முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-5
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
4. காகா கலேல்கர் ஆணையமும், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அறிக்கையும்!
இந்தியா விடுதலை பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலினம், பழங்குடியினம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது. முதலில் பட்டியலினத்துக்கும், பின்னர் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அதற்கு காரணம் இருந்தது....
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் யார், யார்? என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப் படுவதற்கு முன்பே அடையாளம் காணப்பட்டிருந்தது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போதும் பட்டியலினத்தவர்கள் யார்? என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 341 ஆவது பிரிவிலும், பழங்குடிகள் யார்? என்பதை 342-ஆவது பிரிவிலும் மத்திய அரசு விரிவாக வரையறுத்து இருந்தது.
அதேநேரத்தில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அப்போது அடையாளம் காணப்படவில்லை. 340-ஆவது பிரிவின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதற்கான வரையரைகளை வகுத்து, அவற்றின் அடிப்படையில் அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்காக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படவில்லை.
1953-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆணை மூலம் நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காகா கலேல்கர் நியமிக்கப்பட்டார். அந்த ஆணையம் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அல்லது காகா கலேல்கர் ஆணையம் 1955 என்று அழைக்கப்பட்டது. அக்குழுவில் காகா கலேல்கர் தவிர மேலும் 9 உறுப்பினர்கள் இடம்பெற்று இருந்தனர்.
அந்த ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட பணிகள் வருமாறு:
1. கல்வியிலும், சமுதாயத்திலும் பின்தங்கிய நிலையில் உள்ள, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற சமுதாயங்களை அடையாளம் காண்பதற்கான வரையறைகளை வகுத்தல்.
2. அவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைத்தல்.
3. மத்திய, மாநில அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றிருக்காத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சரியா... இல்லையா? என்பது குறித்து தீர்மானித்தல்.
4. அந்த ஆணையம் கண்டறிந்த உண்மைகளையும், அவற்றில் முறையானவை என்று ஆணையம் கருதும் உண்மைகளையும் அறிக்கை வடிவில் அரசுக்கு பரிந்துரைத்தல்.
சமுதாயம் மற்றும் கல்வியின் அடிப்படையில் சமூகங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை தீர்மானிப்பதற்கான வரையறைகள்:
1. இந்து சமுதாயத்தின் சாதி அமைப்பின் பாரம்பரிய படிநிலையின் அடிமட்டத்தில் இருத்தல்
2. ஒரு சமுதாயம் அல்லது சாதியின் பெரும்பான்மையான மக்கள் கல்வியில் முன்னேற்றம் பெறாமல் இருத்தல்
3. அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமலோ அல்லது பிரதிநிதித்துவமே இல்லாமலோ இருத்தல்
4. வணிகம், வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல் இருத்தல்
சமுதாயம் மற்றும் கல்வியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்டவையாக பல்வேறு சமுதாயங்களை வகைப்படுத்த கீழ்க்கண்ட வரையறைகள் பயன்படுத்தப்பட்டன:
1. தீண்டாமை அல்லது கிட்டத்தட்ட தீண்டாமை எனும் பாகுபாடு காட்டப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் ( ஏற்கனவே பட்டியலினத்தவராக வகைப்படுத்தப்பட்டவர்கள்)
2. பொதுவான சமூகப் படிநிலையில் போதிய அளவில் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஒதுக்கி வைக்கப் படுபவர்கள் ( ஏற்கனவே பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டவர்கள்)
3. நீண்டகால புறக்கணிப்பால் குற்றம் செய்யும் சமுதாயங்களாக வகைப்படுத்தப்பட்டவர்கள் ( சீர் மரபினர்)
4. சமூகத்தில் மரியாதையை அனுபவிக்காத, நிலையான வசிப்பிடம் இல்லாத, பிழைப்புக்காக மிமிக்ரி, நடனமாடுதல், பிச்சை எடுத்தல், ஏமாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள்
5. விவசாயம் செய்யக்கூடிய, நிலமற்ற ஏழைத் தொழிலாளர்களைக் கொண்ட சமுதாயங்கள்
6. நில உரிமை இல்லாத, உறுதி செய்யப்பட்ட குத்தகைக் காலம் இல்லாத, பெரும்பாலும் நிலத்தை குத்தகைக்கு அனுபவிக்கக்கூடிய சமுதாயங்கள்
7. பொருளாதாரத்தில் வலிமையில்லாத சிறிய அளவில் நிலம் வைத்துள்ளவர்களை அதிக அளவில் கொண்டுள்ள சமுதாயங்கள்
8. கால்நடை வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் பிடித்தல் போன்ற தொழில்களை சிறிய அளவில் செய்து வருபவர்களைக் கொண்ட சமுதாயங்கள்
9. வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லாத, அவர்களின் பாரம்பரிய தொழில்கள் வருமானம் ஈட்டித் தராத அளவுக்கு மாறி விட்ட நிலையில் உள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள்
10. போதிய கல்வி இல்லாததால் அரசு பணிகளுக்கு செல்ல முடியாதவர்களை அதிக அளவில் கொண்டுள்ள சமுதாயங்கள்
11. கல்வி மற்றும் சமுதாயத்தில் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ள இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் சீக்கிய மதத்தில் உள்ள சமூகப் பிரிவுகள்
12. சமூகப் படிநிலையில் அடிமட்டத்தில் உள்ள சமுதாயங்கள்
பரிந்துரைகள்
1953-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் ஆணையம் அடுத்த இரு ஆண்டுகளுக்கு நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டது. சென்னை மாகாணத்துக்கு ஆணையம் வந்த போது, சென்னை மாகாணத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணும் பணிக்கு அப்போதைய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் டி.எம். அனந்தநாயகி அவர்களை பயன்படுத்திக் கொண்டது.
ஆய்வுப் பணிகளை முடித்த காகா கலேல்கர் ஆணையம் 1955-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி அதன் அறிக்கையை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இருப்பதாகவும், அவர்களில் 837 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவை தவிர காகா கலேல்கர் ஆணையத்தின் பிற முக்கியப் பரிந்துரைகள் வருமாறு:
1. 1961&ஆம் ஆண்டு கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்.
2. இந்து சமுதாயத்தின் சாதி அமைப்பின் பாரம்பரிய படிநிலையில் அடிமட்டத்தில் இருப்பதை சமூக பிற்படுத்தப்பட்ட நிலையாக கருத வேண்டும்.
3. அனைத்து பெண்களையும் பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பாக கருத வேண்டும்.
4. அனைத்து தொழில்நுட்ப, தொழிற்கல்வி நிலையங்களின் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 70% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
5. அனைத்து அரசு பணிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கீழ்க்கண்ட அளவில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அ. முதல் நிலைப் பணிகள் - 25% இடங்கள்
ஆ. இரண்டாம் நிலைகள் பணிகள் - 33.3% இடங்கள்
இ. மூன்று & நான்காம் நிலை பணிகள் - 40% இடங்கள்
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அறிக்கை
காகா கலேல்கர் தலைமையிலான முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மாறாக காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை பிரதமர் ஜவகர்லால் நேரு தூக்கி வீசி விட்டாராம். இது குறித்து அந்த நிகழ்வு பற்றி நன்றாக அறிந்த மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே. ஆனைமுத்து அவர்கள் கூறுவதை பார்ப்போம்....
‘‘பண்டித நேரு அவரே அமைத்த காகா கலேல்கர் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் அதைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தார். ஏன்? அந்த அறிக்கையை எழுதியவரே ஒரு பிராமணர் தான். காகா கலேல்கர் என்பது அவரது பெயர். அவர் நல்ல காந்தியவாதி. அந்த அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதல் நிலைப் பதவிகளில் 25 விழுக்காடும், இரண்டாம் நிலை பதவிகளில் 33.3 விழுக்காடும், மூன்று மற்றும் நான்காம் நிலை பதவிகளில் 40 விழுக்காடும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். காகா கலேல்கரும் பிராமணர், ஜவகர்லால் நேருவும் பிராமணர். கலேல்கர் தனது அறிக்கையை பிரதமர் நேருவிடம் கொடுத்தார்.
அந்த அறிக்கையை நேரு தன் கையில் வாங்கியவுடனே ஒரு கேள்வி கேட்டார் கலேல்கரிடம்: ‘‘ நீங்கள் இந்த அறிக்கையில் ஏழை பிராமணர் வகுப்பு எதையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்கிறீர்களா? என்பது தான் அந்த கேள்வி. கலேல்கர் யோக்கியமான பிராமணர். அதனால், நேருவிடம், ‘‘இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம். அதனால் பிராமணர்களை சேர்க்கவில்லை. அது இந்த ஆணையத்தின் பணி வரம்புக்குள் வரவில்லை’’ கலேல்கர் கூறினார். இல்லை என்று கலேல்கர் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த பிரதமர் நேரு அந்த அறிக்கையை தூக்கி எறிந்தார்.
இந்த சம்பவம் 1955-ஆம் ஆண்டில் நடந்தது. அதை நீ நேரில் பார்த்தாயா? என்று கேட்பீர்கள். அந்த அறிக்கையை நேருவிடம் கொடுக்கும் போது கலேல்கருடன் சென்றவர் தயாள்சிங் சவுராசியா. அவர் அந்த ஆணையத்தின் உறுப்பினர். அவர் 1978-ஆம் ஆண்டில் எனக்கு அறிமுகம் ஆனார். உத்தரப்பிரதேசப் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு 07.05.1978-இல் முசாபர்நகர் என்னும் ஊரில் நடந்தது. வட இந்தியாவில் நான் முதன்முதலில் பேசியது அந்த மாநாட்டில் தான். அந்த மாநாட்டுக்கு தலைமையேற்று பேசியவர் தான் சிவ் தயாள்சிங் சவுராசியா. அவர் தான் இந்த சம்பவத்தை எனக்கு சொன்னார்’’ என்று பெரியவர் ஆனைமுத்து பதிவு செய்திருக்கிறார்.
ஜவகர்லால் நேருவால் தூக்கி வீசப்பட்ட காகா கலேல்கர் ஆணைய அறிக்கையின் ஆயுள் அத்துடன் முடிந்து போனது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண எந்த நோக்க ஆய்வையும் கலேல்கர் ஆணையம் மேற்கொள்ளவில்லை என்று கூறி அந்த அறிக்கையை மத்திய அரசு அறிவித்தது. அதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்ற கனவு நனவாகாமல் கலைந்தது.
நாளை....
மண்டல் ஆணைய அறிக்கையும், இந்திரா, ராஜீவ் காந்தியின் வெறுப்பும்!.
No comments:
Post a Comment