தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-23 06.06.2020
சட்டமன்றத்தில் பா.ம.க பங்களிப்பு சுருக்கமாக சில மட்டும்...
15 ஆண்டுகால பணியில் சில
பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டின் மனித வளர்ச்சி அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு.உடல் ஆரோக்கியமாய், சுகாதாரமாய் வாழ மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருவது மக்கள் நல்வாழ்வுத்துறை.
உடல் நலத்தைப் பற்றி
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
*சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
*சுத்தம் சோறு போடும்.
*ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
*கூழானாலும் குளித்துக் குடி
கந்தையானாலும் கசக்கிக்கட்டு என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளதை நினைவிற் கொள்ளவேண்டும்.
உயிர் காப்பது மருத்துவம். கட்டிடத்திற்கு அடித்தளம், வண்டிக்கு அச்சாணி,கப்பலுக்கு கலங்கரை விளக்கம் என்பது போல் மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்வு என்பது உடல் நலமே. நோயில்லா பெருவாழ்வு வாழ வைப்பதே சுகாதாரத்துறையின் நோக்கம்.நமது முன்னோர்கள் சித்த மருத்துவத்தை மூலிகைகள் உள்ளிட்ட இயற்கையின் கொடையை அருமருந்தாக பயன்படுத்தினர். ஆயுர்வேத முறையையும் கையாண்டுள்ளனர்.
காலப்போக்கில் மக்கள்தொகை பெருக்கம்,இயற்கை மாற்றங்கள், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களினால் பல்வேறு வகையில் நவீன,அறிவியல் மருத்துவத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம்வயதிலேயே உடல் பருமன்,இதயநோய்,சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம்,சிறுநீரக நோய், புற்றுநோய்,பெண்கள் பிரசவம், கல்லீரல்-கணைய நோய், குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவின் நோய் போன்ற உயிருக்கு ஊறு விளைவிக்கும் புதுப்புது நோய்கள்,நவீன மருத்துவ வளர்ச்சிக்குமேல் மக்களை தாக்குகின்றன.
மக்களுக்கான மொத்த மருத்துவச் செலவில் 65% அளவுக்கு மக்களே செலவு செய்யும் நிலை தான் உள்ளது.மீதி 35% அளவுக்கு அரசு ஒதுக்கீட்டின் மருத்துவச் செலவு.
மருத்துவம் மக்களின் உயிர் காப்பது.ஆரோக்கியமான மக்களாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.
எனவே அனைவருக்கும் உலகத் தரத்திற்கு இணையான மருத்துவத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் சொல்லி வருவது நமது நாட்டின் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி)க்கு கிடைக்கிற மருத்துவ வசதி கிராமப்புறத்தில் இருக்கிற சாதாரண ஏழைக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
ஒரு ஏழைக்கு இதய அறுவை சிகிச்சை,சிறுநீரக மாற்று,வேறு உறுப்பு மாற்று,புற்றுநோய் சிகிச்சை என்றால் இருக்கின்ற வீட்டை,நிலத்தை விற்று கடன் வாங்கியோ செலவழிக்கும் நிலை உள்ளது.ஒருவர் நோய்வாய் பட்டாலே அது கடன்கார குடும்பமாகிவிடும். உலகின் முக்கிய நாடுகளில் உள்ளதைப்போல் நமது நாட்டில் எல்லோருக்கும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அரசே மருத்துவம் வழங்க வேண்டும்.அதற்கு அரசு மருத்துவமனைகள் எல்லா வசதிகளும் கொண்ட தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
அமைச்சர்:ஜி.கே.மணி அவர்களே, நீங்கள் பல நாட்கள் பேசி வருகின்றீர்கள். அரசு மருத்துவ மனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறதே.முன்பு இருந்ததற்கும் இப்போதைக்கும் எவ்வளவு முன்னேற்றம்.நீங்களும் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றீர்கள்.
ஜி.கே.மணி:அமைச்சர் அவர்களே, நான் மறுக்கவில்லை இருந்தாலும். மக்களின் நோய் தேவைக்கேற்ப இலவச,தரமான மருத்துவத்திற்கு போதாது.உலகில் ஐஸ்லாந்து, நெதர்லாந்து,நார்வே, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமது நாடு உலக அளவில் 145 வது இடத்தில் உள்ளது.இது உலக நாடுகளின் வளர்ச்சிக்கு இணையானதா ? சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆயிற்று! நமது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 1% மட்டுமே சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.நாட்டின் ராணுவத்திற்கு தேவைதான்.அதே நேரத்தில் மக்கள் உயிர் காக்கும் துறைக்கு,மக்கள் உடல்நலம் காக்கும் துறைக்கு 1% நிதி போதாதே! குறைந்த பட்சம் 2% ஆவது ஒதுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் (SUGAR) 10 1/2 % பேர்,உயர் ரத்த அழுத்தம் 20% பேர்,உடல் பருமன் 23% பேர்,குழந்தை பிறப்பில் சிசு மரணம் 1000 க்கு 21,பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 68 என உள்ளது.இதை மேலும் குறைப் பதற்கான நடவடிக்கை வேண்டும்.
கிராமப்புறங்களிலும் ஏழைகள் அதிகம்,நகரப்பகுதிகளில் குடிசைகளில் வாழ்வோர் 30%. முன்பெல்லாம் ஏறக்குறைய 65 வயதில் மாரடைப்பு சிலருக்கு வரும். தற்போது பார்த்தால் 35 வயதில்,45 வயதில் மாரடைப்பு,மரணம் என்கிற நிலை. தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) சுகாதாரத்திற்கு அச்சாணியாக உள்ளது.30,000_35,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தேவைக்கேற்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகப்படுத்த வேண்டும்.5,000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக (UPGRADED PRIMARY HEALTH CENTRE) ஆக உயர்த்தப்பட்டு,அவற்றில் அறுவை சிகிச்சை அரங்கம்,மகப்பேறு மருத்துவர்,மற்ற சிறப்பு (SPECIALIST) மருத்துவர்கள்,சித்த மருத்துவப் பிரிவு,உரிய செவிலியர்கள், தேவையான அளவு அனைத்துவகை மாத்திரைகள்,மருந்துகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்டதாக தமிழ்நாடு முழுவதும் உருவாக்க வேண்டும்.
எங்கள் பென்னாகரம் தொகுதி, வட்டத் தலைநகர் பென்னாகரம் ஆரம்ப சுகாதார நிலையம்(PHC) குறுகலான இடத்தில் போதிய வசதியில்லாமல் உள்ளது. இடமாற்றம் செய்து,வட்ட மருத்துவமனையாக உயர்த்த வேண்டும்.பின்னர் வட்ட மருத்துவமனை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட மருத்துவமனை. ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும். இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்தப்பட வேண்டுமென பட்டியல் கொடுத்தோம்.ஒவ்வொன்றாக தரம் உயர்த்தப்பட்டது.
தர்மபுரி மாவட்ட மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி உள்ளிட்டவையும் சிறப்பு மருத்துவர்களும் இல்லை. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் வட்ட,மாவட்ட மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ (M.R.I) ஸ்கேன் வசதி,இதய அறுவை சிகிச்சை,நரம்பியல்,சிறுநீரகம், எலும்பு முறிவு,மயக்கவியல், கண்-காது-மூக்கு- தொண்டை பிரிவுகளும்,டயாலிசிஸ் பிரிவு,சிறப்பு மருத்துவர்களும் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் வட்ட மருத்துவமனையாகவும்,வட்ட மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் படிப்படியாக செய்யப்பட்டு வந்தன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி துவங்க வேண்டுமென வற்புறுத்தி வருகின்றோம்.அரசு செய்யவில்லையே என தொடர்ந்து வாதாடி வந்தோம்.பின்னர் வேலூர், தூத்துக்குடி,தேனி ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. நமது மருத்துவ பிரிவுகளான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்,மருத்துவக் கல்வி, ஹோமியோபதி,ஆயுர்வேதா,ஈ.எஸ். ஐ,குடும்ப நலத்துறை பிரிவுகள் அனைத்தையும் மேம்படுத்த வேண்டும்.
(அடுத்து)
ஜி.கே.மணி:முக்கிய செய்தியை குறிப்பிடுகின்றேன்.அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடன் எங்கள் மருத்துவர் அய்யா அவர்களிடத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென்று கேட்டபோது,குடியரசுத் தலைவருக்கு கிடைக்கிற மருத்துவ வசதி சாதாரண ஏழைக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டுமென வாழ்த்திச் சொன்னார்.
அதை ஏற்ற மத்திய அமைச்சர் அன்புமணி அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) திட்டம்,எல்லோராலும் பாராட்டப்படுகின்ற தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம்(NRHM) என்று சொன்னவுடன்.
அமைச்சர்(குறிக்கிட்டு):108 ஆம்புலன்ஸ் திட்டம் தமிழ்நாட்டில் எங்கள் அரசு மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார். உடனே நானும் பா.ம.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரே சத்தம் போட்டோம். அமைச்சர் இப்படி அப்பட்டமாக மாற்றிப் பேசுகிறாரே.உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்தது யார்? இந்தியா முழுவதும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் கொண்டு வந்தார் என நாடே சொல்கிறது.கர்நாடகா,ஆந்திரா, கேரளா,மகாராஷ்டிரா,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் நீங்கள்தான் கொண்டு வந்தீர்களா? என்று இதற்கு மேலும் நிறைய சொன்னோம்.பா.ம.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றவர்கள் உட்காராமல் பேசிக்கொண்டேயிருந்தோம்.
அமைச்சர் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அன்புமணி அவர்கள்தான் கொண்டு வந்தார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.அதோடு எல்லோரும் பாராட்டுகின்ற தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் (NRHM) எவ்வளவு அற்புதமான திட்டம்.இதனால் எல்லா மாநிலங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு.தமிழ்நாட்டிலும்,இந்தியா முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கட்டிட வசதி, மருத்துவர்கள்_செவிலியர்கள் நியமனம்,தேவையான அளவு மருந்து_மாத்திரைகள் அந்த மருத்துவர் அலுவலரே வாங்கிக்கொள்ள நிதி,குடிநீர் வசதி, மகப்பேறு வசதி,எல்லா கிராமங்களுக்கும் ஆஷாக்கள் நியமனம் செய்ய திட்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை மருத்துவர் அன்புமணி அவர்கள் கொடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடை சட்டம் கொண்டு வந்தவர். சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், சென்னை எழும்பூர் கண் மருத்துவ ஆராய்ச்சி மைய மேம்பாடு,மகப்பேறு மருத்துவ மேம்பாடு,சேலத்தில் அதிநவீன சிறப்பு மருத்துவமனை (SUPER SPECIALITY HOSPITAL), மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கம்,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மிகப்பெரிய அளவில் மேம்பாடு,காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மைய மேம்பாடு என ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.அவரின் சிறப்புகளை பாராட்டி உலக அளவில் உயரிய விருதுகள் 4 பெற்றுள்ளார். இது தமிழ்நாட்டிற்கு பெருமை.
(மீண்டும்)
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் மருத்துவக் கல்லூரி துவங்க ஒப்புதல் வழங்க தயாராக உள்ளார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை துவங்குங்கள். மக்களுக்கு மருத்துவ வசதி மேம்படும்.முதலில் தர்மபுரிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
(நான் முன்பே குறிப்பிட்டுள்ளதைப் போல தர்மபுரி,திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டன).
முதலமைச்சர் அவர்களே,மாவட்ட மருத்துவமனை உள்ள இடங்களில் எல்லாம் செவிலியர் பயிற்சிக் கல்லூரி துவங்க வேண்டும். மருத்துவர்கள் செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகிறார்கள்.அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து,ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். சென்னை அரசு பொது மருத்துவமனையை இன்னும் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும். நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்கும் நிலையுள்ளது.
அறுவைசிகிச்சை நேரத்திலும் மிக அவசர தேவைக்கும் நோயாளிகளின் உயிர் காக்க இரத்த சேமிப்பு வங்கி எல்லா மருத்துவமனைகளிலும் துவங்க வேண்டும். ஏழைகளின் கஷ்டத்தை போக்க அமரர் ஊர்தி இல்லாத மருத்துவமனைகளுக்கு வாகனம் வழங்க வேண்டும்.ஆங்காங்கே குளிரூட்டப்பட்ட பிரேத பரிசோதனை அறை கட்டாயம் இருக்க வேண்டும்.
பள்ளிகளிலேயே மாணவ மாணவி களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும். எல்லோருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
முதலமைச்சர் அவர்களே, நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்தால் சிகிச்சை பெற்று,குணமடைந்து, மகிழ்ச்சியோடு வீட்டிற்கு திரும்பும் நிலை வர வேண்டும். இந்தியா விலேயே தமிழ்நாட்டில்தான் உலகத்தரத்திற்கு இணையான, சென்னை அப்பல்லோ மருத்துவமனையைப் போல அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதி உள்ளது என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கி எல்லோருக்கும் ஒரு ரூபாய் செலவில்லாமல் மருத்துவ வசதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்னும் உலகப் பொதுமறை கூற்றின்படி நோயை ஆராய்ந்து, நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து,நோயைத் தீர்க்கும் வழிகளையும் அறிந்து, நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு செய்வதே சிறந்த மருத்துவம் ஆகும். என்பதற்கிணங்க மக்கள் நல்வாழ்வு த்துறை மேம்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் மருத்துவம்,தலை சிறந்த மருத்துவம்,எல்லோருக்கும் தரமான இலவச மருத்துவம் என்பதை நோக்கமாகக் கொண்டு அரசு திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.
மற்ற நிகழ்வுகள் நாளை தொடரும்... பகுதி-24
No comments:
Post a Comment