முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 28
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
27. இட ஒதுக்கீட்டுப் போருக்காக வன்னியர் சங்கம் தொடக்கம்!
தமிழ்நாட்டில் தொழிற்கல்லூரி மாணவர் சேர்க்கைகளிலும், கல்வி உதவித்தொகை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை, அவர்களை விட கல்வியிலும், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் வலிமை பெற்று ஆதிக்கம் செலுத்தும் சமுதாயங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பதை முந்தைய அத்தியாயங்களில் நான் விரிவாக விளக்கியிருந்தேன்.
இவையெல்லாம் 1970-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சட்டநாதன் ஆணையமும், அம்பாசங்கர் ஆணையமும் ஆய்வு நடத்தி கண்டுபிடித்தவை ஆகும். ஆனால், அவற்றுக்கு முன்பாக நான் மருத்துவக் கல்லூரியில் பயிலும் போதே இட ஒதுக்கீடு பெறும் சமூகங்கள் பட்டியலில் வன்னியர் சமுதாயம் இருந்தாலும் அவர்களுக்கும், அவர்களைப் போலவே மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள பிற சமூகங்களுக்கும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட தொழிற்படிப்புகள் எட்டாக்கனியாகத் தான் இருந்தன. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த நான், பி.யூ.சியில் அதிக மதிப்பெண் எடுத்து மிகவும் எளிதாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாலும் கூட, பொருளாதாரம் சார்ந்த காரணங்களால் மிகக்கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தான் மருத்துவர் ஆக முடிந்தது.
வாய்ப்புகளை வழங்கும்
வாசலே இட ஒதுக்கீடு
பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களில் திறமையுள்ளவர்கள் பலர் இருந்தாலும், அவர்களால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உயர்சாதியினருடன் போட்டிபோட முடியவில்லை. இதற்குக் காரணம் அவர்களுக்குத் திறமை இல்லை என்பதில்லை... மாறாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது தான். உதாரணமாக கரிக்கட்டையும் கரி தான், வைரமும் கரி தான். தோண்டி எடுத்து பட்டை தீட்டப்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் படிந்து கிடக்கும் கரிக்கட்டை வைரமாகிறது. அதற்கு வாய்ப்பில்லாத பகுதிகளில் படியும் கரிக்கட்டை கரியாகவோ, அல்லது தோண்டி எடுக்கப்படாமலோ போய்விடுகிறது. அப்படித்தான் வசதியான, படித்தவர்கள் நிறைந்த மேட்டுக்குடிகளில் பிறந்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஏழைக் குடும்பங்களிலும், படிப்பறிவற்ற பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களிலும் பிறந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை.
இந்தக் குறைபாட்டை இயற்கையின் விதி என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் முன்னேறப் படிக்கட்டுகள் தேவை. அந்தப் படிக்கட்டுகள் தான் இடஒதுக்கீடு ஆகும். அவ்வாறு வழங்கப்படும் இட ஒதுக்கீடு எனும் படிக்கட்டு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு கோருவதே கல்வி, சமூக, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் வலிமையாக உள்ளவர்களுடன் நம்மால் போட்டியிட முடியாது என்பதால் தான். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருப்பவர்களையும், மிகவும் வலிமையற்றவர்களாக இருப்பவர்களையும் ஒன்றாக ஒரே பிரிவில் வைக்கும் போது, வலிமையுள்ளவர்கள் வாய்ப்பை எடுத்துக் கொள்கின்றனர். வலிமையற்றவர்களுக்கு ஏமாற்றம் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை.
இதற்கான மாற்று தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமூகங்களை ஒரே பிரிவாக்கி, அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும். அதைவிட சிறந்தத் தீர்வு அனைத்துச் சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும்.
வன்னியர் சங்கம் தொடக்கம்!
வன்னியர்கள் உள்ளிட்ட சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, ‘‘சமமற்றவர்களை சமமாக நடத்தும்’’ வகையில் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும், அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்? என்பதையும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது தெரிந்து கொண்டேன். வன்னியர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு பெறுவது தான் இதற்கு தீர்வு என்பதையும் அறிந்தேன்.
தீர்வு எதுவென்று தெரிந்து விட்ட நிலையில், அதை அடைவதற்காக உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான இலக்கை நோக்கியப் பயணத்தில், முன்னேற முடியாத நிலையில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், பணியிலுள்ள வன்னிய இளைஞர்களைத் திரட்டி, அவர்கள் மூலம் இயன்ற அளவிலான சமுதாயப் பணிகளைச் செய்து வந்தேன்.
அதன் தொடர்ச்சியாக வன்னிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வன்னிய அமைப்புகளை ஒருங்கிணைக்கலாம் என்ற யோசனை எழுந்ததால், 28 வன்னிய அமைப்புகளின் தலைவர்களை 20.07.1980 அன்று எனது இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினேன். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஈ.பி.ராயப்பா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிடங்கல் ஏ.ஆர். சம்பந்தம், ஏ.கே.நடராஜன், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள 28 வன்னியர் அமைப்புகளையும் ஒன்றாக இணைத்து வன்னியர் சங்கம் என்ற இரு வார்த்தைகள் மட்டுமே கொண்ட, அனைவரும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது. அந்த சங்கத்தின் அடையாளமாக அக்கினி குண்டம் சின்னத்தை பயன்படுத்துவது, கொடியாக அக்கினி குண்டம் பொறித்த மஞ்சள் கொடியையை பயன்படுத்துவது என்று அனைவரும் இணைந்து ஒருமனதாக முடிவு எடுத்தோம்.- அத்துடன் இந்த வன்னியர் சங்கம் அரசியல் சார்பற்ற அமைப்பாக செயல்படும் என வெளிப்படையாக அறிவித்தோம்.
புரட்சிகரமான தீர்மானங்கள்
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் மிகவும் முக்கியமானவை ஆகும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் ஆகும். தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானம் ஆகும். மூன்றாவதாக, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 தீர்மானங்களுமே மிகவும் புரட்சிகரமானவை ஆகும்.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட வன்னியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை நான் தான் ஏற்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வலியுறுத்திய போதிலும், அதை நான் அன்புடன் மறுத்து விட்டேன். சங்கத்தின் நிறுவனர் என்ற ஒற்றைப் பெருமையே போதும் என்பது எனது எண்ணம்.
வன்னியர் சங்கத்தில் எந்தப் பதவியும் வேண்டாம் என்று கூறி விட்டாலும் அந்த சங்கத்தை நான் தான் எனது தோள்களில் தூக்கி சுமந்தேன். அந்த நேரத்தில் திண்டிவனத்தில் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்ற மருத்துவராக திகழ்ந்தேன். என்னிடம் மருத்துவம் பெறுவதற்காக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராம மக்கள் எனது மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு மருத்துவம் பார்த்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் என்னிடம் உரிமையுடன் சண்டைக்கு வருவார்கள். இது மக்களின் நோயை களைவதற்கான ஏற்பாடு என்றால், சமூகத்தின் நோயை களைவதற்கான வன்னியர் சங்கப் பணிகளை பார்த்தாக வேண்டும் என்ற கடமையும் சேர்ந்து கொண்டது. அதன்படி இரு பணிகளுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி பணியாற்றி வந்தேன். வாரத்தில் 5 நாட்களில் மருத்துவமனையில் பணியாற்றி பணம் சேர்க்கும் நான், அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சனி&ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப் பணிக்காக சென்று விடுவேன். பல நேரங்களில் 100 கி.மீ தொலைவு கூட பேருந்துகளில் நின்று கொண்டே பயணித்தது உண்டு.
இரவு, பகல் பாராமல் மக்கள் சந்திப்பு
வன்னியர் சங்கத்தின் நிறுவனர் என்ற முறையில் இரவு பகல் பாராமல் மக்கள் சந்திப்புகளை நடத்தினேன். இயக்கப்பணிகளுக்கான நாட்களில், கிராமங்களுக்குச் சென்று கொடி ஏற்றி வைத்தேன். அதற்காக செல்லும் போது கூடுதலாக வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றையும் நடத்தினேன். அவற்றில் நான் நிகழ்த்தும் உரைகள் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கின. பல நேரங்களில் நள்ளிரவைக் கடந்தும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு எத்தனை மணியானாலும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். மக்களிடையே காணப்படும் உற்சாகம் எனது சோர்வு, உடல் வலியைப் போக்கி, பல மணி நேரம் அவர்களிடம் உரையாட வைக்கும்.
ஒருமுறை அன்றைய வடாற்காடு மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்தில் ஒரே நாளில் 20 கிராமங்களில் கொடியேற்ற ஒப்புக் கொண்டேன். பகலில் தொடங்கிய கொடியேற்று விழா நள்ளிரவைக் கடந்து அடுத்த நாள் அதிகாலை 2.00 மணி வரை நீண்டது. கொடியேற்றுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி மட்டுமல்ல..... சாலைகள் கூட கிடையாது. அவ்வாறு சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 3 மைல்கள், அதாவது 5 கிலோ மீட்டர் தூரம் வரை வயல் வரப்புகளில் நடந்து சென்று மக்களை சந்தித்தேன். வன்னியர்களுக்கு தனி இடப் பங்கீட்டை வென்றெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். அதிகாலை 2.00 மணிக்கு ஒரு கிராமத்திற்கு கொடியேற்றச் சென்றால், அப்போது கூட அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் விழித்திருந்து என்னை வரவேற்பார்கள். மக்கள் அளித்த வரவேற்பும், அவர்களிடம் காணப்பட்ட உற்சாகமும் தான் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தன.
முதல் மாநாடு... முதல் கோரிக்கை
தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றாக்கி, வன்னியர் சங்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கிய நிலையில், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் அல்லவா? அதற்காக வன்னியர் சங்கத்தின் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1980&ஆம் ஆண்டின் நிறைவில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வன்னியர் சங்கத்தின் முதல் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அம்மாநாடு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே,‘‘அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றவகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ’’ என்பது தான். அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 22% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர் சங்கம் என்பது வன்னியர்களின் நலன்களையும், இட ஒதுக்கீட்டையும் வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, மற்ற சமுதாயங்களுக்கு எதிரி அல்ல.... அவர்களின் நலன்களுக்காகவும் பாடுபடும் அமைப்பு என்பதற்கு இதுவே உதாரணமாகும்.
வன்னியர் அரசியல் தலைவர்களின் பாராமுகம்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துத் தர வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு படித்தவர்களின் ஆதரவும், அரசியல் தலைவர்களின் ஆதரவும் தேவை என்பதை நான் உணர்ந்திருந்தேன். அதன்படி வன்னியர் சமுதாயத்தில் உள்ள படித்தவர்களை சந்தித்து, அவர்களின் ஆதரவைத் திரட்டினேன். ஆனால், திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சிகளிலும் உள்ள வன்னியர் தலைவர்கள் வன்னியர் சங்கம் நடத்திய மாநாடுகளில் பங்கேற்கவில்லை. பலமுறை அழைத்தாலும் வன்னியர் என்ற சாயம் தங்கள் மீது பூசப்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் வன்னியர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்தனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படவில்லை. வன்னியர் சங்கத்திற்கு அரசியல் சார்பு எதுவும் கிடையாது. எந்தக் கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்தாலும் வன்னியர் என்ற முறையில் வன்னியர் சங்கத்தில் இணையலாம்; வன்னியர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தேன். ஆனால், பயனில்லை.
எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் அவரவர் சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் கூட்டங்களில் கலந்து கொண்டனர். பிராமணர் சங்கக் கூட்டங்களில் அச்சமுதாய அமைச்சர் எச்.வி ஹாண்டே கலந்து கொண்டார். நாடார் சங்கக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.என். இராஜேந்திரன் உரையாற்றுவதைப் பார்க்க முடியும். தேவர் பேரவைக் கூட்டத்தில் அமைச்சர் திருநாவுக்கரசு கண்டிப்பாக இருப்பார். மூத்த அமைச்சர் ப.உ.சண்முகம் துளுவ வேளாளர் சங்க நிகழ்வுகளிலும், முசிறிப்புத்தன் அவர் சார்ந்த தெலுங்கு செட்டியார் மாநாட்டிலும் கலந்து கொள்வார்கள். ஆனால், வன்னியர் சங்க நிகழ்ச்சிகளில் மட்டும் வன்னியர் சமுதாய அரசியல் தலைவர்கள் பங்கேற்க மறுப்பது ஏன்? என்று வினா எழுப்பினேன்.
அதேநேரத்தில் வன்னியர் சங்கக் கூட்டங்களில் அச்சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு சில காரணங்கள் உண்டு. அதிமுகவைச் சேர்ந்த இரு வன்னியர்கள் ஒன்றாக நின்று பேசிக் கொண்டு இருந்தாலே அவர்களைப் பார்த்து. ‘‘ என்ன... வன்னியர்கள் மாநாடு நடக்கிறதா?’’ என்று அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கேட்பாராம். அதிமுகவில் உள்ள வன்னியர்கள் வன்னியர் சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள அக்கட்சியின் நிறுவனரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். எந்தத் தடையும் விதித்ததாக தெரியவில்லை. ஆனாலும் அந்த கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் தான் அதற்கு காரணம் என்று தெரியவந்தது. அவரைக் கடுமையாக நான் விமர்சித்தேன். அதன்பின் நிலைமை மாறியது. வன்னியர் சங்க நிகழ்வுகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வன்னிய சமுதாயத் தலைவர்கள் கலந்து கொள்ளத் தொடங்கினார்கள்.
முதல் போராட்டம்.... பட்டினிப் போராட்டம்
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்தப்பட்ட போதிலும், அதுகுறித்துப் பேச்சு நடத்துவதற்குக் கூட எம்.ஜி.ஆர் அரசு முன்வரவில்லை. இதைக் கண்டிக்கும் வகையில் 15.03.1984-இல் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் பட்டினிப் போராட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர். பெண்கள் தங்களின் தொழிற்கருவிகளான கதிர் அறுக்கும் அரிவாள், சுத்தியல், களைக் கொட்டு உள்ளிட்ட கருவிகளுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசுக்கு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையின் நியாயம் புரியவில்லை.
கனல் இதழ் தொடக்கம்
மற்றொருபுறம், சமூக நீதி சார்ந்த கருத்துக்களைப் பரப்புவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பது என எண்ணற்ற பணிகளைச் செய்து வந்தாலும், அவற்றை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தன. இப்போது ஊடகங்கள் எப்படி நம்மைப் புறக்கணிக்கின்றனவோ, அதேபோல் தான் அப்போதும் செய்தன. இக்குறையைப் போக்கும் வகையில் 1984&ஆம் ஆண்டில் கனல் என்ற பெயரில் புதிய மாத இதழைத் தொடங்கினோம். கனல் இதழ் சமூகநீதிப் போராட்டத்திற்கு பெரும் ஆயுதமாக திகழ்ந்தது.
அந்த நேரத்தில் பெரும்பான்மையான ஊடகங்கள் வன்னியர் சங்கத்திற்கு ஆதரவாக இல்லை என்ற போதிலும் கூட, ஒரு சில பத்திரிகைகள் மிகவும் ஆதரவாக செயல்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது தராசு வார இதழ் ஆகும். வன்னியர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த அந்த இதழின் ஆசிரியர் தராசு ஷ்யாம், அவரது இதழில் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக விரிவாக எழுதினார். வன்னியர் சங்கம் நடத்திய சில போராட்டங்களிலும் கலந்து கொண்டார். ‘‘வன்னியர் சங்கத்தின் போராட்டத்தை இப்போது வேண்டுமானால் ஊடகங்கள் புறக்கணிக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் உங்களை ஊடகங்களால் தவிர்க்க முடியாது. ஒரு காலத்தில் பத்திரிகையாளர்கள் உங்களை மொய்ப்பர்’’ என்று கூறினார். அன்று ஷ்யாம் சொன்னது பின்னாளில் நடந்தது; நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தை அதிமுக அரசு அங்கீகரிக்காதது குறித்தும், பேச்சுவார்த்தைக்கு வன்னியர் சங்கத்தை அழைக்காதது குறித்தும் விமர்சிக்கும் வகையில், ‘‘ மிகப்பெரும்பான்மை மக்களை மதிப்பதற்குக் கூட ‘‘மாண்பு’’களுக்குத் தெரியவில்லையா? அலட்சியமா இல்லை ஆணவமா? பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு; சாது மிரண்டால் காடு கொள்ளுமா? எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வன்னியரிடம் ஓட்டுப் பிச்சைக் கேட்டு வந்து தான் தீர வேண்டும். இந்த வன்னியரை மதிக்காதவரை மிதிக்கின்ற நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை அரசியல்வாதிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்’’ என்று கனல் இதழில் எழுதினேன்.
நாளை....
தமிழகத்தை உலுக்கிய போராட்டங்கள்!
No comments:
Post a Comment