தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரித் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் - மருத்துவர் இராமதாசு அய்யா தனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இந்தக் கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10-ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன.
பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும்.
இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இந்த திருவிழா நினைவூட்டுகிறது. அவ்வளவு இறைபக்தி கொண்ட இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு தங்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தைக் கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தடுத்து விட்டது. கொரோனா வைரஸ் துயரம் விரைவில் தீர வேண்டும். இஸ்லாமியர்கள் புனிதக்கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள அனைத்து தடைகளும் விலக வேண்டும்.
பக்ரித் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment