முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 38
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
37. தியாகிகள் குடும்பங்களின் துயர் துடைப்பு!
தொடுவானம் என்பது தொட்டுவிடும் தொலைவில் தான் இருப்பது போலத் தோன்றும். ஆனால், அது தொட முடியாத வானம். தொடுவானத்தை தொடுவதற்காக நாம் அருகில் நெருங்கி, நெருங்கிச் செல்லும் போது, அது நம்மை விட்டு விலகி, விலகிச் செல்லும். வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையும் கிட்டத்தட்ட அப்படித்தான். நாளை சாத்தியமாகிவிடும் என்று நினைத்த போதெல்லாம் அது நழுவி, நழுவித் தான் சென்று கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் 28 அமைப்புகளை ஒருங்கிணைத்து வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 உன்னதமான கோரிக்கைகளும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் வலியுறுத்தப்பட்டன. இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு, பட்டினிப் போராட்டம், ஒரு நாள் சாலைமறியல், ஒரு நாள் தொடர்வண்டி மறியல் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் நடத்தப்பட்டன. ஆனால், அப்போதெல்லாம் வன்னியர் சங்கப் போராட்டத்தை கண்டுகொள்ளாத எம்.ஜி.ஆர், ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து சாதி சங்கங்களையும் அழைத்துப் பேசியதும், பேச்சுக்களின் போது நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை மிகவும் கவனமாகக் கேட்டதும் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதன்பின் வன்னியர்களுக்கு 13% தனி இட ஒதுக்கீடு வழங்க கோப்பு தயாராகிவிட்டதாக தகவல்கள் கிடைத்த போது நம்பிக்கை மேலும் அதிகரித்தது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொடங்கப்பட்ட போராட்டம், எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே வெற்றியடைந்து விடும்; நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர் மறைந்தார் என்ற செய்தியை கேட்ட போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எம்.ஜி.ஆரின் மறைவு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஒரு பெரும் பின்னடைவு என்பதில் ஐயமில்லை.
ஜானகி அம்மையாருக்கு கோரிக்கை
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அவரது துணைவியார் ஜானகி எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலாவது பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்கும் போது அளித்த வாக்குறுதி என்னவென்றால், தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில், தமது கணவர் எம்.ஜி.ஆரின் கனவுகள் அனைத்தையும் நனவாக்குவேன் என்பது தான். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதும் எம்.ஜி.ஆரின் கனவு தான் என்பதால், அந்தக் கனவை நிறைவேற்றித் தரும்படி கனல் இதழின் தலையங்கம் மூலமாக அவருக்கு கோரிக்கை விடுத்தேன். தலையங்கத்தின் முக்கியப் பகுதி வருமாறு:
‘‘ எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்கப் போவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்துள்ள திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள், வன்னியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அவர்கள் ஒரு மாதக் காலம் காலக்கெடு எடுத்துக் கொண்டு, வன்னியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடில், மீண்டும் சங்க மத்தியக் குழு, பொதுக்குழு கூடி மிகத் தீவிரமான இறுதிக்கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்ய வேண்டி இருக்கும்’’ என்று நான் தலையங்கம் தீட்டியிருந்தேன்.
இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் தொடுவானம் உதாரணம் கூறியிருந்தேன் அல்லவா? அது எந்த அளவுக்கு பொருந்துகிறது என்று பாருங்கள். வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர் நினைத்திருந்தார் என்பதால், அவரது விருப்பத்தை அவரது துணைவியார் ஜானகி அம்மையார் நிறைவேற்றி வைப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், ஜானகி அம்மையார் பொறுப்பேற்றதிலிருந்தே, அவரது அரசு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதே அவருக்கு பெரும் தலைவலியாக இருந்ததால், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு கூட நேரமில்லை. கடைசியாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, அவரது அணிக்கும், ஜெயலலிதா தலைமையிலான அணிக்கும் இடையில் பெரும் வன்முறை வெடித்தது. அவரது அரசு பெரும்பான்மையை நிரூபித்து விட்டது என்று சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார் என்றாலும் கூட, ஜானகி அம்மையார் அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது. அத்துடன் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளும் சரிந்தன.
தியாகிகள் குடும்பத்துக்கு உதவி
மற்றொருபுறம் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் துயர் துடைக்க வேண்டிய பெரும்பணி எங்களுக்கு இருந்தது. அதனால், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பிலிருந்தே அப்பணியில் நாங்கள் தீவிரம் காட்டத் தொடங்கினோம். அதற்குத் தேவையான நிதியை வசூலிக்க முடிவானது. இந்த முடிவு தொடர் சாலைமறியல் போராட்டம் முடிவடைந்த சில நாட்களிலேயே எடுக்கப்பட்டது. அப்போது நான் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது என்னை சந்திப்பதற்காக சிறைக்கு வருவோர் மூலமாக அறிவுரைகளை வழங்கி, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பங்களுக்கான துயர்துடைப்பு நிதி வசூலிப்பதற்காக நிதிக்குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவுக்கு பாக்கம் கே. இராமகிருட்டிணன் தலைவராகவும், இனமுரசு செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். விருத்தாசலம் மருத்துவர் ஆர். கோவிந்தசாமி, அப்போது வழக்கறிஞராக இருந்தவரும், பின்னாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக உயர்ந்தவருமான மு.கிருட்டிணசாமி, சென்னை தொழிலதிபர் டெல்டா நாராயணசாமி, எம்.எம். குருபரன், தருமபுரி டி.என்.வினோபாஜி, ஆற்காடு சுந்தரம், செந்துறை பேராசிரியர் மன்னர் மாணிக்கம் ஆகியோர் நிதிக்குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.
துயர்துடைப்பு நிதி திரட்டல், துயர்துடைப்பு நிதிக்கான வரவு - செலவு கணக்குகளை நிர்வகித்தல், துயர்துடைப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபடுதல், துயர்துடைப்பு நிதி திரட்டலை முறைப்படுத்தி, ஒழுங்குடன் கண்காணித்தல் ஆகியவை தான் நிதிக்குழுவுக்கு வழங்கப்பட்ட பணிகள் ஆகும். இந்தக் குழுவினர் அடிக்கடி என்னை சிறையில் சந்தித்து பேசுவார்கள். அப்போது நான் வழங்கும் ஆலோனைகளின் அடிப்படையில் தங்களின் நிதி வசூல், துயர்துடைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தினர்.
நிதி வசூலில் ஒழுங்கு
வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு உரிய அளவில் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னதமான கோரிக்கையை முன்வைத்து போராடும் போது, உயிர்நீத்த தியாகிகளின் குடும்பங்களின் துயர்துடைப்பதற்காகத் தான் இந்த நிதி திரட்டப்படுகிறது என்பதால், அதில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். தலைமைச் சங்கத்தால் வழங்கப்படும் ரசீது இல்லாமல் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் என்று கனல் இதழில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வந்தோம்.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நிதி கொடுத்தவர்களின் பெயர்கள் கூடத் தொடர்ந்து கனலில் வெளியிடப்பட்டு வந்தன. இதற்கிடையே, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான், 27 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டேன். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பாட்டாளி சொந்தங்களை கிராமம் கிராமமாகச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அதற்காக நான் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது பாட்டாளி சொந்தங்கள் பலர் என்னை அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று தேநீர் வழங்குவார்கள். அத்துடன் ரூ.1000, ரூ.2000 என என்னிடம் நிதி வழங்கிய நிகழ்வுகள் ஏராளம் உண்டு.
தியாகத்தை அவமதித்த தமிழக அரசு
இதற்கிடையே, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களை சுட்டுக் கொன்ற தமிழக அரசு, அவ்வாறு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5,000 நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தது. எதிர்காலத் தலைமுறையினர் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக உன்னதமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மக்களை சுட்டுக் கொன்றதுடன், அவர்களின் உயிருக்கு ரூ.5,000 விலை வைப்பதா? என்று பாட்டாளி சொந்தங்கள் கொதித்து எழுந்தனர். தமிழக அரசு அறிவித்த ரூ.5,000 நிதியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தியாகிகளின் குடும்பத்தினர் அறிவித்து விட்டனர்.
தமிழக அரசின் நிதி உதவியை மான உணர்வுடன் வாங்க மறுத்த இட ஒதுக்கீட்டுப் போராட்ட பாட்டாளி தியாகிகளின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா ரூ.10,000 நிதி வழங்கப்படும் என்று வன்னியர் சங்கம் அறிவித்தது. அதன்படி 1987-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்பட்டது.
தந்தை இறந்த நிலையில் தியாகிகளுக்கு உதவி
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு அடுத்தடுத்தக் கட்ட நிதி வழங்குவதற்காக நிதி திரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வாறு திரட்டப்படும் நிதியை ஆங்காங்கே பொதுக்கூட்டம் நடத்தி என்னிடம் வழங்குவார்கள்.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 14.09.1988-இல் அத்தகைய நிதியளிப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக திண்டிவனத்திலிருந்து புறப்படுவதற்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது பகல் 1.00 மணியளவில் நல்ல உடல்நிலையுடன் இருந்த எனது 96 வயது தந்தை எவருமே எதிர்பாராத நிலையில் திடீரென உயிரிழந்து விட்டார்.
ஒருபுறம் தந்தை காலமாகிவிட்டார்.... மறுபுறம் தியாகிகள் துயர்துடைப்பு நிதியை வழங்குவதற்கான கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற வினா என் முன்பாக இருந்தது. நாம் போராடுவதே பாட்டாளி சொந்தங்களுக்காகத் தான். அதற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மக்களுக்கு உதவுவதற்காக நிதி வழங்கும் கூட்டம் நடைபெறவுள்ளது; அதில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள் எனும் போது அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
நான் திண்டிவனத்தில் வசித்து வந்தாலும் கூட, என் தந்தை பிறந்ததும், நான் பிறந்ததும் கீழ்சிவிறி கிராமத்தில் தான். அங்கு தான் தந்தையின் இறுதிச் சடங்குகளும், உடல் அடக்கமும் செய்யப்பட வேண்டும். அதனால், எனது தந்தையின் உடலை உடனடியாக திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கீழ்சிவிறி கிராமத்தில் உள்ள எங்களின் வீட்டிற்கு கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாலை 3.00 மணிக்கு கீழ்சிவிறிக்கு திரும்பினேன். அங்கு ஒரு மகனாக எனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளையெல்லாம் செய்து முடித்து, நண்பகல் 12.00 மணியளவில் உடலை அடக்கம் செய்தோம்.
நினைவுச் சின்னங்கள்
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், அவர்கள் எங்கு சுட்டுக்கொல்லப்பட்டார்களோ, அந்த பகுதியில் நினைவுச் சின்னங்கள் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடங்களில் நினைவுச்சின்னம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி தியாகிகள் நினைவிடத்திற்கு பாட்டாளி சொந்தங்களுடன் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அன்றைய நாளில் தியாகிகள் குடும்பங்களை அழைத்து, அவர்களுக்கு உடையும், நிதியுதவியும் தவறாமல் வழங்கி வருகிறோம்.
நாளை....
கவர்னரும், காங்கிரசும் செய்த துரோகம்!
No comments:
Post a Comment