முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 35 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 35

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 35

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

34. கொலை, கொள்ளை, தீ வைப்பு....
தொடர்ந்த காவல்துறை காட்டு தர்பார்!

காவல்துறையின் பணிகள் என்ன?

* மக்களைக் காப்பது,
* கொலை நடக்காமல் தடுப்பது,
* கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது,
* பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது,
* வீடுகளில் திருட்டு, சாலைகளில் வழிப்பறி நடக்காமல் தடுப்பது,

ஆனால், இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து வன்னியர் தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது எவற்றையெல்லாம் காவல்துறை செய்ய வேண்டுமோ, அவற்றையெல்லாம் காவல்துறை செய்யவில்லை; மாறாக, எவற்றையெல்லாம் காவல்துறை செய்யக்கூடாதோ, அவற்றையெல்லாம் காவல்துறை செய்தது. தமிழக காவல்துறையின் வரலாற்றில் அந்தக் காலம் கருப்புப் பக்கங்களாகவே  இருக்கும்.

17.09.1987-இல் தொடர் சாலைமறியல் போராட்டம் தொடங்கிய நாளில் எங்கெல்லாம் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றனவோ, அங்கெல்லாம் காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 12 பேரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூடு நடத்த முடியாத இடங்களில், யாரெல்லாம்  போராட்டத்தை முன்னின்று நடத்தினார்களோ, அவர்களை குறிவைத்து ஊர்களுக்குள் புகுந்து கொடூரமாக தாக்குதல் நடத்துவதை புதிய வாடிக்கையாக மாற்றியிருந்தனர் தமிழக  காவல்துறையினர்.

அப்பாவி அண்ணாமலை கவுண்டரை
அடித்துக் கொன்ற காவல்துறை

அதன்படி கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கிராமம் தான் அன்றைய தென்னாற்காடு மாவட்டம்  பேரங்கியூர் கிராமம் ஆகும்.  தொடர் சாலைமறியல் போராட்டம் 17&ஆம் தேதி முழுமையாக வெற்றி பெற்ற பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். அதை ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால், அந்த ஊர் மக்களை ஒடுக்கும் நோக்கத்துடன் 17-ஆம் தேதி இரவு பயங்கர ஆயுதங்களுடன் 20 காவலர்கள் கொண்ட குழுவை அனுப்பியது காவல்துறை தலைமை. ஆனால், அவர்களின் வருகைக்கு ஊர்மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காவல்படையினர் திரும்பிச் சென்று விட்டனர். அதை தங்களுக்கு ஏற்பட்ட இரண்டாவது தோல்வியாக எடுத்துக் கொண்ட காவல்துறை, கூடுதல் காவலர்கள் மற்றும் ஆயுதங்களுடன் அடுத்த நாள் காலை பேரங்கியூர் கிராமத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கத் தொடங்கியது. மக்களின் உடமைகள் நாசப்படுத்தப்பட்டன.

வீடுகளுக்குள் புகுந்த காவல்துறையினர் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும் துப்பாக்கிக் கட்டைகளால் கடுமையாக தாக்கினர். வீட்டிலிருந்து பொருட்களை கொள்ளையடித்தனர். காவல்துறையினரைக் கண்டு அங்குள்ள மக்கள் அஞ்சி நடுங்கினர்.

அந்த நேரத்தில் தான் அண்ணாமலை கவுண்டர் என்ற 60 வயது பெரியவர் வயலுக்கு சென்று ,  பணிகளை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  உண்மையில் அவர் சாலைமறியல் போரில்  கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்று தவறாக நினைத்துக் கொண்ட காவல்துறையினர், தெருவில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் அவரை மார்பிலும், உயிர்நிலையிலும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர்.  காவல்துறையினரின் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாமல் அண்ணாமலை கவுண்டர் மயங்கி விழுந்து கிடந்தார். காவலர்களின் தலைகள் மறைந்த பிறகு தான் அண்ணாமலை கவுண்டரை அவரது குடும்பத்தினர்  வீட்டுக்குள் தூக்கிச் சென்று மயக்கம் தெளிய வைக்க முயன்றனர். அப்போது தான், காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது; அதனால் அந்த ஊரே சோகத்தில் உறைந்தது.

காவல்துறை தாக்குதலில் காயமடைந்து
சிறையில் இறந்த கொழப்பலூர் முனுசாமி கவுண்டர்

தென்னாற்காடு மாவட்டம் மேல்மலையனூர் பகுதி வறட்சிக்கு பெயர் போன வானம் பார்த்த பூமி ஆகும். அந்தப் பகுதியில் உள்ள கொழப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. சிறந்த கொள்கைவாதி. ஆனால், பொருளாதாரத்தில் பரம ஏழை. சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும் என்ற கடமை உணர்வுடன் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்று, அதற்காக கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அடுத்துள்ள பகுதியில் தான் முனுசாமி அடைக்கப் பட்டிருந்தார்.  அவரை கைது செய்யும் போதே, காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதனால் சிறைக்கு வந்த சில நாட்களில் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருந்தால் நிச்சயமாக காப்பாற்றியிருக்கலாம். ஆனால், இரும்பால் செய்யப்பட்ட இதயத்தைக் கொண்ட சிறைத்துறையினர், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு கூட முன்வரவில்லை. இதனால் அவர் துடிதுடித்து சிறையில் உயிரிழந்தார்; அவர் உயிரிழந்தார் என்று கூறுவதை விட,  போராட்டக் களத்தில் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டதாலும், சென்னை சிறையில் மருத்துவம் மறுக்கப்பட்டதன் மூலமும் படுகொலை செய்யப்பட்டார் என்பது தான் உண்மையாகும்.

முனுசாமி நாயகருக்கு இழைக்கப்பட்ட கொடுமை

காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி வீரச்சாவு அடைந்தவர்களை விட துப்பாக்கிக் கட்டைகளாலும், பிற ஆயுதங்களாலும் கொடூரமாகத் தாக்கி கொல்லப்பட்டவர்கள் தான் அதிக சித்திரவதைகளை அனுபவித்தனர். சாலைமறியல் போராட்டத்தின் போது இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம்  குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ரா.மு. முனுசாமி நாயகரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல்துறையினரின் காவலில் இருக்கும் போதே கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார் அந்தப் பெரியவர்.  அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மிகவும் தாமதமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ,அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதனால் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். முனுசாமி நாயகரை நம்பியிருந்த குடும்பம் ஆதரவற்றதாகி விட்டது.

பண்பாளர் அமரத்தானூர் மயில்சாமிக்கு
ஏற்பட்ட பயங்கரமான முடிவு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரத்தானூர் மயில்சாமி. அன்பும், பண்பும் மட்டும் தான் அவரது சொத்து. ஆவருக்கு சொந்தமாக  நிலமோ, வேறு சொத்துகளோ  கிடையாது. அமரத்தானூரில் உள்ள ஒரு வீடு மட்டும் தான் அவரது சொத்து ஆகும். மேட்டூர் அருகில் உள்ள குஞ்சாண்டியூர் டிசி.எம். ஆலையில் பணியாற்றிய அவருக்கு மாதச் சம்பளம் 400 ரூபாய் மட்டும் தான். அதைக் கொண்டு தான் அவர் குடும்பத்தை நடத்தினார்.  அவருக்கு எந்தவொரு தீயப்பழக்கமும் கிடையாது. அதனால் அவரது குறைந்த வருமானத்தில் எந்த குறையும் இல்லாமல் குடும்பம் நடத்தி வந்தார்.

தொடர் சாலைமறியல் போராட்டத்தின் இரண்டாம் நாளான செப்டம்பர் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை  இன உணர்வு கொண்டு, தம்முடன் பணியாற்றும்  உறவினர்கள் சுமார் 100 பேரை அழைத்துக் கொண்டு மேச்சேரி - மேட்டூர் சாலையில் செல்லும் வாகனங்களை மறிக்கும் நோக்குடன் சென்றார். அவரை காவல்துறையினர் எச்சரித்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் நண்பர்களுடன் மறியலில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மிகவும் கொடூரமான முறையில் தடியடி நடத்தினார்கள். அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறையினர் தயாரானவுடன், அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடினார் மயில்சாமி. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தான் காவல்துறையினரின் முதல் கடமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இதயமும், மனசாட்சியும்  மரத்துப் போன காவலர்கள், அமரத்தானூர் மயில்சாமிக்கு சிகிச்சை அளிக்காமல் அருகில் இருந்த கிணற்றில் தூக்கி எறிந்துள்ளனர். ஏற்கனவே குண்டடி பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமரத்தானூர் மயில்சாமி கிணற்றில் மூச்சுத் திணறி இறந்து போனார். ஆனால், அவருக்கு என்ன ஆனது? என்பது குறித்து அவரது நண்பர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது.

சாலை மறியலுக்காக சென்ற அமரத்தானூர் மயில்சாமி மாயமானது அந்தப் பகுதியில் கொந்தளிப்பை உண்டாக்கியது. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கிணற்றில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மயில்சாமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டால் அவரைத் தாங்கள் ஏற்கனவே துப்பாக்கியால் சுட்டதும், காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை கிணற்றில் தூக்கிப் போட்டதும் பொதுமக்களுக்கு தெரிந்து விடும்; அதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்று காவல்துறையினர் அஞ்சினார்கள். அதனால், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல்,  காவல்துறையினர் கொண்டு சென்று  எரித்து விட்டனர். இது கொடுமை அல்லவா?

சிறைத்தாக்குதல் காரணமாக விடுதலையான
பிறகு உயிரிழந்த சிவதாபுரம் குப்புசாமி

சேலம் மாவட்டம் சிவதாபுரம்  மொரம்புக்காட்டைச் சேர்ந்த குப்புசாமி ஏழை ஆனாலும் ஒழுக்கமானவர். அவருக்கும் கூரை வீட்டைத் தவிர வேறு சொத்துகள் கிடையாது. கூலி வேலை செய்து தான் குடும்பம் நடத்தி வந்தார். எந்த அரசியல் கட்சியுடனும், மற்ற அமைப்புகளுடனும் தொடர்பு இல்லாதவர். ஆனாலும் இனப்பற்று மிக்கவர். சாலைமறியல் போராட்டத்தின் போது பல இடங்களில் மறியலில் ஈடுபட்டதற்காக  சிறையில் அடைக்கப்பட்டார். 21 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை ஆன ஒரு வாரத்திற்குள் அவர் உயிரிழந்து விட்டார். சிறைக்கு செல்லும் முன் அவருக்கு எந்த நோயும் இல்லை. சிறையில் இழைக்கப்பட்ட கொடுமைகள் காரணமாகத் தான்  அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்; அவ்வகையில் அவரது உயிரிழப்புக்கும் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது  குற்றச்சாட்டு.

கோவிந்தசாமி நாயகர்

காஞ்சிபுரம் வட்டம் மொசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி நாயகர் சாலைமறியலில் ஈடுபட்டு  கைதானார். சிறையில் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். அதன் காரணமாக சிறையிலேயே உயிரிழந்தார்.

வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன்

மதுராந்தகம் வட்டம் வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். சென்னை & திண்டிவனம் நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் செப்டம்பர் 17&ஆம் தேதி சாலைமறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மோசமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன் விடுதலையான சிறிது காலத்திலேயே காலமானார்.

மாற்று சாதியினரையும்
விட்டு வைக்காத வெறி!

அச்சரப்பாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் வன்னியர் அல்லர். அவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்தனர். அவர் தாம் வன்னியர் இல்லை என்று கூறியதையும் பொருட்படுத்தாமல் அவரை கோவை சிறையில் அடைத்தனர். அங்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரைப் போலவே போராட்டத்தின் போது கொல்லப்பட்ட, மாற்று சாதியைச் சேர்ந்த  இன்னொருவர் பண்ருட்டி வட்டம் தண்டரக்கோட்டையை அடுத்த புலவனூரைச் சேர்ந்த ஜெயவேல் பத்தர்.  அப்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் வன்னியர்களுக்கு எதிராக பட்டியலின மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை செய்ய வைத்தார். அந்த வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் புலவனூரைச் சேர்ந்த ஜெயவேல் பத்தரை சுளுக்கி என்ற ஆயுதத்தால் குத்திக் கொலை செய்தனர்.

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு, தாக்குதல், ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்பட்ட பட்டியலினத்தவரின் வன்முறை ஆகியவற்றுக்கு மொத்தம் 21 தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.  அவர்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி தியாகிகள் நாளாக  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் மீதும் ஒடுக்குமுறை

இவர்கள் தவிர காவல்துறையினரின் தாக்குதலில் ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகினர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். வன்னிய மக்கள் வழிபடும் கோவில்கள்  சூறையாடப்பட்டன. இந்த அடக்குமுறைக்கு துணையாக இராணுவமும் வரவழைக்கப்பட்டது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களால் வன்னியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

அப்படியும் கூட வன்னியர்களின் எழுச்சி மிகுந்த போராட்டத்தை அடக்க முடியவில்லை. போராட்டம் நடைபெற்ற 7 நாட்களும் தமிழகத்தில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை. தொடர் சாலைமறியல் போராட்டம் நடைபெற்ற போது காவல்துறை தலைமை இயக்குனராக இருந்தவர் ஸ்ரீபால். அவரது தலைமையிலான படைகள் தான் இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றினர். சாலை மறியல் போராட்டம் நடைபெற்று சில ஆண்டுகள் கழித்து ஏதோ ஒரு நிகழ்வில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. அப்போது தான் வன்னியர் சங்கப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக செப்டம்பர் 19-ஆம் தேதி சென்றதாகவும், ஆனால், எந்த இடத்திற்கும் சாலை வழியாக செல்ல முடியாத அளவுக்கு போராட்டம் தீவிரமாக இருந்ததாகவும், அதனால் பல மாவட்டங்களுக்கு தாம் ஹெலிகாப்டர் மூலம் தான் பயணித்ததாகவும்  ஸ்ரீபால் என்னிடம்  தெரிவித்தார். இந்தியாவில் வேறு எங்குமே இப்படி ஒரு போராட்டம் நடத்தப்பட்டதில்லை. அந்த வகையில் இது ஒரு வரலாறு.

நாளை....
வன்னியர் சங்கம் மீதான அவதூறுகளும், பழிகளும் மற்றும் உண்மை நிலவரமும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages