post a Comment