முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 50 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 50

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 50

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

49. சமத்துவம் வளர்க்கும் கருவி சமூகநீதி!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல.... ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூகநீதிக்காக பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக போராடிய கட்சி வேறு எதுவும் இல்லை. களப்போராட்டமாக இருந்தாலும், அரசியல் போராட்டமாக இருந்தாலும், சட்டப் போராட்டமாக இருந்தாலும் சரி.... சமூகநீதிக்காக போராடுவதில்   ஒட்டுமொத்த இந்தியாவிலும் முதன்மையான கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்.

மண்டல் ஆணைய பரிந்துரைப்படி மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அசோக்குமார் தாக்கூர் என்பவர் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றுக்கு எதிராகவும், 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அந்த வழக்குகளில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஒரே அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வேறு எந்தக் கட்சியும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாதிடவில்லை.

பா.ம.க. தரப்பு வாதம்

27% இட ஒதுக்கீடு வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் வழக்கின் தீர்ப்பை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. பா.ம.க. தரப்பு வாதத்தின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்:

இடஒதுக்கீடு என்பது என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல. வறுமை ஒழிப்பு என்பது அதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 38,39,41,46 ஆகிய பிரிவுகளின் மூலம் தான் செய்யப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு என்பது வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான திட்டமும் இல்லை. அவையும் மேற்கண்ட பிரிவுகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி வழங்குவதற்கான ஏற்பாடும் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 41, 46 ஆகிய பிரிவுகளின் கீழ் தான் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய முடியும்.
மாறாக, இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும், சாதியை ஒழிப்பதற்குமான கருவி ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் 4 மற்றும் 5-ஆவது உட்பிரிவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை வகுக்கப்பட்டதன் ஒரே நோக்கம் சமுதாயத்தில் சமத்துவத்தை  ஏற்படுத்துவது மட்டும் தான். சமுதாயப் படிநிலைகளில் கீழ் நிலையிலும், மேல் நிலையிலும் உள்ள சாதிகள் ஒன்றாக அமருவதும், ஒன்றாக உணவருந்துவதும், சமுதாயத்தில் ஒன்றாக கலப்பதும் சாத்தியமாக வேண்டுமானால் அதற்கு சமுதாயப் படிநிலைகள் அகற்றப்பட வேண்டும். சமுதாயப் படிநிலைகளை அகற்றாமல் சாதிகளை ஒழிக்க முடியாது; சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது. சாதிகளை நாம் ஒரே இரவில் ஒழித்து விட முடியாது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களையும் ஒரே வகுப்பறையில் அமரச் செய்வதன் மூலமாகவும், ஒரே அலுவலகத்தில் பணியாற்றச் செய்வதன் மூலமாகவும் தான் அவர்களை சமுதாயத்தில் ஒன்றாக்க முடியும். அனைத்து சாதியினரையும் கல்வியில் ஒன்றாக்காமல்  சமுதாயத்தில் ஒன்றாக்க முடியாது. ஆகவே, அனைத்து சமுதாயத்தினரையும் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் ஒன்றாக்குவதற்கான ஏற்பாடு தான் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27% இடஒதுக்கீடு ஆகும்.

அம்பேத்கரின் விளக்கம்

இட ஒதுக்கீடு தான் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்பதற்கு வலுசேர்க்கும் வகையில், பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட காகா கலேல்கர் ஆணையத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அளித்த வாக்குமூலத்தின் சில பகுதிகளை சுட்டிக்காட்டுகிறேன். உண்மையில் காகா கலேல்கர் ஆணையத்தின் முன்பாக அம்பேத்கர் ஆஜராகி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து பல கேள்விகளுக்கு விடையளித்தார். ஆனால், காகாகலேல்கர்   ஆணையத்தின் அறிக்கையில் அம்பேத்கரின்  வாக்குமூலம் எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும், கலேல்கர் ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான சிவதயாள்சிங், ஆணைய அறிக்கையில் சேர்த்துள்ள  தமது கருத்துகளில் அம்பேத்கரின் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்திருக்கிறார்.

அம்பேத்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ‘‘ இந்திய சூழலில் பிற்படுத்தப்பட்ட தன்மைக்கு என்ன காரணம்?’’ என்று அம்பேத்கரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் வருமாறு:
‘‘ இந்தியாவின் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஏதாவது  செய்தாக வேண்டும் என்ற சூழலில் நான் இருக்கிறேன். இந்திய சமுதாயங்களின் சமூகநிலையை பாருங்கள். இந்திய மக்களின் சமூகநிலை பல்வேறு வித்தியாசங்களைக் கொண்டதாக உள்ளது. சில சமுதாயங்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், இன்னும் சில சாதிகள் மத்திய தரத்தில் இருக்கும். வேறு சிலர் இன்னும்  தாழ்ந்த நிலையில் இருப்பார்கள்.

மற்றவர்கள் சமுதாயத்தில் மிக, மிக தாழ்ந்த நிலையில் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க நம்மிடம் போதிய சொத்துகள் இல்லை. நம் முன் உள்ள மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் சமுதாய படிநிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும் என்பது தான். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை போக்க வேண்டும் என்றால் அனைத்து சமுதாயங்களும் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டும். கல்வியில் முன்னேற்றம்  பெற வேண்டும் என்றால் அனைத்து சமுதாயங்களிலும் உள்ள அனைவரும் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதல்ல. ஒரு சமுதாயத்தில் அனைவரும் கல்வி பெறாவிட்டாலும் கூட, 10 பாரிஸ்டர்கள் (வழக்கறிஞர்கள்), 20 மருத்துவர்கள், 30 பொறியாளர்கள் உருவானால், அந்த சமுதாயத்தை உயர்ந்த சமுதாயம் என்று நான் கூறுவேன்.

உதாரணமாக சாமர்ஸ் எனப்படும் வட இந்திய தலித் சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சமுதாயம் இப்போது பிற சமுதாயங்களால் வெறுப்புடன் பார்க்கப்படுகிறது. அதுவே அந்த சமுதாயத்தில் சில மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வி பெற்ற மனிதர்கள் உருவானால், அந்த சமுதாயத்தை நீங்கள் அடிமைப்படுத்த முடியாது. இன்றைய நிலையில் சமுதாயப் படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கும், கீழ் நிலையில் இருப்பவர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகமாக  உள்ளது. இந்த இடைவெளியைப் போக்கி அனைத்து சமுதாயங்களையும் ஒரே நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஒரு சமுதாயத்துக்கு கிடைக்கும் மரியாதை அனைத்து சமுதாயங்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு சிறந்த ஆயுதம் இட ஒதுக்கீடு தான்’’ என்று அம்பேத்கர் கூறினார்.

கிரீமிலேயர் கூடாது - தொகுப்பு இட ஒதுக்கீடு வேண்டும்

அதுமட்டுமின்றி, கிரீமிலேயர் முறை வேலைவாய்ப்புக்கு வேண்டுமானால் நடைமுறைப்படுத்தப்படலாம். ஆனால் கல்விக்கு கிரீமிலேயர் முறை கூடாது என்றும் அம்பேத்கர் தமது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அவரது நிலைப்பாடு மிகவும் சரியானது தான். பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேநேரத்தில் கல்வியில் கிரீமிலேயர் முறை நடைமுறைப்படுத்தக் கூடாது.

பிற பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை ஏற்படுத்தி, அதில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதிகளையும்  ஒரே குழுவாக இணைத்து வைத்தால், அதில் ஓரளவு பிற்படுத்தப்பட்டவர்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் போட்டியிட முடியாது. அதனால், இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுவதையும் ஓரளவு பிற்படுத்தப்பட்டவர்களே அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஓரளவு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். கிரீமிலேயர் முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. மாறாக தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஒரே அளவு பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட சாதிகள் அனைத்தையும் ஒரு பிரிவாக பிரித்து, அவர்களுக்கு ஒட்டுமொத்த  ஒதுக்கீட்டில், ஒரு குறிப்பிட்ட அளவு விழுக்காட்டை, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளின் மக்கள்தொகைக்கு ஏற்றவகையில் வழங்க வேண்டும். அது தான் சரியான தீர்வாக இருக்கும். ஒரே  அளவிலான பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட சாதிகள் ஒரே குழுவில் இருக்கும் போது, அவர்களிடையே சம அளவிலான போட்டி நிலவும். அதன் மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நியாயமான  வாய்ப்பு கிடைப்பதை தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறை உறுதி செய்கிறது. மாறாக, அனைத்து சாதிகளையும் ஒரே பிரிவாக வைப்பது, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளால் மற்ற பிரிவினருடன் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதை  தடுக்கிறது.  தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறை பல மாநிலங்களில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்தம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் முறையே, 4%, 15%, 4%, 4%, 5% என மொத்தம் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 28% இட ஒதுக்கீடு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,  முறையே 7%, 10%, 1%, 7%  வீதம் வழங்கப்படுகிறது.
இதனால் அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் முறையான இட ஒதுக்கீடு கிடைக்கிறது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் கிரீமிலேயர்  முறையை கடைபிடிப்பதை விட தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடிப்பது தான் சிறந்தது ஆகும்.

எந்த சாதியும் முன்னேறவில்லை

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதனால், அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை நீங்கியிருக்கும். அதனால், அவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று எதிர்த்தரப்பில் கூறப்படுகிறது. அது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும்.

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு  என்பது 1993&ஆம் ஆண்டில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இந்த காலத்தில் மத்திய அரசுப் பணிகளில் நிரப்பப்பட்ட பணிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 2175 சாதிகளில் எந்த சாதியும் பயனனடைந்திருக்க வாய்ப்பில்லை என்பது மிகவும்  தெளிவாகத் தெரிகிறது. அவ்வாறு இருக்கும் போது, இந்த குறுகிய காலத்தில், பிற்படுத்தப்பட்ட தன்மையிலிருந்து விடுபட்டு, இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறும் அளவுக்கு எந்த சமுதாயமும் முன்னேறியிருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் மொத்தமுள்ள 2175 சாதிகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு சாதிகள் அவ்வாறு முன்னேறியிருக்கக்கூடும். அதை வைத்துக் கொண்டு 2175 சாதிகளும் முன்னேறி விட்டதாகவும், அவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று வாதிடுவது  நியாயமல்ல.

இரட்டைத் தண்டனை கூடாது

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் துல்லியமாக இல்லை  என்பதால் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று மற்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தவரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வந்தார்கள். ஆனால், இந்தியா விடுதலை அடைந்த பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உயர்சாதி ஆட்சியாளர்களால்  திட்டமிட்டு கைவிடப்பட்டது. இந்த முடிவை பிற்படுத்தப்பட்ட மக்களோ, பட்டியலினத்தவரோ, பழங்குடியினரோ எடுக்கவில்லை. உயர்சாதி ஆட்சியாளர்கள் தான் எடுத்தனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை முழுக்க முழுக்க உயர்சாதியினர் தான் அனுபவிக்கின்றனர்; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறைப்பதற்காகத் தான்  இவ்வாறு உயர்சாதி ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். உண்மையில் இதனால் பாதிக்கப்பட்டது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தான். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லை என்று கூறி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை மறுப்பது அவர்களுக்கு அளிக்கப்படும் இரட்டைத் தண்டனையாகி விடும்.

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலை செல்லாத ஒன்றாக மாற்றும் முயற்சியில் மனுதாரர் ஈடுபடுவது முறையல்ல. இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தான் உருவாக்கி நிர்வகிக்கிறது. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இப்போது வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எந்த சமுதாயமும்  பயனடைந்திருக்க வாய்ப்பில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள எந்த சமுதாயமும் பிற்படுத்தப்பட்ட தன்மையை இழந்து முன்னேறிவிடவில்லை. அவ்வாறு இருக்கும் போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்ற வினாவே எழவில்லை.

பரம்பரை தொழில்களை
செய்யாதது முன்னேற்றமா?

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை மறுப்பதற்காக வினோதமான காரணம் ஒன்று மனுதாரர்களால் கூறப்பட்டது. அதாவது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலான சாதிகள் இப்போது அவர்களின் பரம்பரை தொழில்களை செய்வதில்லை என்பதால், அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை நீங்கி விட்டதாகவும், அதனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்றும் மனுதாரர் வாதிட்டார். இது தவறு. ஒரு சாதியினர் அவர்களின் தொழிலை கைவிடுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஒருவர் அவரது சாதி சார்ந்த தொழிலை கைவிடுவதால் மட்டுமே அவர் முன்னேறியவராகிவிட மாட்டார்.

இந்தியாவில் மொத்தம் 6.50 லட்சம் கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் முடி திருத்தும்  தொழிலை மருத்துவர் சமுதாயம் தான் செய்கிறது. பல முடிதிருத்தும் கடைகளுக்கு இடம் கூட இருக்காது. மரத்தடிகளில் நடத்தப்படும் முடிதிருத்தும் நிலையங்கள் தான் அதிகம். அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நகர்ப்பகுதிகளுக்கு சென்றாலும் கூட அங்கும் அவர்கள் முடிதிருத்தும் தொழிலைத் தான் செய்ய வேண்டியுள்ளது. ஒரு சமுதாயம் செய்யும் தொழில் உயர்ந்ததாக இருந்தாலும், தாழ்ந்ததாக இருந்தாலும் அவர்கள் அவர்கள் தொழிலின் பெயரால் தான் அழைக்கப்படுகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பல சாதிகள் இன்று பரம்பரைத் தொழிலை செய்ய முடியாமல் போனதற்கு காரணம் அவர்கள் அல்ல. குறிப்பாக மீனவர்கள் விசைப்படகு மீனவர்களுடன் போட்டியிட்டு  தொழில் செய்ய முடியாததால் அந்தத் தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.

பானை செய்யும் குலாளர்கள் இப்போது அந்த தொழிலை செய்வதில்லை. அதற்குக் காரணம், அதில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. நெசவாளர்களுக்கு நெசவுத் தொழிலில் நல்ல லாபம் கிடைத்து வந்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தில் இருந்து துணிகளை இறக்குமதி செய்ததால் அவர்களின் தொழில் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பல சாதிகள் தங்களின் பரம்பரைத் தொழிலை விட்டு விலகிச் சென்று விட்டனர். இது ஒரு துயரமான சம்பவம். இதை வெற்றியாகவோ, சமூகநிலை  முன்னேற்றமாகவோ கருதி அவர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோருவது நியாயமல்ல.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு

ஒரு சாதி கல்வியில் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறதா? என்பதை அறிய வேண்டுமானால், அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை எவ்வளவு? ஒவ்வொரு சாதியிலும் எழுத்தறிவு பெற்றவர்கள்  எத்தனை விழுக்காடு?, பட்டதாரிகள் எத்தனை விழுக்காடு?, மருத்துவர்கள் எத்தனை விழுக்காடு?,  பொறியாளர்கள் எத்தனை விழுக்காடு?, பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் எத்தனை விழுக்காடு?, அரசு ஊழியர்கள் எத்தனை விழுக்காடு? என்பதைக் கண்டறிந்து, அதை மாநில சராசரியுடன் ஒப்பிட்டு தான் ஒரு சமுதாயம் பின்தங்கிய நிலையில் உள்ளதா? அல்லது முன்னேறியிருக்கிறதா? என்பதை அறிய முடியும். அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், அது மறுக்கப்படுகிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் சாதியம் பெருகிவிடும் என்று கூறுவது அபத்தம். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 60 ஆண்டுகள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், எந்த வகையிலும் சாதியம் வளரவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதிக மக்கள்தொகை கொண்ட சாதிகள் கூடுதல் இட ஒதுக்கீடு கோரக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள் யார் என்று பார்த்தால் இதுவரை இட ஒதுக்கீட்டை மொத்தமாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் அனுபவிப்பதை இழக்க  விரும்பாததால் இவ்வாறு கூறுகின்றனர். அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஒரு போதும் ஏற்கக் கூடாது.

சாதியை மறைத்து விட்டால் சாதி ஒழிந்து விடும் என்று நினைப்பது பெரும் தவறு. சாதியை மறைக்க நினைத்தால், சாதி இன்னும் வேகமாக பரவும். சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பது தான் சிறந்த வழியாகும். சாதிக்கு பதிலாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு  கொண்டு வந்தால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 1963-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில்  அப்படி ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டதால் தான் அனைத்து இட ஒதுக்கீட்டையும் உயர்சாதியினர் கைப்பற்றிக் கொண்டனர். அது பெரும் சமூக அநீதி ஆகும். எனவே, சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கு எதிரான அனைத்து வாதங்களையும் நிராகரித்து விட்டு, மத்திய அரசு வழங்கியுள்ள  பிற பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில்  27% இட ஒதுக்கீடு  வழங்கி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் தான் முக்கியக் காரணமாகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவிலும் சமூகநீதிக்காக போராடும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணமாகும்.

நாளை....
வன்னியர்களின் இன்றைய
சமூக, கல்வி வாழ்வு நிலை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages