முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 32
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
31. தொடங்கியது தொடர் சாலைமறியல்!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னியர் சங்கம் அறிவித்திருந்த ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டம் 17.09.1987 அதிகாலை 12.01 மணிக்கு தொடங்கியது. பல நெடுஞ்சாலைகளில் நள்ளிரவில் சாலைமறியல் போராட்டம் தொடங்கி விட்டது. திண்டிவனத்தில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு நான் தலைமையேற்றிருந்தேன். போராட்டத்தின் முதல் நாளிலேயே நானும் மற்ற தலைவர்களும் கைது செய்யப் பட்டு, சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டோம். ஆனால், அதற்கு முன்பாகவே உரிமை கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பாட்டாளி சொந்தங்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு, பல பாட்டாளி சொந்தங்களின் உயிர்களை கொடூரமான முறையில் பறித்திருந்தது.
சுட்டுக் கொன்றது எம்.ஜி.ஆர் ஆட்சி...
சுடச் சொல்லி தூண்டியது கலைஞர் கட்சி!
சமூக நீதி கேட்டு தொடர் சாலைமறியல் போராட்டம் தொடங்கிய நாளிலேயே பாட்டாளிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முழு முதற்காரணமாக திகழ்ந்தது திமுக தலைமை ஆகும். சாலை மறியல் போராட்டத்தில் பாட்டாளி சொந்தங்களை சுட்டுக்கொன்றது எம்.ஜி.ஆர் அரசு என்றால், அதற்கு அனைத்து வழிகளிலும் காரணமாக இருந்தது அவரது நண்பர் கலைஞரின் கட்சி ஆகும். இது எப்படி என்பது குறித்து விளக்குகிறேன்....
இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பே வன்னியர் சங்கம் அறிவித்து விட்டது. அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப் படவில்லை என்றாலும் ஜூன் மாதம் 14-ஆம் தேதி தருமபுரியில் போராட்ட விளக்க மாநாடு நடத்தப்பட்டது. அதன்பின் ஜுன் 26&ஆம் தேதி போராட்டத்திற்கான தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் விட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கும், போராட்டத்திற்கும் இடையில் 3 மாத இடைவெளி இருந்தது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த திமுக தலைவர் கலைஞர், போராட்டத்திற்கு சில வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 16&ஆம் தேதி மாலை அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவும், திமுக முப்பெரும் விழாவும் நடைபெறும் என்று அறிவித்தார். கலைஞரின் இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள சூழ்ச்சியும், அரசியல் உள்நோக்கமும் எங்களுக்கு நன்றாகத் தெரிந்தது. அதை முறியடிக்க நாங்கள் பாடுபட்டோம்.
கலைஞரின் அரசியல் கணக்கு
வன்னியர் சங்கத்தின் தொடர் சாலைமறியல் போராட்டம் செப்டம்பர் 17&ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு தொடங்கும் என்று தெளிவாக நாங்கள் அறிவித்திருந்தோம். அத்தகைய சூழலில் 16&ஆம் தேதி மாலையில் திமுகவின் முப்பெரும் விழாவும், அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவும் நடத்தப் பட்டால், விழா முடியவே இரவு 10 மணிக்கு மேலாகி விடும். அந்த விழாவுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திமுக தொண்டர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10 மணிக்கு விழா முடிந்தால், அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது 17&ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்குள்ளாக அவர்களால் வன்னியர் சங்க சாலை மறியல் போராட்டம் நடைபெறும் மாவட்டங்களைக் கடக்க முடியாது. அத்தகைய சூழலில் நடு வழியில் சிக்கிக் கொள்ளும் அவர்களுக்கும், மறியல் போராட்டம் நடத்தும் வன்னியர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் ஆபத்து இருந்தது. அப்படி ஏதும் நடந்து விடக் கூடாது என்று நாங்கள் கவலைப்பட்டோம். ஆனால், அப்படித் தான் நடக்க வேண்டும் என்று கலைஞர் கருதியதாக தெரிகிறது.
அதற்கும் காரணம் இருந்தது....
எம்.ஜி.ஆர் அடுத்தடுத்து 3 தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார். அதனால் கலைஞரால் 11 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியவில்லை. அதிமுக அரசை எதிர்த்தும் அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் திமுகவினருக்கும், வன்னியர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், அதை வைத்து அரசியல் லாபம் தேடலாம் என்பதே கலைஞரின் எண்ணமாக இருந்தது. அனைத்திலும் அரசியல் கணக்கு போடுவது தானே அவரது வழக்கம்.
எடுபடாத வீரபாண்டி ஆறுமுகத்தின் அறிவுரை
இதையறிந்த நான் திமுகவின் முப்பெரும் விழாவை செப்டம்பர் 15-ஆன் தேதியே நடத்தி முடித்துக் கொள்ளும்படி திமுக தலைமைக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் திமுக தலைமை அதை ஏற்கவில்லை. அதன்பின்னர் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தை நானும், பேராசிரியர் தீரனும் தொடர்பு கொண்டு பேசினோம். அவரிடம் நிலைமை விளக்கிய நாங்கள், குறைந்தபட்சம் விழா முடிந்து 17-ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்குள் வன்னியர் சங்கப் போராட்டம் நடைபெறும் மாவட்டங்களை திமுகவினர் கடந்து செல்லும் வகையில் நிகழ்ச்சியை மாலை 4.00 மணிக்குள் முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம்.
அதன்படி, வீரபாண்டி ஆறுமுகமும் கலைஞரை சந்தித்து இதுபற்றி பேசியிருக்கிறார். வன்னியர் சங்கத்தினரின் போராட்டம் மிகவும் உக்கிரமாக இருக்கும். அவர்கள் சொன்னபடியே போராட்டத்தை நடத்துவார்கள். அதனால் நாம் நமது விழாவை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம் என்று கலைஞருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால், அதையும் கலைஞர் ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி 16&ஆம் தேதி மாலை விழாவைத் தொடங்கி இரவு 9.00 மணிக்கு பிறகு தான் நிறைவு செய்திருக்கிறார்கள். மற்றொருபுறம் வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் போராட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறே 17&ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு தொடங்கி விட்டது. திமுகவினர் திண்டிவனத்திற்கு முன் சாலை என்ற இடத்திற்கு வரும் போதே அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்து விட்டனர். ஆனாலும் அவர்கள் சமாளித்து விக்கிரவாண்டியை கடந்து விட்டனர். விக்கிரவாண்டிக்கும், விழுப்புரத்திற்கும் இடையில் உள்ள பாப்பனபட்டு கிராமத்தை அவர்களால் கடக்க முடியவில்லை. தங்களுக்கு வழிவிடும்படி திமுகவினர் மிரட்டினார்கள். ஆனால், அந்த மிரட்டலுக்கு வன்னியர் சங்கத்தினர் அஞ்சவில்லை.
குடிசைகளை கொளுத்திய திமுகவினர்
ஒரு கட்டத்தில் வன்னியர் சங்கத்தினரின் கவனத்தை திசைத் திருப்பி அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தனர். அதற்காக, அவர்கள் அந்த பகுதியில் உள்ள பனையபுரம், மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வன்னியர்கள் மற்றும் தலித்துகளின் குடிசைகளை தீயிட்டு கொளுத்தினர். அதனால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்திக் கொண்டு திமுகவினர் கோலியனூர் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். அங்கும் அவர்களுக்கும் வன்னியர் சங்கத்தினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன; அதைத் தொடர்ந்து அங்கும் பல குடிசைகளை திமுகவினர் தீயிட்டு கொளுத்தினார்கள்.
திமுகவினர் குடிசைகளை கொளுத்தும் வரை போராட்டம் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது. திமுகவினருக்கும், வன்னிய சங்கத்தினருக்கும் இடையே மோதல் மூண்டதை அறிந்த காவல்துறையினர் பாப்பனப்பட்டு கிராமத்திற்கும், கோலியனூருக்கும் விரைந்தனர். அதன்பிறகு தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
போராட்டத்தின் முதல் பலி
பாப்பனப்பட்டு கிராமத்தை அதிகாலை 3.00 மணிக்கு முற்றுகையிட்ட காவல்துறையினர், அங்கு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார்கள். அதிகாலை 3.00 மணிக்கு அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் எந்த அளவுக்கு இருள் இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும். அந்த இருட்டில் அஞ்சி ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது, தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, முழங்காலுக்கு கீழே சுடுவது போன்ற எந்த முன்னெச்சரிக்கைகளையுமே செய்யாமல் நான்கு திசைகளை நோக்கியும் காக்கை குருவிகளை சுடுவது போல கண்மூடித்தனமாக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதை 02.10.1987 தேதியிட்ட தராசு வார இதழ் செய்தியும் உறுதி செய்தது.
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலில் ஆளானவர் வீரப்பன் என்ற 25 வயது இளைஞர் ஆவார். காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில், உயிரை கைகளில் பிடித்துக் கொண்டு, எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் அந்த இளைஞர் தவழ்ந்து தவழ்ந்து வந்தார். அருகிலுள்ள மாரியம்மன் கோவிலை நெருங்குவதற்குள் அவர் மயங்கி விழுந்தார்.
ரெங்கநாத கவுண்டருக்கு இழைக்கப்பட்ட கொடுமை
வீரப்பனின் அலறல் சத்தம் கேட்டதும், அப்பகுதியைச் சேர்ந்த ரெங்கநாதன் அருகிலுள்ள குடிசையிலிருந்து, ‘‘ அடடா.... நம்ம பையனாட்டம் இருக்கே’’ என்று கதறியபடியே ஓடி வந்தார். சுருண்டு விழுந்து கிடந்த இளைஞன் வீரப்பனை நெருங்க முயன்றார். ஆனால், அதற்கு முன்பாகவே அவரை நோக்கி காவல்துறையினரின் துப்பாக்கிகள் திரும்பின. அதைப் பார்த்த ரெங்கநாத கவுண்டர், தமது இரு கைகளையும் கூப்பி காவல்துறையினரை கும்பிட்டு,‘‘ என்னை விட்டு விடுங்கள்’’ என்று கெஞ்சினார். ஆனால், அரக்ககுணம் கொண்ட அந்த காவலர்கள் அதை பொருட்படுத்தவில்லை. கையெடுத்து கும்பிட்ட ரெங்கநாதக் கவுண்டரை துப்பாக்கி குண்டுகளால் துளைத்து எடுத்தனர் காவல்துறையினர். அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்து வீழ்ந்தார். அவர் தான் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் முதல் பலி ஆவார். அவர் இறந்து கிடந்த இடத்தை நெருங்கிய காவலர்கள், அவரது உடலை அங்கிருந்து அகற்றினார்கள். அதே இடத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வீரப்பனின் கால்களைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த அந்த ஊரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், வீரப்பனை கால்களைப் பிடித்து இழுத்துச் சென்றதை பார்த்து விட்டான். அதனால், அச்சிறுவனை துப்பாக்கியின் அடிக்கட்டையால் தாக்கி காயப்படுத்தினார்கள் காவல்துறையினர். காவல்துறையினர் அந்த அளவுக்கு கொடூரத் தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரப்பன் அடுத்து சில நாட்கள் கழித்து உயிரிழந்தார்.
காவல்துறையினரின் மிருகத்தனம்
அதேநாளில் கோலியனூர் கூட்டுச் சாலையில் காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்கார வேலு ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஏழுமலை 25 வயது மட்டுமே நிறைந்த இளைஞர். அவர் மறைந்ததால் அவரது மனைவி அஞ்சலாட்சியும், ஒரு வயதுக் குழந்தையும் ஆதரவற்றவர்களாகி விட்டனர்.
முண்டியம்பாக்கம் சிங்காரவேலு துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருந்த நிலையில் காவல்துறையினர் நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், 25 மணி நேரமாக அவரை மருத்துவமனைக்குக் கூட எடுத்துச் செல்லாமலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தராமலும் காவல்துறையினர் கொடுமைப்படுத்திக் கொன்றனர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் தான் சிங்காரவேலு பணியாற்றி வந்தார். துப்பாக்கிச் சூட்டில் சிங்காரவேலு கொல்லப்பட்ட பிறகு நாவம்மா (அப்போது வயது 30) என்ற அவரது மனைவியும், மூன்று குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகி விட்டனர்.
நாளை....
சமூகநீதிக்காக வீரச்சாவு அடைந்த
புறநானூற்று வீரர்களும், புரட்சியாளர்களும்!
No comments:
Post a Comment