முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 51 - Agnipuratchi

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 51

Share This

முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 51

(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)

50. வன்னியர்களின் இன்றைய
சமூக, கல்வி வாழ்வு நிலை!

சமூகநீதி என்பது மிக நீண்ட பயணம்.... இந்தத் தொடரின் தலைப்பைப் போலவே சமுகநீதி சுக்கோ, மிளகோ அல்ல.... பக்கத்து வீட்டிற்கு சென்று சும்மா வாங்கி வருவதற்கு. உலகில் பல நாடுகள் விடுதலை அடைவதற்காக எத்தகைய போராட்டங்களையெல்லாம் நடத்த வேண்டியிருந்ததோ, எவ்வளவு இழப்புகளை சந்திக்க வெண்டியிருந்ததோ, உழைக்கும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்ற உரிமைப் பெறுவதற்காக எவ்வளவு காலம் போராட வேண்டியிருந்ததோ, என்னென்ன தியாகங்களை செய்ய வேண்டியிருந்ததோ, அதே அளவு போராட்டங்களை நாம் நடத்தியாக வேண்டும்; அதே அளவு இழப்புகளை நாம் எதிர்கொண்டாக வேண்டும்; அதே அளவு தியாகங்களை நான் செய்தாக வேண்டும். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

சமூகநீதிப் போராட்டம்

அந்த வகையில் சமூகநீதிக்கான போராட்டம் என்பதும் விடுதலைப் போராட்டங்களுக்கும், தொழிலாளர் உரிமைப் போராட்டங்களுக்கும் இணையானது தான். ஒரு நாட்டிற்கான விடுதலைப் போராட்டம் என்பது ஒரு தரப்பு மக்களின் நிலப்பகுதியை வலிமையுள்ள இன்னொரு தரப்பினர் ஆக்கிரமித்துக் கொண்டதற்கு எதிராகவும், அதை மீட்பதற்காகவும் நடத்தப்படுவதாகும். தொழிலாளர்களின் போராட்டம் என்பதும் முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கானது ஆகும். அதேபோல், சமூகநீதி எனப்படுவது கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அரிய வளங்களை ஒரு சில குறிப்பிட்டத் தரப்பினர் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகும். அவ்வாறு ஆக்கிரமித்துக் கொண்ட சமுதாயங்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேறி விட்ட நிலையில்,  கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் ஆக்கிரமிக்கப்பட்ட சமுதாயங்கள் முன்னேற முடியாமல் கீழ்நிலையில் வாடுகின்றன. அவர்களை மீட்டெடுத்து மேல்நிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும்  இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு சமூகநீதி என்றே பொருள்.

சமூகநீதி என்பது பல நாடுகளில் பல வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு சாதிகளையும், அவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட இந்தியாவில் சமூகநீதி என்பதன் முதன்மை உள்ளடக்கமாக இருப்பது இட ஒதுக்கீடு தான். அதற்கான போராட்டம் இந்தியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், சற்றேறக்குறைய அரை நூற்றாண்டாக நானும், என்னால் உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளும்  பல சவால்களுக்கு நடுவே, முன்னெடுத்து வருகிறோம்.

இழப்புகள்.... தியாகங்கள்!

நாற்பது ஆண்டுகளுக்கும்  மேலாக மேற்கொண்டு வரும் சமூகநீதிப் போராட்டத்தில் நாம் இழந்தவை  ஏராளம். 21 உயிர்களை பலி கொடுத்தோம்; ஆயிரக்கணக்கானோர் காவல்துறையின் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி காயம் பட்டோம்; உடல் உறுப்புகளை இழந்தோம்; வீடுகளுக்குள் புகுந்து காவல்துறையினர் நடத்திய ஒடுக்குமுறைக்கு நம் குல பெண்களும், குழந்தைகளும் கூட  பாதிக்கப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டோம்; திருநெல்வேலி தவிர தமிழ்நாட்டில் மீதமுள்ள அனைத்து சிறைகளிலும் நான் சிறை வாசம் அனுபவித்தேன். இது தவிர வழக்குகளில் சிக்கி எதிர்காலத்தை இழந்த நமது இளைஞர்கள் ஏராளம்... ஏராளம்!

நமது போராட்டத்தின் பயனாக கிடைத்த சமூகநீதி அனைத்தையும் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு  வேண்டியவர்களுக்கு வாரி இறைத்தனர். நமக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வருவது சமூக அநீதி மட்டும் தான். தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதில் வன்னிய மக்களின் பெரும் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்தின் மக்கள்தொகை இரண்டரை கோடி பேர். அவர்களின் வாக்குகளை வாங்கித் தான் தமிழகத்தில்  எல்லாக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால், ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு ஆட்சியாளர்கள் போட்டதெல்லாம் பட்டை நாமங்கள் தான்.

பரிசளிப்பதெல்லாம் பட்டை நாமமே!

ஒவ்வொரு தேர்தலிலும் வண்டி நிறைய வாக்குறுதிகளுடனும், வாய் நிறைய ஆசை வார்த்தைகளுடனும் வீடு தேடி வருவார்கள். வாக்குறுதிகளையும், ஆசை வார்த்தைகளையும் நம்மிடம் விற்று வாக்குகளை வாங்குவார்கள். நாம் வாக்களித்து, அவர்கள் ஆட்சிக்கு வந்த  பின்னர் வெள்ளை வண்ணத்தையும், சிவப்பு வண்ணத்தையும் வாளிகளில் எடுத்துக் கொண்டு வீடுவீடாக வருவார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து பட்டை நாமம் போட்டு விட்டு செல்வார்கள். இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, 70 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் நம்மை ஆண்ட அனைவரும் நமக்களித்த பரிசு பட்டைநாமம் தான்.

தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் மொத்தம் 12 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் கூட  வன்னியர்கள் இல்லை என்பது தான் மிகவும் வேதனையான உண்மை ஆகும். ஒட்டுமொத்த அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்களில்  வெறும் 8 விழுக்காட்டினர் மட்டும் தான் வன்னியர்கள் ஆவர். சில சமுதாயங்கள் அவற்றின் மக்கள்தொகை விழுக்காட்டை விட 4 மடங்கு அளவுக்கு அரசு வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. சில சமுதாயங்கள் மக்கள்தொகையை விட 3 மடங்கு அளவுக்கும், சில சமூகங்கள் இரு மடங்கு அளவுக்கும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சமுதாயங்கள் அவற்றின் மக்கள்தொகைக்கு இணையான விழுக்காடு அளவுக்கும் அரசு வேலைவாய்ப்ப்புகளைப் பெற்றுள்ளனர். அதாவது, ஒரு சமுதாயம் தமிழக மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு இருப்பதாக வைத்துக் கொண்டால், தமிழகத்தின் வேலைவாய்ப்பில் 4 விழுக்காட்டை அந்த சமுதாயம் கைப்பற்றுகிறது. அதனால் அந்த சமுதாயங்களில் சராசரியாக 3 குடும்பங்களில் ஒருவர் அரசு வேலை பெற்றிருப்பார்.

அரசுப் பணிகளில் வன்னியர்கள் நிலை

ஆனால், வன்னியர்கள் தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் ஆவர். மொத்தம் இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட சமுதாயம். அதாவது 20 விழுக்காட்டுக்கும் கூடுதலான மக்கள்தொகை. ஆனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 8 விழுக்காடு மட்டும் தான். தமிழகத்தின்  வளர்ச்சிக்கு வன்னியர்கள் தான் மிகவும் கடுமையான உழைக்கிறார்கள்; தேர்தல் முடிவுகளை அவர்கள் தான் தீர்மானிக்கின்றனர்; ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவர்கள் தான் உழவு செய்து உணவு படைக்கின்றனர். ஆனால், எதையும் செய்யாத, அரசியல் மற்றும் சமூகத் தளத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத சமுதாயங்களுக்கு அவர்களின் மக்கள் தொகையை விட 4 மடங்குக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. ஆனால், வன்னியர்களுக்கு அவர்கள்  மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை என்றால், நமது நெற்றிகள் பெரிதாக இருக்கின்றன; பெரிதாக நாமம் போடப்படுகிறது என்று தானே பொருள்?

வன்னியர்களே பாருங்கள்... பாருங்கள் இந்த சமூக அநீதியை நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் மட்டுமல்ல....
ஒவ்வொரு நிலை பணியாளர் எண்ணிக்கையிலும் வன்னிய சமுதாயத்திற்கு பிரதிநித்துவம் இல்லை.

*   தமிழ்நாட்டில் 53 அரசுத் துறைகள் உள்ளன. அவற்றுக்கு ஒட்டுமொத்தமாக 40 அரசுத்துறை செயலர் பதவிகள் உள்ளன. அவற்றில் ஒரு இடத்தில் கூட வன்னியர்கள் இல்லை.

*   தமிழக அரசு நிர்வாகத்தில் 1500&க்கும் மேற்பட்டோர் செயலாளர்களாக பணியாற்றி இருப்பார்கள். அவர்களில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 1. வைத்திலிங்கம், 2.இராமலிங்கம், 3.ஆதிமூலம், 4. காசி விஸ்வநாதன், 5.தனவேல், 6. சந்தானம் ஆகிய ஆறு பேர் மட்டும் தான் செயலாளர்களாக  பதவி வகித்துள்ளனர். நமது சமுதாயத்தின் நிலை எந்த அளவில் இருக்கிறது? என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

*   தமிழ்நாட்டில் பல்வேறு நிலைகளில் 150 இயக்குனர் நிலை பணியிடங்கள் உள்ளன. அவற்றில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவு தான்.

*   தமிழ்நாட்டில் குரூப் 1 எனப்படும் முதல் தொகுதி அதிகாரிகளில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம்  வெறும் 2% முதல் 3% மட்டுமே.

*   இரண்டாம் தொகுதி அதிகாரிகளில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம்  வெறும் 6% முதல் 8% மட்டுமே.

* நான்காம் தொகுதி பணியாளர்களில் வன்னியர்களின் விகிதம் 7% முதல் 9% மட்டும் தான்.

* தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 319 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 12 பேர் தான். வன்னியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தானே ஐ.ஏ.எஸ் ஆக முடியும்? என்று எவராவது வாதிடலாம். ஆனால், அவ்வாறு போட்டித் தேர்வுகளில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்றால், அவர்கள், அவர்களை விட கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையில் முன்னேறியவர்களுடன் மோத விடப்படுகிறார்கள் என்று தானே பொருள்? இந்த சமூக அநீதியை ஒழிப்பதற்காகத் தான் மத்திய, மாநில அரசு இட ஒதுக்கீடுகளில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகிறோம்.

* தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 70 விழுக்காட்டினர் நேரடியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 30 விழுக்காட்டினர் பதவி உயர்வு மூலம் வருவார்கள். அவர்களில் 20 விழுக்காட்டினர் துணை ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட   முதல் தொகுதி பணியாளர்களில் இருந்து பதவி உயர்வில் வருவார்கள். மீதமுள்ள 10 விழுக்காடு அதிகாரிகள் பிற துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட ஆட்சியாளர்களின் ஆசி வேண்டும். இந்த முறையில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அதிகாரிகள் ஐ.ஏ.எஸ் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில் முன்னாள்  தொடர்வண்டித்துறை அமைச்சராக பதவி வகித்த அரங்க. வேலு, கோசல்ராம், இப்போது அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரத்னா உள்ளிட்ட 5 பேர் மட்டும் தான் வன்னியர்கள்  ஆவர். வன்னியர்களுக்கு ஆட்சியாளர்கள் எவ்வளவு துரோகம் செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்?

மோசமான பின்னடைவு

1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தான் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால், அனைத்து அரசுத் துறைகளிலும் வன்னியர்கள் 20% வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பார்கள். 17% தனி இட ஒதுக்கீடு கொடுத்திருந்தால் கூட அதே அளவு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், நமக்கு தனி ஒதுக்கீடு வழங்க மறுத்ததால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நமது சொந்தங்களால் குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் கூட பெற முடிவதில்லை. இது வன்னியர்களை இன்னும் மோசமான பின்னடைவுக்கு ஆளாக்குகிறது.

இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் ஆகிய சமுதாயங்கள் சமூகப் படிநிலையில் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தவர்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக சுமார் 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களையும் அறிவீர்கள். அதன் பயனாகவே அவர்களுக்கு 2008&09 ஆம் ஆண்டுகளில் உள் ஒதுக்கீடு கிடைத்தது. அந்த சமுதாயங்களுக்கு உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்ததை பெருமிதமாகவே கருதுகிறேன். அதன்பயனாக  அனைத்து நிலை பணிகளிலும் இஸ்லாமியர்களுக்கு 3.5% இடங்களும், அருந்ததியருக்கு 3% இடங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், குரூப்-1 எனப்படும் முதல் தொகுதி பணிகளில் நம்மால் அந்த அளவு இடங்களைக் கூட கைப்பற்ற முடியவில்லை. இந்தியாவின் பெரும்பான்மை சமுதாயம் என்றாலும் கூட, பிற சமுதாயத்தினருக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவத்தில் பாதியளவு கூட நமக்கு கிடைக்கக் கூடாது என்ற அளவில் தான் ஆட்சியாளர்கள் வன்னியர்களை வைத்திருக்கிறார்கள்.

ஐ.பி.எஸ். பதவிகள்

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் பணியிடங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தவை காவல்துறையை நிர்வகிக்கும் ஐ.பி.எஸ் பணியிடங்கள் ஆகும். அவற்றில் ஐ.ஜி. நிலைக்கு மேல் உள்ள பதவிகளில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை என்பது தான் கசப்பான உண்மையாகும்.

தமிழக காவல்துறையின் சட்டம் & ஒழுங்குப் பிரிவு  டி.ஜி.பி.யாக இதுவரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் தான் பணியாற்றியுள்ளார். ஏ. ராஜ்மோகன் என்ற அவரும் கூட 1996&ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் நியமிக்கப்பட்டார். குறைந்தபட்சம் ஓராண்டாவது பணி செய்ய வசதியாக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும்படி அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன்.  ஆனால், அதை ஏற்க கலைஞர் மறுத்து விட்டார்.

தமிழ்நாடு காவல்துறையில் ஆர்.சேகர், கே.பி. மகேந்திரன் ஆகியோர் டி.ஜி.பி. நிலையிலும், இராமலிங்கம் கூடுதல் டிஜிபி நிலையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். அறிவுச்செல்வன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஐ.ஜி. நிலை வரை பணியாற்று ஓய்வு பெற்றார். தமிழக காவல்துறையில் இதுவரை   மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியாற்றியிருப்பார்கள். ஆனால், அவர்களில் ஐ.ஜி நிலைக்கும் கூடுதலாக உயர்ந்த வன்னிய சமுதாய அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும் 5 பேர் மட்டும் தான்.

புறக்கணிக்கப்பட்ட வன்னியர் அதிகாரிகள்

அவர்களிலும் கூட ஆர்.சேகர் ஐ.பி.எஸ் 2014-ஆம் ஆண்டில் டிஜிபியாக நியமிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. அப்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு அனூப் ஜெய்ஸ்வால், ஆர்.சேகர், அசோக்குமார் ஆகிய மூவரின் பெயர்கள் தான் பரிசீலிக்கப்பட்டன. அவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த சேகருக்குத் தான் அந்த பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரை விட ஓராண்டு அனுபவம் குறைந்த அசோக்குமாருக்கு தான் டி.ஜி.பி பதவி வழங்கப்பட்டது. அதற்கு காரணம் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த சேகர் பதவிக்கு வந்து விடக்கூடாது என்று அப்போதிருந்த ஆட்சியாளர்களும், அவர்களுக்கு நெருக்கமாக இருந்து அதிகாரத்தை நடத்தியவர்களும் நினைத்தது தான்.

அதேபோல், 2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறைக்கு புதிய டிஜிபி நியமிக்கப்பட இருந்தார். அந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர் கே.பி.மகேந்திரன் ஆவார். அப்போது தமிழ்நாட்டில் பணியில் இருந்த அதிகாரிகளில் அவர் தான் மூத்தவர். அதிக அனுபவம் பெற்றவர். மிகவும் நேர்மையானவர். யாருக்கும் அடிபணியாதவர். அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் பணிக்காலம்  இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள் அவரை நியமிக்க மறுத்து விட்டனர். மாறாக, 2017-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற இருந்த டி.கே.இராஜேந்திரன் என்ற அதிகாரியை அவர் ஓய்வு பெறுவதற்கு அரை மணி நேரம் முன்பாக நள்ளிரவில் நியமித்தனர். காரணம் ..... வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறை தலைமை இயக்குனராக வந்து விடக் கூடாது என்பது தான்.

பாட்டாளிகளே.... பாருங்கள், தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றுவதற்கு உழைப்பையும், வியர்வையையும் தந்தவர்கள் நாம். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் அனைவரும் பசியாற நிலத்தில் உழைத்து  உணவு படைப்பவர்கள் நாம். ஆனால், நாம் எந்த அளவுக்கு திட்டமிட்டு பின்னுக்கு தள்ளப் படுகிறோம் பாருங்கள்.

பறிக்கப்படும் மருத்துவக் கல்வி

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது வரை வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களால் மருத்துவப் படிப்புகளிலோ அல்லது பொறியியல் படிப்புகளிலோ நுழைய முடியவில்லை. வன்னியர் சமுதாயத்திலிருந்து ஆண்டுக்கு 2 முதல் 4 பேர் மருத்துவப் படிப்பில் சேருவதே அதிசயமாக இருந்தது. அதனால் தான் தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை நீக்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தியது. அதன்பயனாக 2007-08 ஆம் கல்வியாண்டு முதல் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கான தமிழக சட்டத்தில் 2007&ஆம் ஆண்டில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தவர் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தான் வன்னியர் சமுதாயத்திலிருந்து ஆண்டுக்கு 150 முதல் 200 மருத்துவர்கள் உருவானார்கள். வன்னியர்களின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது அதுவே மிகவும் குறைவு ஆகும். ஆனால், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வன்னியர் சமுதாய மாணவர்களால் மற்ற மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை. மருத்துவப் படிப்பில்   சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக , பல லட்சம் கட்டணம் செலுத்தி, இரு ஆண்டுகளுக்குதனிப்பயிற்சி பெரும் நிலையில் வன்னியர் சமூக மாணவர்கள் இல்லை. அதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் சேரும் வன்னியர் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 2007-08 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு சென்று விடும்.

இதுவே வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு இருந்தால், தமிழக அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 4000 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவற்றில் 800 இடங்கள் நமக்குக் கிடைக்கும். அது நமது மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் வழியாக சமூக முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவும். அதனால் தான் வன்னியர்களுக்கு தனி இட  ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராடி வருகிறோம். ஆனால், நாம் முன்னேறி விடக்கூடாது என்பதற்காகவே  தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும்  நமக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மறுக்கின்றன.

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அரசியல் சாசனப்படியான  அமைப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகும். அந்த வகையில் சமூகநீதியை பாதுகாப்பதில் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் இந்த அமைப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. டி.என்.பி.எஸ்.சியில் மொத்தம் 15 உறுப்பினர்களும், ஒரு தலைவரும் இருப்பார்கள். ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இந்த அவலநிலையை தமிழக முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினேன். முதலமைச்சரும் இந்தக் குறையை போக்குவதாக உறுதியளித்தார். அதையேற்று நானும் 27.11.2019 அன்று தமிழக முதலமைச்சருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். இந்த பிரச்சினையில் முதலமைச்சர் நீதி வழங்குவார் என்று காத்திருந்தோம்; ஆனால், இன்று வரை டி.என்.பி.எஸ்.சியில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து இது வரை மொத்தம் 60 பேர் அதன் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் 18 பேர் ஆங்கிலேயர்கள். மீதமுள்ள 42 பேர் இந்தியர்கள். அவர்களில் அம்பாசங்கர், காசி விஸ்வநாதன் ஆகிய இருவர் மட்டும் தான் வன்னியர்கள் ஆவர். இந்த இருவரிலும் கூட காசி விஸ்வநாதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று 2006-ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு நான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் பயனாகவே அந்த நியமனமாவது நடைபெற்றது. இல்லாவிட்டால் அந்த வாய்ப்பு கூட வன்னியர்களுக்கு கிடைத்திருக்காது.

துணைவேந்தர்கள்

தமிழ்நாட்டில் ஆளுனரை வேந்தராகக் கொண்டு மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள், முதலமைச்சரை  வேந்தராகக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் என மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், அந்த 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை. துணைவேந்தர்கள் நியமனத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று நாம் கூறினால், உடனடியாக சில அறிவுஜீவிகளிடமிருந்து துணைவேந்தர் நியமனத்தில் தகுதி தானே முக்கியம்... ஜாதி பார்க்கலாமா? என்று வினா வரும். அதையே தான் நானும் கூறுகிறேன். தகுதி அடிப்படையில் மட்டும் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டால், தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு வன்னியர்கள் தான் துணை வேந்தர்களாக இருப்பர். வன்னியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது என்று திட்டமிட்டு சதி செய்யப்படுவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் நிர்வாகம் 1950-ஆம் ஆண்டில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விடட்து. ஆனால், இந்தியா விடுதலை அடைந்து 52 ஆண்டுகள் ஆன பிறகு 1999-ஆம் ஆண்டில் தான் சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முனைவர் பொற்கோ நியமிக்கப்படுகிறார். அதுவும் கூட அந்த நியமனம் தானாக நடந்துவிடவில்லை. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று கலைஞரிடம் பலமுறை அழுத்தம் கொடுத்த பிறகு தான் பொற்கோ துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் சென்னை மாகாணத்தில் 1921-ஆம் ஆண்டிலிருந்தே சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீட்டுமுறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனாலும் கூட சென்னை பல்கலைக்கழகத்தில் 2000-ஆவது ஆண்டு வரை மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு முறை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. சென்னை பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்ய வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன்.  அதன்பின்  முனைவர் பொற்கோ துணை வேந்தராக வந்த பிறகு 2002-ஆம் ஆண்டில் தான்,  163 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் முனைவர் பொற்கோவுக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக டி.விஸ்வநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக தங்கராஜ், கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேச பூபதி, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் என ஒட்டுமொத்தமாக  5 பேர் மட்டும் தான் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.விஸ்வநாதன் 17.07.2012-இல் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 7 ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் எந்தப் பலகலைக்கழகத்திலும் வன்னியர்கள் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை.

அண்ணாமலை  பல்கலைக்கழகம்

அரசு பல்கலைக்கழகங்களின் நிலை இப்படியாக இருக்க, அப்போது அரசு உதவி பெறும் பல்கலைக் கழகமாக விளங்கிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலாவது வன்னியர் ஒருவரை துணை வேந்தராக நியமிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். அதற்காக எம்.ஏ.எம். இராமசாமி செட்டியாரை  பலமுறை நேரில் சந்தித்துப் பேசினேன். ‘‘ அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைவதற்கு தேவையான நிலங்களைக் கொடுத்தவர்கள் வன்னியர்கள் தான். அதற்காகவாவது வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளரை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டேன். எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் எப்போதும் என்னிடம் மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார். எனது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், கடைசி வரையில் அந்த வாக்குறுதியை எம்.ஏ.எம். ராமசாமி  நிறைவேற்றவில்லை.

ஆளுனர் நியமனத்தில் ஏமாற்றிய கலைஞர்

1999&ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, திமுக ஆகிய இரு கட்சிகளுமே அங்கம் வகித்தன. அந்த ஆண்டு அக்டோபர் மாதம்  வாஜ்பாய் அரசு பொறுப்பேற்றது. புதிய அரசு பதவியேற்றவுடன் மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்களை  நியமிக்கும்பணி தொடங்கியது. தமிழகத்திலிருந்து ஒருவரை ஆளுனராக நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அதற்கான பெயரை பரிந்துரைக்கும் பணி தமிழக முதலமைச்சர் கலைஞரிடம் ஒப்படைக்கப் பட்டது.  அப்போது அவரை பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மூலம் தொடர்பு கொண்ட நான், ஆளுனர் பதவிக்கு தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்திலிருந்து ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் அதை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

நாங்களும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படவிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், ஆளுனர் நியமமனம் குறித்த அறிவிப்பு அதிர்ச்சியளித்தது. ஆம்.... நாங்கள் பரிந்துரைத்தவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக கலைஞரின் உறவினரும்,  தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றியவருமான எம்.எம். இராஜேந்திரன் ஒரிசா மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார். கலைஞர் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியை அழைத்து, அது குறித்து கலைஞரிடம் விசாரிக்கும்படி கூறினேன். அதன்படி அவரும் கலைஞரிடம் விசாரித்துள்ளார். அதற்கு,‘‘ ஜி.கே.மணி.... கவலை வேண்டாம்... நமது ஆளைத் தான் ஆளுனராக நியமித்துள்ளார்கள்’’ என்று கலைஞர் கூறினார். அதைக் கேட்ட ஜி.கே,மணி,‘‘ அண்ணே.... எங்கள் ஆளை நியமிக்கவில்லை. உங்கள் ஆளைத் தான் நியமித்துள்ளார்கள். ஆளுனர் பதவியை எங்களுக்கு வாங்கித்தருவதாக கூறி விட்டு உங்கள் உறவினருக்கு வாங்கிக் கொடுத்து விட்டீர்களே?’’ என்று கேட்டுள்ளார். அதைக் கேட்ட கலைஞர், ‘‘ மணி நம்ம ஆளுக்குத் தான் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். எம்.எம். ராஜேந்திரன் ஒரு எம்.பி.சி. தான். நம்ம ஆளு தான்’’ என்று கூறி நக்கலாக சிரித்திருக்கிறார். எம்.பி.சி என்ற போர்வையில் வன்னியர்களுக்கு சேர வேண்டியதையெல்லாம் பறித்துக் கொள்ளும் வழக்கம் அப்போதே  தொடங்கி விட்டது.

நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்திலும் வன்னியர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் 1862&ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன்பின்  கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக  வன்னியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது 1983&ஆம் ஆண்டில் தான். மூத்த வழக்கறிஞராக இருந்த கே.எம்.நடராஜன் தான் வன்னியர் சமுதாயத்தில்  இருந்து உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி ஆவார். அந்த நியமனமும் எளிதாக நடந்து விடவில்லை. எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் உள்ளிட்ட சமுதாயத் தலைவர்கள்  அப்போதைய முதலமைச்சரை எம்.ஜி.ஆரை சந்தித்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் பயனாகவே  கே.எம்.நடராஜன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு கடந்த 37 ஆண்டுகளில் திண்டிவனம் கே.வீரராகவன், ஏ.குலசேகரன், என்.கிருபாகரன். பி.டி.ஆதிகேசவலு, ஜி.கே.இளந்திரையன் ஆகிய 5 பேர் மட்டுமே வன்னியர் சமுதாயத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் தவிர, எம்.எஸ்.ஜனார்த்தனம், பி.தங்கவேல், எம். தணிகாச்சலம், ஜே.ஏ.கே.சம்பத் குமார், பொன். கலையரசன், ஆர்.எம்.டி. டீக்காராமன், பி.இராஜ மாணிக்கம் ஆகியோர் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து பதவி உயர்வின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.

சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டது முதல் இப்போது வரை அதில் 500-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் 13 பேர் மட்டும் தான் வன்னியர்கள்:  என்பதிலிருந்தே நாம் எந்த அளவுக்கு ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல... சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் நியமிக்கப்பட்ட சில நீதிபதிகளைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே, ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதில் தான் நியமிக்கப்பட்டனர். அதனால் வன்னியர் நீதிபதிகளில் ஒருவர் கூட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இன்று வரை உயர முடியவில்லை. இதுவும் வன்னியர்களுக்கான சமூக அநீதி தான்.
சட்டப்பூர்வ அமைப்புகள்
தமிழ்நாட்டில் தகவல் உரிமை ஆணையம், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மகளிர் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட ஏராளமான சட்டப்பூர்வ ( Statutory bodies) அமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், அவற்றில் வன்னியர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

சமூகநீதியின் அடிப்படையே பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களை கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான். தமிழ்நாட்டில் வன்னியர்கள் தான் மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் எனும் நிலையில், அவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த எந்த அரசுக்கும் விருப்பம் இல்லை. வன்னியர்கள் வாக்களிக்கும் மக்களாகவே இருக்க வேண்டும்; அவர்கள் முன்னேறி விட்டால் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்ததால் தான் அன்று முதல் இன்று வரை நம்மை ஒடுக்கியே வைத்திருக்கிறார்கள். நம்மை அடக்கியாள வேண்டும்; நாம் கடைசி வரை மற்றவர்களுக்கு அடங்கியே கிடக்க வேண்டும் என்று ஆள்வோர் நினைப்பது தான் நமக்கு உரிமைகள் மறுக்கப்படுவதற்கு காரணமாகும்.

உண்மையில் தமிழ்நாட்டில் நமது மக்கள்தொகை அளவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நமக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்களும் வெளியில் தெரிந்தால் வன்னியட் சமுதாய மக்களிடம் பெரும் புரட்சி வெடிக்கும். அதனால் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த எந்த அரசும் முன்வர மறுக்கிறது.

மறுக்கப்படும் புள்ளிவிவரங்கள்

தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட 107 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 31 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆனால், இன்று வரை அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சமுதாயமும் இட ஒதுக்கீட்டால் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளன என்பது குறித்த புள்ளிவிவரங்கள் எதுவும் இதுவரை சேகரிக்கப்படவில்லை. அரசு வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு நிலையிலும் வன்னியர்கள் எந்த அளவு பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி இத்தகைய தகவல்களைக் கோரினாலும் கூட அதை அரசு தருவதில்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மிகவும் சிறப்பாக செயல்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்றால், அது சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தான். அந்த ஆணையம் அரசுக்கு அளித்த பரிந்துரைகளில்,‘‘அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு சமுதாயமும் பெற்ற இடங்கள் எவ்வளவு என்பது குறித்த விபரங்களை 1971&ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அரசுத் துறையிடமிருந்தும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பெற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது சில குறிப்பிட்ட சமுதாயங்கள் அவர்களின் மக்கள்தொகையை விட கூடுதலாக இட ஒதுக்கீட்டின் பயன்களை அடைந்துள்ளார்களா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது ஆதிக்க சாதிகள் வளருவதற்கு தான் வழி வகுக்கும்’’ என்று கூறப் பட்டிருந்தது. அதை தமிழக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் உண்மையான சமூகநீதி மலர்ந்திருக்கும். ஆனால், அவ்வாறு உண்மையான சமூகநீதி மலர்ந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஆட்சியாளர்கள் அதை செய்ய மறுத்து வருகின்றனர்.
20% தனி ஒதுக்கீடே தீர்வு
இன்றைய சூழலில் மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர் சமுதாயம் அதன் சமூகநீதி உரிமைகளை வென்றெடுக்க ஒரே வழி 20% தனி இடஒதுக்கீட்டை பெறுவது தான். அப்போது தான், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும்  நமக்குரிய பங்கை மற்ற சமுதாயங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க முடியும்; கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில்  உள்ள நமது மக்களை முன்னேற்ற முடியும். அதனால் தான் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

இந்தக் கோரிக்கையை நாம் நேற்றோ, இன்றோ எழுப்பவில்லை. வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். நமக்குத் தேவை தனி இட ஒதுக்கீடு தான்; உள் ஒதுக்கீடு அல்ல. உள் ஒதுக்கீடு கோர நாம் புதிதாக இட ஒதுக்கீடு கோரும் சாதி அல்ல. பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். 40 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். வன்னியர் சமுதாயத்தின் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் இன்னும் கூடுதலான இட ஒதுக்கீட்டைக் கூட கோர முடியும்.  40 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் நாம் 20% இட ஒதுக்கீடு கோரினோம். இப்போது நமது மக்கள் தொகை விழுக்காடு இன்னும் கூடுதலாக இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால்  அது தெளிவாகத் தெரியும். ஆனாலும் நாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோரிய அதே 20% தனி இட ஒதுக்கீட்டையாவது வன்னியர்களுக்கு வென்றெடுக்க வேண்டும். அப்போது தான் கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் நமக்கு உரிய உரிமைகளை வென்றெடுக்க முடியும்; முன்னேற முடியும்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடமும் வலியுறுத்தி உள்ளோம். அவரும் நம்மை அழைத்துப் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், இடையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அது குறித்த பேச்சுகள் நடைபெறவில்லை. விரைவில் அரசு அழைத்து பேசும்  என்று நம்புகிறோம். இல்லாவிட்டால், நமது தனி இட ஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்க கடந்த காலங்களில்  எவ்வளவு கடுமையான போராட்டங்களை வன்னியர் சங்கம் நடத்தியதோ, அதை விட கடுமையான  போராட்டங்களை ஒட்டுமொத்த வன்னியர் மக்களையும் திரட்டி நடத்துவோம்.

நாளை....
வன்னியர்களே.... சிந்திப்பீர்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages