முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் ‘சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-4 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் ‘சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-4

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் ‘சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-4

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

3. இடப்பங்கீடு மறுப்பும், முதலாவது அரசியலமைப்பு சட்டத் திருத்தமும்!

சமூகநீதியை வளர்த்தெடுப்பதிலும், பாதுகாப்பதிலும் தமிழ்நாடு எப்போதுமே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.  இதற்கு ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வரும் பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளும் முக்கியக் காரணம் ஆகும்.

1927&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆதரவுடன் நடைபெற்ற சுப்பராயன் தலைமையிலான ஆட்சியில் 1071 என்ற எண் கொண்ட கம்யூனல் ஜி.ஓ. 04.11.1927 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 100% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

1.பிராமணர் அல்லாத இந்துக்கள் - 5/12 இடங்கள் 41.67%
2. பிராமணர்கள் - 2/12 இடங்கள் 16.67%
3. இஸ்லாமியர்கள் - 2/12 இடங்கள் 16.67%
4. ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர்               - 2/12 இடங்கள் 16.67%
5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 1/12 இடங்கள் 8.33%
மொத்தம் - 12/12 இடங்கள்  100%

பிராமணர்கள் அல்லாத இந்துக்களுக்காக 41.67% இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் கூட, அது பிராமணர் அல்லாத அனைத்து இந்து சமூகப் பிரிவினரையும் சென்றடையவில்லை. இது தந்தை பெரியாரை வருத்தமடையச் செய்தது.‘‘வெள்ளையரிடமிருந்து பார்ப்பனர்கள் வாங்கிக் கொண்டது போல பார்ப்பனர்களிடமிருந்து வாங்கி உயர்பிரிவு மக்களிடமே போய்ச் சேர்ந்துவிட்டது. பார்ப்பனரல்லாதர் இடப்பங்கீடு என்கிற பெயரில் சில உயர்சாதியினரே அனைத்து இடங்களையும் கைப்பற்றிக் கொள்வது சரியல்ல. பிராமணர் அல்லாதோர் தொகுப்பில் உழைக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை உண்டாக்கி அவர்களுக்கு தனிப்பங்கு கொடுக்கப்பட வேண்டும்’’ என்று 1934-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

ஆனால், அதன்பின் சில ஆண்டுகள் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்ற போதிலும் பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்டோடுக்கு தனி இடப்பங்கீடு என்ற தந்தை பெரியாரின் கோரிக்கை  நிறைவேற்றப்படவில்லை. 1937&ஆம் ஆண்டு இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில், இனி பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடப்பங்கீடு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டது. அதே நிலைமை நீடித்த நிலையில் 1947-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

பதவியேற்றதற்கு அடுத்த நாளே, அதாவது 24.03.1947 அன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடப்பங்கீட்டை அவர் அறிவித்தார். உழைக்கும் பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு 14.29% இட ஒதுக்கீட்டை அறிவித்து அவர் அரசாணை வெளியிட்டார். அதன்படி, 1927 முதல் நடைமுறையில் இருந்து வந்த 5 பிரிவுகளைக் கொண்ட இடப்பங்கீடு 6 பிரிவுகளைக் கொண்ட இடப்பங்கீடாக விரிவுபடுத்தப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட இடப்பங்கீட்டின் விவரம்:

1.பிராமணர் அல்லாத இந்துக்கள் -6/14 இடங்கள் 42.86%
2.பிராமணர் அல்லாத இந்து
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 2/14 இடங்கள் 14.29%
3. பிராமணர்கள் - 2/14 இடங்கள் 14.29%
4. தாழ்த்தப்பட்டோர் - 2/14 இடங்கள் 14.29%
5. ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர்              - 1/14 இடங்கள்  7.14%
6. இஸ்லாமியர்கள் - 1/14 இடங்கள்  7.14%
                       மொத்தம் - 14/14 இடங்கள்  100%

பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடப்பங்கீடு வழங்கப்பட்டாலும்  அது அவர்களுடைய மக்கள்தொகையை விட குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில் பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட இரு மடங்கு அளவுக்கும், பிராமணர்களுக்கு அவர்கள் மக்கள்தொகையை விட சுமார் 5 மடங்கும் இடப்பங்கீடு வழங்கப்பட்டது.

ஆனாலும் கூட பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடப்பங்கீடு வழங்கப்பட்டது அப்போது பெரும் திருப்பமாகவே பார்க்கப்பட்டது. ‘‘காங்கிரஸ் ஆள்கிறதா? தாடி இல்லாத ராமசாமி ஆள்கிறாரா?’’ என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதைப் பற்றி முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் கவலைப்படவில்லை. பிராமணர் அல்லாத இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடப்பங்கீடு வழங்கியதன் மூலம் பிற்படுத்தப் பட்டோருக்கு முதன்முதலாக இடப்பங்கீடு வழங்கியவர் என்ற பெருமை ஓமந்தூராருக்கு கிடைத்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 16(4) ஆவது பிரிவின்படி  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இடம் அளிக்க வகை செய்யப்பட்டது. ஆனாலும்,  340&ஆவது பிரிவின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின்  ஆணையம்  என்ற அமைப்பை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதற்கான வரையரைகளை வகுத்து, அவற்றின் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டால் மட்டும் தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தாமதம் ஆனது. அதேநேரத்தில்   1927&ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு 1947&ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தொடர்ந்து இடப்பங்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், செண்பகம் துரைராஜன் என்ற பெண்மணி தொடர்ந்த வழக்கால் அந்த இடப்பங்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டது. அது தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகும்.

ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் செண்பகம் துரைராஜன் வழக்கு இயல்பாக நடந்தது அல்ல.... திட்டமிட்டு திணிக்கப்பட்டது ஆகும் என்பதை புரிந்து கொள்ள முடியும். 1950&ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6&ஆம் தேதி செண்பகம் துரைராஜன் என்னும் மாணவி சென்னை மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனவும், சி. ஆர். சீனிவாசன் என்ற மாணவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்க வில்லை எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஆம்... வழக்குத் தொடர்ந்த செண்பகம் துரைராஜன் மனுவில் குறிப்பிட்டிருந்தவாறு அவர் மருத்துவக் கல்வியில் சேர்வதற்காக விண்ணப்பமே செய்யவில்லை என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணாராவ் இந்த வழக்கில் தாமாக முன்வந்து செண்பகம் துரைராஜன், சீனிவாசன் ஆகியோருக்காக வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15வது விதி மற்றும் 29(2)வது விதிகளுக்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணை எதிராக இருப்பதால் தமிழகத்தில் இடப்பங்கீடு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும்  தள்ளுபடி செய்யப்பட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஆணையிட்டது. இவ்வாறாக தமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறைக்கு முடிவு கட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்  ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து  தமிழகத்தில் தொடர் போராட்டங்களை  தந்தை பெரியார் நடத்தினார். மற்றொரு பக்கம் அப்போது தான் புதிதாக திமுக  என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருந்த அறிஞர் அண்ணாவும் இடப்பங்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தினார்; அறிக்கைகளையும்  தொடர்ந்து வெளியிட்டு வந்தார். காங்கிரஸ் கட்சியிலும் ஒரு பிரிவினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

14.08.1950 அன்று சென்னை மாகாணம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் கம்யூனல் ஜி.ஓ. காக்க களத்தில் இறங்கினர். ‘‘கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற பெரியாரின் தீர்மானத்தை  மக்கள் முன்னிலையில் மாணவர்கள் நிறைவேற்றினார்கள். சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து நாடெங்கும் வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்! என தந்தை பெரியார் 14.09.1950 அன்று வேண்டுகோள் விடுத்தார். மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘‘அரசியல் சட்டம் ஒழிக!.... வகுப்புவாரி உரிமை வேண்டும்!’’ என்ற முழக்கத்தை எழுப்பினார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை செல்லாது என அறிவித்த மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி தங்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும்  தமிழக மக்கள் உணர்த்தினர். மத்திய அரசுக்கு அது  பெரும் தலைவலியாக மாறியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சென்னை மாகாணத்தில் வேலைவாய்ப்பில் மட்டுமே இடப்பங்கீடு  வழங்க முடியும் என்பதை எதிர்த்து அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களின் ஆதரவையும் திரட்டி   1950 டிசம்பர் முதல் தேதியன்று  திருச்சியில் கம்யூனல் ஜி.ஓ. மாநாட்டை தந்தை பெரியார்  நடத்தினார். அதில் ‘‘ எங்காளுங்களுக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா, எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்பிடி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்’’ என்று அவர் மத்திய அரசிடம் வினா எழுப்பினார்.

தந்தை பெரியாரின் இந்த முழக்கம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியது. பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு கொடுத்தால் கூட அதனால் பெரிய அளவில் பயன் கிடைக்காது; கல்வியில் இடப்பங்கீடு கொடுத்தால் மட்டும் தான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பெரியார் வலியுறுத்தினார்.

இடப்பங்கீட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து பிரதமர் நேருவிடம்  காமராஜர் எடுத்துக் கூறினார். அப்போராட்டங்களின் பின்னணியில் உள்ள நியாயங்கள் குறித்தும் அவர்  எடுத்துரைத்தார். அதையேற்று 1951-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவில் 4 என்ற உட்பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் மாநில அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கான போராட்டத்தை முன்னெடுத்ததில் தந்தை பெரியாருக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு கொண்டு சென்ற காமராசர், போராட்டங்களை வலுப்படுத்திய அறிஞர் அண்ணா ஆகியோரின் பங்களிப்புகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.

நாளை....

தேசிய அளவில் பிற்படுத்தப்பட் டோருக்கு இடப்பங்கீடு வழங்க முயற்சி: காகா கலேல்கர் ஆணையம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages