மலையேற அஞ்சுகிறதா கொரோனா? - உயரமான பகுதிகளில் குறைந்த தாக்கம்
உலகில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு உள்ளது என தேடிய நிலை போய், எங்கு பரவவில்லை எனக் கண்டறிவது கடினமானதாக மாறிவிட்டது. ஆனால் மிக உயரமான பகுதிகளில், அதாவது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக காணப்படுகிறது.
திபெத், பொலிவியா மற்றும் ஈகுவடாரில் நடத்தப்பட்ட ஆய்வில், மிக உயரமான பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கொரோனாவின் தாக்கம் மிகக்குறைவாக காணப்படுவது தெரியவந்துள்ளது.
இந்தியாவிலும் உயரமான பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளில், பெரும்பாலான பாதிப்புகள் சமவெளி பகுதிகளிலேயே காணப்படுகின்றன.
மலைப்பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மாறும் வெப்பநிலை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. மிக அதிக உயரமான பகுதிகளில் நிலவும் வெப்பநிலை, இயற்கையின் கிருமிநாசினியாக செயல்படுகிறது. உயரமான பகுதிகளில் காணப்படும குறைவான காற்றழுத்தமும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தாக்கம் செலுத்துகிறது.
சீனாவில் கொரோனா பாதிப்புகள் 80 ஆயிரத்தை கடந்த நிலையிலும் கூட, திபெத்தில் பாதிப்பு 100 என்ற அளவிலேயே காணப்படுகிறது. திபெத் மலைப்பகுதியில் அமைந்துள்ளதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
பொலிவியாவில் சமவெளி பகுதிகளில் காணப்படும் பாதிப்புகளை விட, மலைப்பகுதிகளில் மும்மடங்கு குறைவாக காணப்படுகிறது. நேபாளத்தில் 90 விழுக்காடு கொரோனா பாதிப்புகள் சமவெளி பகுதிகளிலேயே ஏற்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயரமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது என கூறும் அறிவியலாளர்கள், இதுகுறித்த அதிகமான ஆய்வுகள் மேற்கொண்டு, தரவுகளை திரட்டட வேண்டியுள்ள தாகவும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment