முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-3 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-3

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-3

இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து 1947-ஆம் ஆண்டில் தான் விடுதலை பெற்றது என்றாலும், அதற்கு முன்பாகவே விடுதலைக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. விடுதலைக்குப் பிறகு இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியல் நிர்ணய அவை 1946-ஆம் ஆண்டு திசம்பர் 9-ஆம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவைகள் இருந்த நிலையில், அவற்றின் உறுப்பினர்கள் வாக்களித்து தான் அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னாளில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜேந்திர பிரசாத் இந்த அவையின் தலைவராகவும் பதவி வகித்தார்.

அரசியல் நிர்ணய அவையின் முக்கியப் பணி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது ஆகும். அந்த பொறுப்பு அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட வரைவுக் குழுவின் தலைவராக அண்ணல் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்த குழுவுக்கு உதவுவதற்காக இந்திய குடிமைப் பணி அதிகாரியும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றிய பி.என்.ராவ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள அரசியலமைப்பு சட்டங்கள் எவ்வாறு உள்ளன? என்பதை ஆய்வு செய்ததுடன், அவற்றில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவில் சேர்த்து வந்தார். பி.என்.ராவ் உலகம் முழுவதும் சென்று  சேகரிக்கும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்தவாறே தெரிந்து கொள்ளும் அளவுக்கும், தேவைப்பட்டால் பி.என்.ராவ் அளிக்கும் விவரங்களை இந்தியத் தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யும் அளவுக்கும் அம்பேத்கர் அறிவும், திறமையும், வல்லமையும், அனுபவமும் பெற்றிருந்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் மிகவும் சவாலாக இருந்தவற்றில்  குறிப்பிடத்தக்கது இடப்பங்கீடு குறித்த பிரிவுகளை உருவாக்குவது தான். இடப்பங்கீடு குறித்து அரசியல் நிர்ணய அவையில் பல்வேறு தருணங்களில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசு பணிகளில் இடப்பங்கீடு அளிப்பது தொடர்பாக 30.11.1948 அன்று அரசியல் நிர்ணய அவையில் விவாதம் நடைபெற்றது. அதற்காக  அரசியல் நிர்ணய அவையின் ஆலோசகர் பி.என்.ராவ் ஒரு வரைவை தயாரித்துக் கொடுத்திருந்தார். அதன்  விவரம்:
‘‘Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State‘‘

‘‘அரசு பணி நியமனங்கள் அல்லது பதவிகளில், போதிய பிரதிநிதித்துவம் பெறாதவர்கள் என்று  அரசால் கருதப்படும் எந்த ஒரு வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு சாதகமாக இடப்பங்கீடு வழங்குவதற்கான புதிய பிரிவுகளை அரசு இயற்றுவதை இந்தப் பிரிவில் உள்ள எந்த அம்சமும் தடுக்காது’’ என்பது தான் அந்த வரைவுப் பிரிவின் பொருள் ஆகும்.

அரசியல் நிர்ணய அவையின் ஆலோசகர் பி.என்.ராவ் தயாரித்துக் கொடுத்த வரைவை அம்பேத்கர் அப்படியே அவையின் விவாதத்திற்கு முன்வைக்கவில்லை. மாறாக அதில் ஒரே ஒரு சொல்லை கூடுதலாக சேர்த்து விவாதத்திற்கு வைத்தார். அதன் விவரம்:

‘‘Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any Backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State‘‘

‘‘அரசு பணி நியமனங்கள் அல்லது பதவிகளில், போதிய பிரதிநிதித்துவம் பெறாதவர்கள் என்று  அரசால் கருதப்படும் எந்த ஒரு  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த  குடிமக்களுக்கு சாதகமாக இடப்பங்கீடு வழங்குவதற்கான புதிய பிரிவுகளை அரசு இயற்றுவதை இந்தப் பிரிவில் உள்ள எந்த அம்சமும் தடுக்காது’’

அதாவது பி.என்.ராவ் தயாரித்த வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த ‘‘எந்த ஒரு வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு’’ என்ற சொற்றொடரில் குடிமக்களுக்கு என்ற சொல்லுக்கு முன்பாக பிற்படுத்தப்பட்ட என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சேர்த்து ‘‘எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு’’ என்று மாற்றுகிறார். அவ்வாறு திருத்தப்பட்ட வரைவு தான் வரைவு எண் 10(3) என்ற பெயரில் அவையின் ஆய்வுக்கு வைக்கப்படுகிறது.

வரைவு எண் 10(3) மீதான விவாதத்தில் மொத்தம் 17 பேர் பங்கேற்று பேசினார்கள். அவர்களில் நான்கு  உறுப்பினர்கள் இந்த வரைவில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த 10(3) உட்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று இரு உறுப்பினர்கள் திருத்தம் கொண்டு வந்தனர். அம்பேத்கர் அவர்களால் சேர்க்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்று ஒருவரும், இடப்பங்கீடு என்பது 10 ஆண்டுகளுக்கு மட்டும் தான் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று இன்னொருவரும் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஆனால், அந்த 3 திருத்தங்களும் விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தி தள்ளுபடி செய்யப்பட்டன.

விவாதத்தில் பங்கேற்று பேசிய 17 பேரில் சிலர் அம்பேத்கரின் திருத்தத்திற்கு எதிராகவும், பலர் அந்த திருத்தத்திற்கு ஆதரவாகவும் பேசினார்கள். பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட  என்ற சொல்லை நீக்கி விட்டு பட்டியலினம் என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்று இருவர் கருத்து தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத் தலைவரும், 1937-ஆம் ஆண்டில் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றியவருமான வி.ஐ. முனியசாமி பிள்ளை 10(3) உட்பிரிவில் அம்பேத்கர் சேர்த்த பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லுக்கு முன்னோ, பின்னோ பட்டியலினம் என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரினார். மேலும் இரண்டு உறுப்பினர்களும் அதே கோரிக்கையை ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக சிறுபான்மை சமுதாயங்கள் என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்று முஸ்லீக் லீக் கட்சியைச்  சேர்ந்த கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் கூறினார். இவர்கள் 6 பேர் கூறியதும் அம்பேத்கர் முன்வைத்த திருத்தப்பட்ட வரைவுக்கு எதிரான கருத்துகளாகும்.

அம்பேத்கரின் வரைவுக்கு ஆதரவாக ஆறு பேர் கருத்து தெரிவித்திருந்தனர். 10(3) உட்பிரிவில் சேர்க்கப்பட்ட   பிற்படுத்தப்பட்ட என்ற சொல் அப்படியே இருக்கலாம் என்று 5 பேர் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒருவர் இட ஒதுக்கீடு என்பது காலவரையின்றி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் சமத்துவம் ஏற்படும் வரை தொடர வேண்டும் என்றுகருத்து தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், முதலாவது மக்களவையின் தலைவராக பணியாற்றியவருமான சீக்கியத் தலைவர் சர்தார் ஹுக்கம் சிங், தமது வாழ்நாளில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டதை பார்க்கவில்லை என்று கூறினார். அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு ‘‘சீக்கியர்களின் கலாச்சார அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க  இந்திய அரசியலமைப்புச் சட்டம் தவறி விட்டது’’ என்று கூறி, அதில் கையெழுத்திட மறுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய அம்பேத்கர், 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லை தாம் சேர்த்தது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:
‘‘பி.என்.ராவ் தயாரித்து எங்களுக்கு அளிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் அந்த முதலாவது வரைவில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல் இல்லை. எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்; அதேநேரத்தில் அரசு பணிகளில் காலங்காலமாக பிரதிநிதித்துவம் பெற்றிருக்காத  சமூகங்களின் கோரிக்கை கவனிக்கப் பட வேண்டும் என்ற இரு செய்திகள் தான் இங்கு முதன்மையானவையாகும். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்த வேண்டும்; பாதுகாக்க வேண்டும்  என்பதைக் கருத்தில் கொண்டே வரைவுக்குழு தாமாகவே பொறுப்பேற்றுக் கொண்டு ‘‘பிற்படுத்தப்பட்ட’’ என்ற சொல்லை சேர்த்தது. பிற்படுத்தப்பட்ட என்னும் சொல் சேர்க்கப்படாவிட்டால் இந்தப் பிரிவில் உள்ள இடஒதுக்கீடு அடிபட்டு போகும். இதை உணர்ந்து இதைவிடச் ‘‘சிறந்ததொரு சொற்கோவையைக்’’ கொடுக்க முடியாது என்பதை  உறுப்பினர்கள்  தெரிந்து கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பதை  அந்தந்த அரசுகள் வரையறுக்கும்’’.

இவ்வாறு அம்பேத்கர் அளித்த விளக்கத்தை ஏற்று 10(3) உட்பிரிவு நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 10(3) உட்பிரிவு தான் இப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள  16(4) பிரிவு ஆகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினாலும் கூட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லையே என்ற எண்ணம் நம்மில் பலருக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அது குறித்தும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குடிகள் என்று கூறியது இப்போதைய இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மட்டும் குறிக்காது. மாறாக, பட்டியலினத்தவர், பழங்குடியினர்,  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய பிற்படுத்தப்பட்ட தன்மையை பெற்றுள்ள மூன்று பிரிவுகளையும் குறிக்கும் என்பதை அம்பேத்கரின் பல உரைகளில் இருந்து அறியலாம். இவர்களில் பட்டியலினத்தவர்கள் யார்? என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 341 ஆவது பிரிவின்படியும், பழங்குடிகள் யார்? என்பதை 342-ஆவது பிரிவின்படியும் அரசு  ஏற்கனவே தீர்மானித்து இருந்தது.

பிற்படுத்தப்பட்ட தன்மையை பெற்றுள்ள இந்த இரு பிரிவினரையும் கடந்து இந்தியாவில் இன்னும் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினர்  உள்ளனர். அவர்களை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று கூறலாம். அவர்களை இப்போது வகைப்படுத்த முடியவில்லை. ஆனால், 340-ஆவது பிரிவின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின்  ஆணையம்  என்ற அமைப்பை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதற்கான வரையரைகளை வகுத்து, அவற்றின் அடிப்படையில் அவர்களை அடையாளம் காண வேண்டும் என்பது தான் அம்பேத்கர் அவர்களின் நிலைப்பாடு ஆகும்.

அரசியல் நிர்ணய அவையின் ஆலோசகர் பி.என்.ராவ் தயாரித்துக் கொடுத்த வரைவு அப்படியே நிறைவேற்றப்பட்டிருந்தால்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்,  பழங்குடியின வகுப்பினருக்கு இடப்பங்கீடு இன்று வரை கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது இடப்பங்கீடு பெறுவதற்கு இன்னும் கூடுதலான போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டியிருந்திருக்கலாம். அத்தகைய நிலை ஏற்படாமல் பிற்படுத்தப்பட்ட தன்மையை பெற்றுள்ள 3 பிரிவினருக்கும் இடப்பங்கீடு கிடைத்ததற்கான காரணங்களில் முக்கியமானது 10(3) உட்பிரிவில் பிற்படுத்தப்பட்ட என்ற சொல்லை அம்பேத்கர் சேர்த்தது தான். அந்த ஒற்றை வார்த்தை தான் அதிசயத்தை நிகழ்த்தியது என்றால் அது மிகையில்லை.

நாளை....
இட ஒதுக்கீடு மறுப்பும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதலாவது திருத்தமும்!
                        
#சமூகநீதி #இடப்பங்கீடு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages