முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 30 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 30

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 30

29. உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டுடன்
உயிர் வாழும் மாவீரன் செல்வராஜ்!

வன்னியர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை என்றாலே, அது 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது தான் தொடங்கப்பட்டதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அதற்கு முன்பாகவே அத்தகைய வன்முறையை, ஒடுக்குமுறையை வன்னியர்கள் மீது ஆட்சியாளர்கள் ஏவத் தொடங்கி விட்டனர். அவை அனைத்தையும்  எதிர்கொண்டு தான் வன்னியர் சமுதாயம் அதன் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது.

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான  வன்னியர் சமுதாயத்தை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலிமை  பெற அனுமதிக்கக் கூடாது என்பது தான் ஆட்சியாளர்களின் எண்ணமாகவும், சதியாகவும் இருந்து வந்திருக்கிறது.

அதற்காக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட தட்டிப் பறித்துள்ளனர். அதையும் மீறி உரிமைக்காக போராட்டம் நடத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு, சிறை தண்டனை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விடுவார்கள். 1986-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 19-ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டத்தின் போதே அத்தகைய ஒடுக்குமுறைகளை எம்.ஜி.ஆர் அரசு கொடூரமாக கட்டவிழ்த்து  விட்டது.

திணறிய கும்மிடிப்பூண்டி

இன்றைய திருவள்ளூர் மாவட்டம், அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நகரமான கும்மிடி  பூண்டி தான் தொடர்வண்டி போக்குவரத்தைப் பொருத்தவரை மிகவும் முக்கியமான நகரம் ஆகும். அங்கு தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தினால் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகள் மட்டும் இல்லாமல், ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் தொடர்வண்டிகளையும் முடக்கலாம் என்று நினைத்தோம். அதன்படி கும்மிடிப்பூண்டியில் மிகப்பெரிய அளவில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.

ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் வன்னியர் சங்கத்தினரை காவல்துறையினர்  தேடி, தேடி கைது செய்தனர். ஆனால், அவர்களையும் மீறி, 19.12.1986-இல் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்துவதற்காக 500 பெண்கள் உள்ளிட்ட 4000-க்கும் கூடுதலான வன்னியர் சங்கத்தினர், காவல்துறையினரின் கண்களில் படாமல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரிசி ஆலையில் தங்கியிருந்தனர்.

அதிகாலை 4.00 மணிக்கு முன்பாக ஆலையிலிருந்து புறப்பட்ட அவர்கள், சரியாக 4.00 மணிக்கு கும்மிடிப்பூண்டி தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழைந்து மறியல் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.  திடீரென இந்த அளவுக்கு பெருங்கூட்டம் கூடி தொடர்வண்டி மறியலில் ஈடுபடும் என்பதை காவல்துறை  நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. சென்னையிலிருந்து வெளியூருக்கும், வெளிமாநிலங்களுக்கும்  செல்லும் தொடர்வண்டிகளால் கும்மிடிப்பூண்டியை தாண்ட முடியவில்லை. அதிகாலை நேரம் என்பதால் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொடர்வண்டிகள் சென்னைக்கு வந்தன. கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மறியலால் எந்த தொடர்வண்டியும் கும்மிடிப்பூண்டியைத் தாண்டி சென்னைக்குள் வரமுடியவில்லை. கும்மிடிப்பூண்டியில் தொடங்கி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை வரை 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏராளமான தொடர்வண்டிகள் காத்து நின்றன.

4000&க்கும் கூடுதலான தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையால் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் காலை 7 மணிக்கு இரயில் மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர் சங்கத் தொண்டர்களைத் தடியால் அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயற்சித்தனர்.

துப்பாக்கிச்சூடு; காட்டு தர்பார்

ஆனால், அப்போதும் மக்கள் கலைய மறுத்ததால் துப்பாக்கிச் சூடு நடந்தது. மனோகரன், காசிநாதன் உள்ளிட்ட 3 தொண்டர்களின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. மிகவும் ஆபத்தான நிலையில், அவர்கள்  சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பல நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தனர். அவர்களில் காசிநாதன் பின்னாளில் மறைந்து விட்டார். மனோகரன் இப்போதும் உயிருடன் வாழ்ந்து வருகிறார். துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்கள் அனைவரையும் கலைத்த பிறகு காலை 9.00 மணிக்கு பிறகுதான் தொடர்வண்டி போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. வன்னியர் சங்கத்தினரின் மறியலால் சென்னையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் தொடர்வண்டி சேவைகளை 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது மிகவும் பரபரப்பான செய்தியானது. பலரும் இது பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

சாதனைக்கு சொந்தக்காரர்கள்
கும்மிடிப்பூண்டியில் தொடர்வண்டி மறியலை வெற்றிகரமாக நடத்திய வன்னியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆவர். இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாதி.தெய்வசிகாமணி ஆகியோர் தான் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். தலைமையிலிருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞர் குபேந்திர குணபாலன், பேராசிரியர் கோ.சு.மணி ஆகியோர் தான் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரையும் சிறப்பாக ஒருங்கிணைக்கும் பணியை செய்தார். சாவித்திரி அம்மாள், லோகநாதன், துரை. ஜெயவேலு, டி.எம். கணேச ரெட்டியார், சேஷ. வெங்கடாச்சலம், முனுசாமி ரெட்டியார், காசிநாதன், ராமகிருஷ்ண ரெட்டியார், பத்மநாபன், முருகன், தயாள மூர்த்தி, மாரிமுத்து உள்ளிட்டவர்களும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக மிகவும் சிறப்பாக உழைத்தனர்.

குழந்தைகளை தூக்கி வீசிய காவல்துறை

வன்னியர்களின் தொடர்வண்டி மறியல் போராட்டம் வெற்றி பெற்றதையும், 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டதையும் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதினர். அதனால் அவர்களின் கோபம் வன்னிய மக்கள் மீது திரும்பியது.

அடுத்த ஒரு வாரத்திற்கு கும்மிடிப்பூண்டி மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் காவல் துறையின் காட்டு தர்பார் அரங்கேறியது. ஆண்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர். பெண்கள் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். அனால், அப்போது ஏவி விடப்பட்ட பேய்களை விட கொடூரமான காவல்துறையினர்   பெண்களையும் அடித்துக் கொடுமைப்படுத்தினர். காட்டுமிராண்டித் தனத்தின் உச்சக்கட்டமாக பெண்களில்  கைகளில் இருந்த குழந்தைகளையும் தூக்கி வீசினர். கண்ணில் தென்பட்ட மாடுகளைக்கூட வெறித்தனமாக  அடித்து அவர்களுடைய கோபத்தைத் தணித்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான ஆண்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டன.

நேரில் ஆறுதல்

கும்மிடிப்பூண்டியில் வெற்றிகரமாக தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தியதற்காக எனது சொந்தங்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய செய்திகள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எனக்கு வந்து கொண்டிருந்தன. ஒரு சில நேரங்களில் அந்த செய்தி எனக்கு மிகுந்த மன வலியைக் கொடுக்கும்; வேறு சில நேரங்களில் இதயத்தை கொதிக்க வைக்கும். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று துடித்தேன்.

அதற்காகவே எனது பிணை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டேன். பிணை கிடைத்து சென்னை மத்திய சிறையிலிருந்து வெளிவந்தவுடன் வீட்டுக்குக் கூட செல்லாமல் நேரடியாக கும்மிடிப்பூண்டிக்கு சென்றேன். அங்கு காவல்துறையினரால் அத்துமீறப்பட்ட  ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள மக்கள் அனைவரும் சந்தித்து ஆறுதல் கூறினேன். கும்மிடிப்பூண்டியில் தொடங்கி ஆந்திர மாநில எல்லை வரை உள்ள அனைத்து கிராமங்களுக்கும்  சென்றேன். அந்தப் பகுதியில் எனது கால் படாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்துப் பேசினேன். காவல்துறையின் அத்தனை அத்துமீறலையும் கடந்து மக்கள் துணிச்சலுடனும், எழுச்சியுடனும் இருந்தனர். சமூகநீதிக்காக இன்னும் எத்தனைப் போராட்டங்களை வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கைதானவர்கள் பட்டியல்

கும்மிடிப்பூண்டியில் நடத்தப்பட்ட  தொடர்வண்டி மறியல் போராட்டம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் வெற்றிகரமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. திருச்சியில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தை வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியம் தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் பால.சண்முகம் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதனால் நெல்லை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி முண்டியம்பாக்கத்தைத் தாண்டி சென்னைக்கு  செல்ல முடியவில்லை.

அதேபோல், மதுரையில் கோமதி அம்மாள் தலைமையிலும், கோவையில் சி.பி.இராதாகிருஷ்ணா தலைமையிலும், நெல்லையில் பாபநாசம் பரமசிவம் தலைமையிலும் தொடர்வண்டி மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற பல்லாயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு, 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டம்மாள் என்ற 65 வயது மூதாட்டியும் மிகவும் துணிச்சலாக கைதாகி சிறைக்கு சென்றார் என்பது அந்த நேரத்தில் வன்னிய மக்கள் எவ்வளவு துணிச்சலுடன் இருந்தார்கள் என்பதற்கு உதாரணம் ஆகும்.

நானும் தொண்டர்களும்!

ஒரு விஷயத்தை நான் மீண்டும், மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். ஏற்கனவே நான் பலமுறை கூறியவாறு பாட்டாளி சொந்தங்களுக்காகத் தான் நான் வாழ்கிறேன்; பாட்டாளி சொந்தங்களால் தான்  நான் வாழ்கிறேன் என்பதை மீண்டும், மீண்டும் சொல்கிறேன். என் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் தான் எனக்கு பலம் ஆவர். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சென்னை பேசின்பாலம் பகுதியில் தொடர்வண்டி மறியல் செய்ததற்காக டிசம்பர் 19 கைது செய்யப்பட்ட நான், அதன்பின் 5 நாட்கள் ஆகியும் விடுதலை செய்யப்படவில்லை. அதனால் ஆத்திரமடைந்த  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் கூடுதலான வன்னியர் சங்கத் தொண்டர்கள், என்னை விடுதலை செய்யக் கோரி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் டிசம்பர் 24 ந்தேதி அன்று  இரவு 12 மணியிலிருந்து  சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கம் போலவே அவர்கள் போராட்டத்தை கைவிடத் தயாராக இல்லை. மருத்துவர் அய்யா விடுதலையான செய்தி வெளிவந்தால் மட்டும் தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று உறுதியாக கூறி விட்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காகக் காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேருக்கு கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்களுக்கு உடனடியாக தரமான சிகிச்சை அளிக்க வன்னியர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

துப்பாக்கிக் குண்டுடன்!

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை கண்டு எவரும் கலைந்து செல்லவில்லை. மாறாக, காவல்துறையினரின் துப்பாக்கிகளுக்கு மார்பைக் காட்டிக் கொண்டு துணிச்சலுடன் போராடினார்கள். அப்போது தான் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் தட்டானோடை செல்வராஜ் என்ற இளைஞருக்கு மார்பில் குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு துப்பாக்கி குண்டு காயங்களுக்கு மருத்துவம் அளிக்க வசதி இல்லை என்று கூறப்பட்டு விட்டதால், தட்டானோடை செல்வராஜ் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் பஞ்சமூர்த்தி அறுவை சிகிச்சை செய்து குண்டுகளை அகற்றினார்.  விலாப் பக்கத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்களால் அகற்ற முடியவில்லை. அதை அகற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பதால், அதை அகற்ற வேண்டாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதனால், மாவீரன் செல்வராஜ் தனது மார்பில் பாய்ந்த துப்பாக்கி  குண்டுடன் இன்றும் வாழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, தட்டானோடை செல்வராஜ் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த போது, அவரது உடல்நலத்தை விசாரித்து 28.12.1986-இல் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தை செல்வராஜ் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார். இவர்களைப் போன்ற தொண்டர்களைப் பெற்றதை விட எனக்கு வேறு என்ன பேறு வேண்டும். துப்பாக்கிச்சூட்டு காயங்கள் ஓரளவு குணமடைந்த நிலையில், முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே செல்வராஜை வெளியில் அனுப்பி விட்டது சென்னை பொதுமருத்துவமனை. அதன்பின், செல்வராஜை திண்டிவனத்தில் உள்ள எனது வீட்டில்  ஒரு மாதத்திற்கும் மேலாக தங்க வைத்து  அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினேன்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் எழுதிக் கொண்டிருந்த போது, சமூகத்திற்காக நடத்திய போராட்டங்கள் குறித்தும், அப்போராட்டங்களில் தட்டானோடை செல்வராஜ் போன்றவர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் நினைத்துப் பார்த்த போது ஒருபுறம் மலைப்பாகவும், மறுபுறம் பெருமிதமாகவும் இருந்தது. உடனடியாக தட்டானோடை செல்வராஜை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரிடமும் உரையாடினேன். அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

துடிப்பு மிக்க விடலைகள்

வன்னியர் சங்கத்தில் வீரமும், துணிச்சலும் மிக்க தொண்டர்கள் எவ்வாறு இருந்தார்களோ, அதேபோல்,  துடிப்பும், இன உணர்வும் மிக்க விடலையர்களும் இருந்தனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 10, 12 வயது தான் இருக்கும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை முழக்கமாக எழுப்புவார்கள். அத்தகைய விடலையர்களை ஒருங்கிணைத்து வன்னியர் சங்கத்தில் ‘விடலையர்கள்  அணி’ என்ற புதிய அணி ஏற்படுத்தப்பட்டது. அந்த அணிக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த  நெடி. கிருஷ்ணமூர்த்தி என்ற சிறுவன் மாநிலத் தலைவராகவும், தருமபுரியைச் சேர்ந்த பி.வி. செந்தில்  என்ற விடலைச் சிறுவன் தான் மாநிலச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த சுடர்விழி என்ற சிறுமியும் விடலையர் அணியில் தீவிரமாக பணியாற்றி வந்தனர்.

அப்போது அந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிக்கு வயது என்ன தெரியுமா?

வெறும் 11 முதல் 12 வரை தான்.

அப்படி ஒரு அணி இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் எந்த ஒரு கட்சியிலும், இயக்கத்திலும் கிடையாது. விடலையர் அமைப்பைச் சேர்ந்த நெடி.கிருஷ்ணமூர்த்தி, பி.வி.செந்தில் ஆகியோர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வடாற்காடு, தென்னாற்காடு , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று கிளைகளை உருவாக்கினார்கள்.

அப்போது விடலையர் அணியைச் சேர்ந்தவர்கள் துடைப்பம் செய்யப் பயன்படும் தென்னை அலகில்  வன்னியர் சங்கக் கொடியை கட்டிக் கொண்டு தெருத்தெருவாகச் சென்று  மருத்துவர் அய்யா வாழ்க, வன்னியர்களுக்கு  20% தனி இட ஒதுக்கீடு வழங்கு  என்ற்றெல்லாம் வலியுறுத்தி முழக்கம் எழுப்புவார்கள். 10 முதல் 12 வயது வரையுள்ள சிறுவர்களைக் கொண்டு விடலையர் அணி என்ற அமைப்பை உருவாக்கி கொள்கைகளை பரப்பியது சாதனை மட்டுமல்ல.... பதிவு செய்யப்பட வேண்டிய வரலாறு ஆகும்.

விடலையர் அணியின் தலைவராக இருந்த நெடி. கிருஷ்ணமூர்த்தி பின்னாளில் காலமாகிவிட்டார். செயலாளராக இருந்த சிறுவன் செந்தில் தான் வளர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளராக பணியாற்றி வருகிறார்.  இவ்வாறாக தன்னலம் கருதாத இயக்கப்பணிகளை செய்யும் சொந்தங்கள் கிடைத்தது தான் வன்னியர் சங்கத்தின் வலிமையாகும்.
நாளை
தொடர் சாலைமறியல் போராட்ட அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages