தமிழக சட்டமன்றத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-26. (10.06.2020 )
சட்டமன்றத்தில் பா.ம.க பணி சில சுருக்கமாக...
தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.அதைத் தடுக்க அரசின் நடவடிக்கை என்ன ? காவல் துறைக்கான கோரிக்கைகள்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்.நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது. குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது. தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் சட்டத்தின் நோக்கம். ஆனால் சட்டத்தில் ஓட்டையை உருவாக்கி தப்பித்துக் கொள்கிறார்கள்.காவல்துறையும் செல்வாக்கு படைத்தவர்களும் அப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு உதவி செய்கிறார்களே.இதுதான் இன்றைய உண்மை நிலை.
சட்டத்தின் நடைமுறை ஏழைகளைப் பார்த்தால் எட்டி உதைக்கிறது. வலியவர்களைக் கண்டால் வளைந்து கொடுக்கிறது நெலிந்து போகிறது.
காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளிக்கிறார்.அதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உண்மையிலேயும் குறிப்பிட்டிருக்கலாம்.சிலர் தனக்கு வேண்டாதவர்களை பழி வாங்க வேண்டுமென்பதற்காகவோ,மற்றவர் தூண்டுதலின் பேரிலோ நடக்காத சம்பவங்களாக பொய்யாக புனைந்தும் கொடுக்கிறார்கள். இந்தப் புகாரை பெற்று உடனே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுகிறது.குற்றமே செய்யாதவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர், பிணையில் வெளி வருகின்றார்.சில நேரத்தில் கடுமையான குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து,கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவர முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதன் பின்னர் நீண்ட காலம் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுவதில்லை.அவர் நீதிமன்றத்திற்கு அலைந்தே தீர வேண்டும்.இது ஒரு வகையான நடைமுறையாகவே உள்ளது.
இன்னொரு பக்கம் கொலையோ, கொள்ளையோ,நில அபகரிப்போ என கொடிய குற்றம் செய்தவர் மீது புகார் கொடுக்கப்பட்டால் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் மீது (FIR) போடாமலே தப்பித்து வருவதும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் பரவலாக நடந்து வருகிறது.இது சட்டத்தை பாதுகாப்பதாக அமையுமா? குற்றம் செய்யாதவர்கள் தண்டனை அனுபவிப்பது நியாயமா? குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டாமா ? தப்பிக்க வழி வகுக்கப்படுகிறதே ! இதுபோன்ற சம்பவங்கள் பற்றி நானும் தொடர்ந்து வலியுறுத்திதான் வருகின்றேன்.
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி அவர்களே,இவ்வாறு நீங்கள் பொதுவாக குற்றம் சுமத்தக்கூடாது. எதுவென்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்,நடவடிக்கை எடுக்கின்றேன்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,சில சம்பவங்களை உங்களிடம் கூறி இருக்கின்றேன். நிறைய செய்திகளை இதே அவையில் சுட்டிக்காட்டி பேசியிருக்கின்றேன்.
தேசிய குற்ற ஆவணக் காப்பக வெளியிட்டு வருகின்ற புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழ்நாட்டில் கொலை,கொள்ளை, மோசடி,கூலிப்படை,வழிப்பறி, ஆள்கடத்தல்,பெண்கள் பாலியல், வன்கொடுமை போன்றவை அதிகம் நடந்துள்ளது.இதை கட்டுப்படுத்த வேண்டாமா ? (பட்டியல் படித்தேன்).
காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதில் ஏற்படும் பாதிப்புகள்,பிரச்சனைகள் பொய் வழக்கு போடுவது குறித்து பலமுறை இங்கே கவனத்திற்கு கொண்டுவந்து இருக்கின்றோம்.இது தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இதற்கு முடிவு வராது போலிருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் இது குறித்து அறிவுறுத்தி சீர்செய்ய வேண்டும்.
FIR போடும்போது உரிமையியல் வழக்குகள் (CIVIL CASES),குற்றவியல் வழக்குகள் (CRIMINAL CASES) என்றுதான் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக கைது செய்து நீதிமன்றக் காவல்,காவல் நிலையக் காவல், இந்த இரண்டில் குற்றவாளியை வைக்க வேண்டும்.இதில் 24 மணி நேரத்திற்கு மேல் காவல் நிலையத்திற்குள் வைத்திருக்கக் கூடாது.ஆனால் நாட்கணக்கில் காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருப்பது,அதில் அடித்து, உதைத்து சித்திரவதை செய்வதுமான கொடுமைகள் அரங்கேறி வருகிறது.அதோடு காவல் நிலையத்தில் மரணம் என்ற செய்திகளும் வந்துகொண்டிருக் கின்றன. இது எவ்வளவு பெரிய சட்டமீறல்கள்.இது போன்றவற்றில் முதலமைச்சர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்து வதற்கு,தேவையற்ற, பாதிப்பான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் மறுக்கப்படுகிறது. அவர்கள் மீது வழக்குப் போடுவது அதிலும் சில வழக்குகள் காவல்துறையை ஆயுதங்கள் வைத்து தாக்கினார்கள். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு பழிவாங்குவது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கை. அரசியல் கட்சிகளை பழிவாங்கும் போக்கு தமிழ்நாட்டில் தான் அதிகம் நடந்து வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அமைச்சர்:ஜி.கே.மணி அவர்களே, நீங்கள் சொல்கின்ற குற்றச்சாட்டுகள் முன்பு நடந்திருக்கலாம்.தற்போது அப்படி இல்லை.
ஜி.கே.மணி:அமைச்சர் அவர்களே, தற்போதும் நடந்து வருவதைதான் சொல்கின்றேன்.அவையில் எப்போது பேசினாலும் உண்மை இல்லாமல் ஆதாரம் இல்லாமல் தவறான தகவல்களை சொல்லியதே இல்லை.இது முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். பா.ம.க உறுப்பினர்கள் முக்கியமான பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரால் தமிழ்நாடு அதிரடிப்படை, கர்நாடகா அதிரடிப்படை கூட்டு நடவடிக்கை என்ற பெயரில் தர்மபுரி, சேலம்,கிருஷ்ணகிரி,ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் எல்லையோர தமிழர்கள் வாழும் கிராம பகுதிகளிலும் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது.விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கர்நாடக அதிரடிப்படை முகாம்களில் வைத்து நடத்தப்படும் சித்திரவதைகள்,பின் காடுகளுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு பிணத்தை கிடத்தி வரும் கொடுமை.விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்ற பட்டியல் உண்டு.குடும்பங்களின் சோகக் கதை.கிராமங்களின் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் வெளியில் சொல்ல முடியாமல் ஊமைகளாக இருக்கும் நிலை.(இதை முதலமைச்சர் அவர்களிடம் சொன்னேன்.
இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் போன்றது.விசாரணை முகாமில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடிப்பது,ஆண்கள் பெண்கள் உறுப்புகளில் மின்சார ஷாக் கொடுப்பது போன்ற கொடுமைகள் இதற்கு அவையில் எதிர்ப்பு குரல் மேலோங்கி இருந்தது). கர்நாடக மாநில சிறையில் அப்பாவி மக்கள் நீண்ட காலமாக விசாரணை ஏதும் இல்லாமல் சிறைக்கொடுமை அனுபவித்து வருகிறார்கள்.(நீண்ட காலம் கழித்து கர்நாடகத்தில் இந்த மனித உரிமை மீறல் பிரச்சினை முன்வைக்கப்பட்டு, அம்மாநில அரசு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி,பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறது) இதை கட்டுப்படுத்த வேண்டும். கிராமப்புற அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும்.(பலமுறை வலியுறுத்தினோம்).
(மீண்டும் ஒரு நாள்)
முதலமைச்சர் அவர்களே,தமிழ்நாடு காவல் துறையில் தலைமை இயக்குனர்(DGP),கூடுதல் தலைமை இயக்குனர்(ADGP),காவல்துறை தலைவர்(IG),காவல்துறை துணைத்தலைவர்(DIG),ஆணையர் (CITY COMMISSIONER),காவல்துறை கண்கானிப்பாளர்(S.P),இணைக் கண்கானிப்பாளர்(JSP),கூடுதல் கண்கானிப்பாளர்(ADSP),உதவி கண்கானிப்பாளர்(ASP),துணை கண்கானிப்பாளர்(DSP),ஆய்வாளர் (INSPECTOR),உதவி ஆய்வாளர்(SUB_ INSPECTOR),தலைமைக்காவலர் (HEAD CONSTABLE),முதல் நிலை காவலர்(PC-1),இரண்டாம் நிலை காவலர் (PC-2),இதற்குள் எழுத்தர் (WRITER ) உள்ளிட்ட பதவிகள் உள்ளன.தமிழ்நாடு காவல் எல்லை வடக்கு,மத்திய,மேற்கு,தெற்கு ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டும் சென்னை உள்ளிட்ட மாநகர பகுதிகள் மாநகர ஆணையரகமாகவும் நிர்வகிக்கபடுகிறது.காவல்துறை பிரிவுகளின் பொறுப்பு அதிகாரி கள்,பதவிகளுக்கு தகுந்தவாறு எல்லைகள் வகுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
காவல்துறை பணியின் தன்மை மிகவும் கஷ்டமானது.தற்போது தீவிரவாதிகள் வன்முறையாளர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்துக்கொண்டு ரகசியமாக ஊடுருவி காவல் துறையினர் உயிரையும், பொதுமக்கள் உயிரையும்,பறிக்கும் கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. காவல்துறையில் பணிக்கு சென்றவர் சடலமாக வந்தால் குடும்பத்தினர் சோகம் எப்படி இருக்கும்? தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருவதைப்போல் கொலை, கொள்ளை,வழிப்பறி, திருட்டு,ஆள் கடத்தல், கூலிப்படை, பெண்கள் பாலியல் கொடுமைகள் போன்றவை அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் யாருடைய தலையீடும் இல்லாமல் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல்துறைக்கு இன்றைய காலகட்டத்திற்கு தேவையான நவீன ரக ஆயுதங்கள், ஒயர்லெஸ் உள்ளிட்ட கருவிகள், வாகனங்கள்,தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவை தேவையான அளவு அரசு வழங்க வேண்டும்.பெண்களும் காவல்துறையில் பணியாற்றுகிறார் கள்,அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.இதற்கு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
முதலமைச்சர் அம்மையார் அவர்கள்:மிஸ்டர் ஜி.கே.மணி அவர்களே,என்னுடைய ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறார்கள்.எங்கள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் காவல்துறையில் யாரும் தலையிடுவது இல்லை.எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தேவையான ஆயுதங்கள், கருவிகள்,வாகனங்கள்,கட்டிட வசதிகள் போதிய அளவிற்கு செய்து வருகின்றோம்.பெண்கள் கமாண்டோ பிரிவு உருவாக்கி,பயிற்சி பெற்று, அந்தப்பெண்கள் இன்று அற்புதமாக செயல்படுகிறார்கள். மிஸ்டர் மணி,நீங்கள் காவல் துறையைப் பற்றி இவ்வளவு அக்கறையோடு பேசுவதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,உண்மையான குறைகளை பா.ம.க நாங்கள் சுட்டிக் காட்டுவதற்கு தயங்குவதுமில்லை, நிறைகள் இருப்பின் பாராட்டுவதற்கும் தவறுவதில்லை, ஜனநாயகத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றோம்.
முதலமைச்சர் அம்மையார் அவர்கள்:ஜி.கே.மணி அவர்களே, நீங்கள் சொன்னமாதிரி இப்போது குற்றங்கள் குறைந்து இருக்கிறது. (இதோ பாருங்கள்_ ஆண்டின் குற்ற எண்ணிக்கை பட்டியலிட்டார்) எனது ஆட்சியில் குற்றவாளிகள் பயந்து அடங்கி இருக்கிறார்கள்.இதுவே எனக்கு பெருமை.
(மீண்டும்)
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,காவல்துறையில் பயிற்சி மிகவும் கடினமானது.அதை முடித்து பணிக்கு வந்த பிறகு அவர்கள் பணியின் தன்மை கடினமானது. இரவு பகல் என்று பாராமல் உழைக்க வேண்டும்.எந்த நேரம் பணிக்கு வர வேண்டும்,வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நேரம் கிடையாது.
உதாரணத்திற்கு முதலமைச்சர் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு காலை 10 மணிக்கு செல்கிறார் என்றால், காவல்துறையினர் அதிகாலை 5 மணிக்கே எழுந்து குளித்து உடை அணிந்து,6 மணிக்கு புறப்பட வேண்டும்.6 1/2 மணிக்கு வருகையில்(ரோல் கால்)இருக்க வேண்டும்.முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பிரித்து கொடுக்கப்படும் இடங்களுக்குச் சென்று சாலையோரங்களில் கடும் வெயில்,மழை என்று பாராமல் நின்று கொண்டேயிருக்க வேண்டும். முதலமைச்சர் சென்று நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்தவுடன் தான் காவல் நிலையம் சென்று பின்னர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
குடியரசுத்தலைவர்,பிரதமர்,கவர்னர் என முக்கியமானவர்களின் நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் என்பதோடு பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் ஓடவேண்டும். எனவே முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துவது பணியின் தன்மை உணர்ந்து சம்பளத்தை உயர்த்த வேண்டும்.இரவு பகல் பாராமல் பணிக்கு வருவதை தவிர்த்து எட்டு மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்,முதல் நிலை காவலர், தலைமை காவலர்,சார்பு ஆய்வாளர், ஆய்வாளர், துணைக்கண்கானிப்பாளர், கண்கானிப்பாளர் போன்ற எல்லா நிலைகளிலும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு சீக்கிரம் கிடைப் பதில்லை. எத்தனை ஆண்டுகள் இப்படியே உழைப்பது.
முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். காவல் துறையில் ஏட்டு ஐயா என்பவர் உள்ளார்.இவர்களுக்கு வெள்ளைக் காரர் காலத்திலிருந்து இன்றுவரை ஏட்டு ஐயா தான். உயர்பதவி ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் ஐயா என்று அழைப்பதில்லை,ஆனால் இவருக்கு மட்டும் ஏட்டு ஐயா என்ற பட்டம்.
இந்த ஏட்டு ஐயா,முதல் நிலைக் காவலராக இருந்து ஏட்டு ஆனவர் 15, 20,25 ஆண்டுகள் ஆனாலும் ஏட்டு ஐயாவாக இருந்தே ஓய்வு பெற வேண்டும்.இவர் குடும்பத்தில் மனைவி,பிள்ளைகள் கேட்பது, பொதுமக்கள் கேட்பது,ஏட்டு ஐயா உனக்கு பதவி உயர்வு வராதா என்பார்கள்.இவரும் வராது,இதே தான் என் தலையெழுத்து என்பார். இது எவ்வளவு மனக்கஷ்டம்.இந்த ஏட்டுக்கும் சப்-இன்ஸ்பெக்டருக்கும் சம்பள வித்தியாசம் குறைவுதான். இந்த ஏட்டுகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கொடுப்பதால் அரசுக்கு நிதிச் செலவு அதிகம் இருக்காது. முதலமைச்சர் அவர்கள் அதிகாரிகளை வைத்து கணக்கெடுத்துப் பாருங்கள்.இந்த ஏட்டுக்கு கிடைத்தது என்ன தெரியுமா? சட்டையில் கையின் மேல் பக்கம் இரண்டு வெள்ளைப் பட்டை கோடுதான்.இது போதுமா?
எனவே முதலமைச்சர் கலைஞர் அவர்களே,இந்த ஏட்டு அய்யாக்களுக்கு உடனே பதவி உயர்வு கொடுங்கள்.மற்ற எல்லா நிலைகளிலும் பதவிகளில் உள்ளவர்களுக்கும் 8 ஆண்டுகளுக்கு ஒருபடி (STEP) பதவி உயர்வு வழங்க வேண்டும்.
முதலமைச்சர் அவர்கள்: நண்பர் ஜி.கே.மணி அவர்களே,நீங்கள் வலியுறுத்துவது எனக்கு நன்கு புரிகிறது.கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொண்டு பரிசீலனை செய்கின்றேன்.
(மீண்டும் ஒரு நாள்)
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,காவல்துறையில் உள்ளவர்களின் பதவி உயர்வுகள் பற்றியும் ஏட்டு ஐயா பதவி உயர்வு பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.நீங்கள் கட்டாயம் பரிசீலனை செய்வதாக சொன்னீர்கள்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
முதலமைச்சர் அவர்கள்:நண்பர் மணி அவர்களே,என்னை நம்புவதாக சொல்கிறீர்கள்.நம்புங்கள்.நம்பிக்கை வீண்போகாது.நான் உயர் அதிகாரி களிடத்தில் கலந்து பேசினேன்.
எனவே காவல்துறையின் தலைமை காவலர் (ஏட்டுகள்) சப்-இன்ஸ்பெக்டர் ஆக பதவி உயர்வு வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளது.அதே நேரத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்று தலைமை காவலர்கள் ஏட்டுகள் அனைவருக்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் (SSI) என்ற பதவி உருவாக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.இனி அவர்கள் SSI என்று அழைக்கப்படுவார்கள்.பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
(அவையில் மேசையை தட்டும் சத்தம் மகிழ்ச்சி ஆரவாரம்)
இதைப்போல மற்ற எல்லா நிலை பதவியில் உள்ளவர்களுக்கும் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்கப்படும்(அறிவித்தார்).
முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தோம்.மற்ற கட்சி உறுப்பினர்களும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இவ்வாறுதான் தமிழ்நாட்டில் SSI பதவி உருவாக்கப்பட்டது. காலங்காலமாக பதவி உயர்வு கிடைக்காத பல ஆயிரக்கணக்கான ஏட்டு தகுதியிலிருந்தவர்களுக்கு SSI பதவி உயர்வு கிடைக்கப்பட்டது.
காவல்துறையில் நிறைய செய்திகள் உண்டு.சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.
நாளை தொடரும்... பகுதி-27
No comments:
Post a Comment