முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 52 இதோடு தொடர் முடிவுக்கு வந்தது.
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
51. வன்னியர்களே சிந்திப்பீர்!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார் இயேசுபிரான்.
நமது செயல்பாடுகளும் கிட்டத்தட்ட அப்படியே தான் இருக்கின்றன.
நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சமூகநீதியும் மற்றவர்கள் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதைக் கண்டு நாம் கொதித்தெழுந்து உரிமைகளை மீட்க தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் வழியாக நமது மற்ற உரிமைகளை மீட்க நாம் கைக்கோர்த்திருக்க வேண்டும்.
ஆனால், நாம் இரண்டையும் செய்யவில்லை.
மாறாக, நாம் எளிதாக அடைவதற்குரிய மற்ற உரிமைகளையும், மிக எளிதாக தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், நாம் இன்னும் குடிசைகளில் சுருண்டு கொண்டு, குடல் சுருங்கிக் கிடப்பதற்கு காரணம் நம்மிடையே போதிய ஒற்றுமையும், விழிப்புணர்வும் இல்லாதது தான்.
வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில், ஓடும் போது தவறி விழுவது இயல்பானது தான். ஆனால், ஒருமுறை விழுந்த பின்னர் உடனடியாக எழுந்து மீண்டும் ஓடத் தொடங்கப் போகிறோமா.... அல்லது வீழ்ந்தே கிடக்கப் போகிறோமா? என்பது தான் நம்முன் உள்ள மில்லியன் டாலர் வினா.
நாம் ஆண்ட பரம்பரை என்பதில் ஐயமில்லை....
கால் வயிற்றுக் கஞ்சிக்காக....
ஆனால், இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?
கழனிகளிலும், களத்து மேட்டிலும் பணி செய்து கால் வயிற்று கஞ்சிக்கு வழி தேடும் நிலையில் தானே இருக்கிறோம்?
தமிழ்நாட்டிலேயே குடிசைகள் நிறைந்த மாவட்டம் என்றால் அது ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் தான். விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தான் குடிசைகள் மிகவும் அதிகம். இவை அனத்துமே வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள குடிசைகளில் 30 விழுக்காடு மட்டும் தான் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ளன. மீதமுள்ள 70% குடிசைகள் வட மாவட்டங்களில் தான் உள்ளன.
தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் குடிசைகளில் வாழும் சமுதாயம் என்றால் அது வன்னியர் சமுதாயம் தான். தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இப்போது குடிசை மாற்று வாரியம் மட்டுமல்ல.... மாநில அரசின் பசுமை வீடுகள் திட்டம், மத்திய அரசின் பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் ஆகியவை இருந்தாலும் கூட, அத்திட்டங்களில் பயனாளிகளாக வன்னியர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதில்லை. இதிலும் கூட வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவது இயல்பாக நடக்கும் விஷயமல்ல. மாறாக திட்டமிட்டு நடக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் அரசு, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகின்றனர். கிட்டத்தட்ட அதே அளவிலான வன்னியர்கள் அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவார்கள். மீதமுள்ள, பணி செய்யும் தகுதியுடைய வயதுப் பிரிவினரில் பெரும்பான்மையானோர் களை எடுத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல், போன்ற வேளாண்மை சார்ந்த பணிகளையும், கல் உடைத்தல், கட்டிட சித்தாள், கொத்தனார் போன்ற கட்டுமானப் பணிகளையும், வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் வேலைகளையும், தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்பனை செய்யும் வேலைகளையும் தான் நம்மவர்கள் செய்ய வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி வன்னியர்களுக்கு இப்போது நகர்ப்புறங்களில் இப்போது புதிய வேலை வழங்கப்படுகிறது. ஆம்... அந்த வேலையின் பெயர் பாதுகாவலர்(செக்யூரிட்டி).
மதுவுக்கு அடிமை
இவற்றைத் தவிர வேறு எந்த பணிகளும் வன்னியர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் நமது ஆட்சியாளர்களும், ஆதிக்க வர்க்கத்தினரும் தெளிவாக உள்ளனர். ஆனால், இவற்றை புரிந்து கொள்ளக்கூட முடியாமலும், புரிந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றால், அதை உணர முடியாமல் தடுமாறும் அளவுக்கு தான் தமிழக ஆட்சியாளர்கள் நமது மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டுமா.......... வேண்டாமா?
நாம் இன்னும் ஓட்டுப்போடும் சாதியாகவே இருக்கப் போகிறோமா?
களத்து மேட்டிலும், கழனியிலும் கூலி வேலை செய்தே பிழைக்கப் போகிறோமா?
நமக்கு கிடைத்த செக்யூரிட்டி வேலைக்கான நாற்காலியையே சிம்மாசனமாக நினைத்து நிறைவடையப் போகிறோமா?
பத்துப் பாத்திரம் தேய்த்தே பிறவிப்பயனை அடையப் போகிறோமா?
அரசாங்கம் கொடுக்கும் நான்கு ஆடுகளை மேய்த்து, நாட்டை ஆளும் மகிழ்ச்சியில் மயங்கப் போகிறோமா?
என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இனியும் மது மயக்கத்திலும், போலிப்பரப்புரைகள் மீதான நம்பிக்கையிலும் உறங்கிக் கொண்டிருந்தால், பின்னர் நம்மைக் காப்பாற்ற யாராலும் முடியாது?
கல்வியில் எங்கே இருக்கிறோம்?
செங்கல்வராய நாயக்கர், கந்தசாமி கண்டர், கோவிந்தப்ப நாயக்கர் என கல்விக்காக அறக்கட்டளைகள் அமைத்து ஏழைகளும் படிப்பதற்கு ஏற்பாடு செய்தவர்கள் நமது முன்னோர்கள். ஆனால், கல்வியில் நாம் எங்கு இருக்கிறோம்?
கடந்த 25 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வாக இருந்தாலும் சரி... 12&ஆம் வகுப்பு பொதுத் தேர்வாக இருந்தாலும் சரி தேர்ச்சி விகிதங்களில் கடைசி 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் `வன்னியர் அதிகம் வாழும் வடக்கு மாவட்டங்கள் தான். வன்னியர்கள் கல்வியில் முன்னேறிவிடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் அந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறார்கள்.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, அரியலூர் ஆகிய வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அரசு பள்ளிகளில் கூட, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. இந்த பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களின் சொந்த மாவட்டங்களான தென் மாவட்டங்களுக்கு இடமாற்றம் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். தென் மாவட்டப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஓர் ஆசிரியர் கூட இருப்பதில்லை. இத்தகைய சூழலில் அவர்களால் எவ்வாறு படிக்க முடியும்? எவ்வாறு தேர்ச்சி பெற முடியும்?
இப்படியாகத் தான் வன்னியர் மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.
கலைத்துறையில்....
இந்த அநீதிகளுக்கு முடிவு கட்டுவதற்காக ஆயிரமாயிரம் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. ஆனாலும், இன்று வரை எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அத்தகையத் திட்டத்தை செயல்படுத்தினால் வன்னியர்கள் கல்வி பெற்று விடுவார்கள் என்பதாலேயே அதை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்விக்கு வரும் மாணவர்கள் கூட கலை/ அறிவியல் பட்டப்படிப்பு, பொறியியல் ஒரு சிலர் மட்டும் மருத்துவம் ஆகியவற்றைக் கடந்து செல்ல முடியவில்லை. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேருவது குறித்து நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
கல்வியின் ஓர் அங்கமாக திகழும் கலையில் கூட நம்மால் அடுத்தக்கட்டத்தை கடந்து செல்ல முடியவில்லை. வன்னியர்களைப் பொருத்தவரை கலை என்பது தெருக்கூத்துடன் முடிந்து விட்டதோ என்று கவலைப்படும் அளவுக்கு, திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் நம்மால் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் கால்பதிக்க முடியவில்லை.
கலை மற்றும் கல்வியிலும் கூட நம்மை இப்போது இருக்கும் இடத்திலிருந்து வீழ்த்துவதற்கு சதிகள் நடக்கின்றன. நாம் விழித்துக் கொள்ளப் போகிறோமா அல்லது வீழ்ச்சியடையப் போகிறோமா? என்பது நமது கைகளில் தான் உள்ளது.
பொருளாதாரம்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் பொருளாதாரம் ஆகும். ஒரு சமுதாயத்தில் குறைந்தபட்சம் 10 அல்லது 20 தொழிலதிபர்கள் இருந்தால் அந்த சமுதாயம் எளிதாக முன்னேறி விடும். தமிழ்நாட்டில் பல சமுதாயங்கள் பொருளாதாரரீதியாக முன்னேறியிருப்பதற்கு முக்கிய காரணம் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் தான்.
ஆனால், தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்கள் 100 பேர் அல்ல... 1000 பேரை பட்டியல் போட்டாலும் அதில் ஒருவர் கூட வன்னியராக இருக்க மாட்டார்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் நடத்தும் 100 பேரை பட்டியலிடுங்கள்....
தமிழ்நாட்டில் மருத்துவமனை நடத்தும் 100 பேரை பட்டியலிடுங்கள்....
தமிழ்நாட்டில் வணிகவளாகங்கள் நடத்தும் 100 பேரை பட்டியலிடுங்கள்....
திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் 100 பேரை பட்டியலிடுங்கள்...
பேருந்து நிறுவனம் நடத்தும் 100 பேரை பட்டியலிடுங்கள்....
ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் 100 தொழிலதிபர்களை பட்டியலிங்கள்.....
சென்னையில் குறைந்தது 100 தொழிலாளர்களுடன் இயங்கும் வணிக நிறுவனங்களை நடத்துபவர்களை பட்டியலிடுங்கள்.....
இந்தப் பட்டியலில் ஒன்றில் கூட வன்னியர்கள் இருக்க மாட்டார்கள். இத்தகைய சூழலில் வன்னியர்களுக்கு எங்கிருந்து வேலை கிடைக்கும்? வன்னியர்களால் எவ்வாறு தொழில் கற்றுக் கொண்டு முன்னேற முடியும்?
தனிநபர் வருமானம்
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் வன்னியர்கள் எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறார்கள் தெரியுமா?
சென்னையில் தனிநபர் ஆண்டு வருமானம், இன்றைய அமெரிக்க டாலர் மதிப்பின்படி, ரூ.4,12,275
மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ. 2,46,900
வடக்கு மாவட்டங்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ. 2,14,650
வன்னியர்கள் அதிகம் வாழும் விழுப்புரம் மாவட்டத்தின் தனிநபர் வருமானம் ரூ.1,35,075
தமிழ்நாட்டிலேயே வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் தான் தனிநபர் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தின் சராசரி தனிநபர் வருமானம், பிற மாவட்டங்களின் சராசரி வருமானத்தில் பாதியளவுக்கும், சென்னையின் சராசரி தனிநபர் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவும் தான் உள்ளது.
இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். நமது சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. ஆனால், இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்; முன்னேற வேண்டும் என்ற துடிப்பு நம்மிடையே இல்லை. நமது சமுதாயம் முன்னேறி விடக் கூடாது என்பதற்காக மதுவையும், திரைப்பட போதையையும், இலவசங்களையும் அளவுக்கு அதிகமாக புகட்டி சிந்திக்க முடியாத அளவுக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள் நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும். இந்த உண்மையை புரிந்து கொண்டு நமது வளர்ச்சிக்காக போராட முன்வராத வரை நமக்கான வளர்ச்சி என்பது எளிதில் கைகூடாது.
அரசியல் வளர்ச்சி
ஒரு சமுதாயம் மற்ற உரிமைகளையும், விழிப்புணர்வையும் கூட விட்டுக் கொடுத்து விடலாம். ஆனால், அரசியல் உரிமைகளையும், விழிப்புணர்வையும் கைவிட்டால் அந்த சமுதாயத்தால் முன்னேற முடியாது. நமது சமுதாயம் இன்று வரை முன்னேற முடியாமல் போனதற்கு அது தான் மிக முக்கியமான காரணம் ஆகும்.
எந்த ஒரு நிலப்பகுதியையும் பெரும்பான்மையினர் தான் ஆள வேண்டும். பெரும்பான்மையினர் ஆட்சி செய்தால் தான் மக்கள்தொகை அளவில் சிறுபான்மையினராக இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். என்னைப் பொருத்தவரை மனிதர்களில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று எதுவும் கிடையாது. அனைவரும் ஒருபான்மை என்பது தான் எப்போதும் எனது நிலைப்பாடு ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதுமே ஒவ்வொரு பகுதியையுமே, அங்கு அதிக எண்ணிக்கையில் வாழும் மக்கள் தான் ஆட்சி செய்கிறார்கள் என்பதைக் சுட்டிக்காட்டுவதற்காகத் தான் அப்படி குறிப்பிட்டேன்.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களால் ஆட்சிக் கட்டிலின் அருகில் கூட செல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் 1921&ஆம் ஆண்டில் தான் சட்டப்பேரவை உருவாக்கப் பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தது. அன்று முதல் இன்று வரையிலான 100 ஆண்டுகளில் யாரெல்லாம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
1 ஏ. சுப்பராயலு ரெட்டியார்
2 பனகல் ராஜா
3 பி. சுப்பராயன்
4 பி. முனுசுவாமி நாயுடு
5 ராமகிருஷ்ண ரங்காராவ்
6 பி. டி. இராஜன்
7 கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு
9 சி. இராஜகோபாலாச்சாரி
10 த. பிரகாசம்
11 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
12 பி.எஸ் குமாரசுவாமி ராஜா
13 கே. காமராஜ்
14. எம். பக்தவத்சலம்
15. சி. என். அண்ணாத்துரை
` 16. மு. கருணாநிதி
17. எம். ஜி. இராமச்சந்திரன்
18 ஜெ. ஜெயலலிதா
19. ஓ.பன்னீர்செல்வம்
20. எடப்பாடி கே. பழனிச்சாமி
இவர்களில் ஒரே ஒரு வன்னியராவது இருக்கிறார்களா?
குறைந்தபட்சம் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் குறைந்தது 10 நாட்களுக்கு பொறுப்பு முதலமைச்சராகவாவது இருக்க முடியுமா? அவ்வளவு ஏன்.... வன்னியர்களை ஒரு நாள் முதல்வராக இருப்பதற்காவது தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகள் அனுமதிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது.
தமிழ்நாட்டில் குறைந்தது 120 தொகுதிகளில் வன்னியர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது இரண்டரை கோடி பேர் வன்னியர்கள் ஆவர். அவர்களில் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவர். வன்னியர்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்று நினைத்திருந்தால், 2 கோடி வன்னிய வாக்காளர்களை ஒருமுகப்படுத்தி, யாருடைய உதவியும் இல்லாமல் மிகவும் எளிதாக 120&க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து இருக்க முடியும். அவ்வாறு ஆட்சியைப் பிடித்திருந்தால் கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நாம் முன்னேறியிருக்க முடியும். ஆனால், இந்த எளிய எதார்த்தம் கைகூடாது ஏன்?
நான்கு காளைகளும், ஒரு சிங்கமும் கதை தான்....
ஒரு காட்டுக்கு அருகில் உள்ள புல்வெளியை ஒட்டிய பகுதியில் நான்கு காளைகள் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அவை ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கின. ஒரு நாள் அருகில் உள்ள காட்டிலிருந்து வந்த ஒரு சிங்கம் காளைகளை அடித்துக் கொன்று தின்ன முயன்றது. ஆனால், ஒற்றுமையுடன் இருந்த 4 காளைகளும் சிங்கத்தை கொம்புகளால் முட்டி காட்டுக்குள் விரட்டியடித்தன. அதனால் காளைகளை கண்டு சிங்கம் அஞ்சியது.
அடுத்த சில நாட்களில் சிங்கம் செய்த சதியால் காளைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்தன. அதைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கம், எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஒவ்வொரு காளையாக அடித்துக் கொன்று தின்றது. ஒற்றுமையுடன் இருந்த போது வலிமையாக இருந்த காளைகள், ஒற்றுமையை இழந்த பின்னர் உயிரை இழந்து விட்டன.
அரசியலில் நமது நிலையும் அப்படித் தான் இருக்கிறது....
நாம் அரசியலில் வலிமை பெற்று அதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே நம்மை தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் பிரித்து வைக்கின்றன. நாமும் அந்தக் கட்சிகளின் சதியாட்டத்திற்கு இலக்காகி பிரிந்து கிடக்கிறோம்; அதனால் ஆளும் உரிமை இழந்து கிடக்கிறோம். இப்போது கூட பாருங்கள், நரி ஆட்டுக்கு உணவு தருவதாக அழைத்துச் சென்று, ஆட்டை அதற்கு உணவாக்கிக் கொள்வதைப் போல, ஒரு தேசிய கட்சியின் போலியான பிரச்சாரத்தையும், ஆசை வார்த்தைகளையும் நம்பி, அது விரிக்கும் வலையில் நமது சொந்தங்கள் சிக்கி மாட்டிக் கொள்கின்றனர்.
நமது அண்டை மாநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கர்நாடகத்தில் ஒக்கலிகா சமுதாயத்தினர் 9 மாவட்டங்களில் மட்டும் தான் வாழ்கின்றனர். அவர்கள் அந்த மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமா? என்றால் இல்லை. ஆனால், அவர்கள் அனைவரும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆதரிக்கின்றனர். அதனால், கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எப்போதெல்லாம் 40&க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுகிறதோ, அப்போதெல்லாம் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியைப் பிடிக்கிறது.
ஆந்திராவில் ரெட்டி சமுதாயம் ஒன்று திரண்டு ராஜசேகர ரெட்டியையும், அவரது புதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும் முதலமைச்சராக்கி அழகு பார்க்கிறது. அவர்களுக்கு போட்டியாக கம்மா நாயுடு மக்கள் என்.டி.ராமாராவையும், அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சராக்கி பெருமைப்படுகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் யாதவ மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதால், அந்த மாநிலத்தில் வலிமையான அரசியல் சக்தியாக மாறியுள்ளனர். அதனால் தான் முலாயம் சிங்கும், அவரது புதல்வர் அகிலேஷ் சிங்கும் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. அதேநிலை தான் பிகாரிலும். பிகாரில் யாதவ மக்களின் ஆதரவில் தான் லாலு பிரசாத் யாதவ் மூன்று முறை முதலமைச்சர் ஆனார். உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரட்டியதால் மாயாவதி முதலமைச்சராக முடிந்தது.
மராட்டிய மாநில விதர்பா பகுதியில் வாழும் மராட்டியர்கள், சரத்பவாரின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். அதனால் தான் சரத்பவார் காங்கிரசில் இருந்தாலும், தனிக்கட்சித் தொடங்கினாலும் அவர் கை காட்டும் வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
ஹரியானாவில் ஜாட் சமுதாய மக்கள் தேவிலாலில் குடும்பத்தின் பின் திரண்டிருக்கிறார்கள். அதனால் தான் தேவிலால், அவரது புதல்வர் ஓம் பிரகாஷ்சிங் சவுதாலா ஆகியோர் அடுத்தடுத்து முதலமைச்சராக முடிந்தது. இப்போது கூட தேவிலாலின் கொள்ளுப்பெயரன் துஷ்யந்த் சவுதாலா 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்பாக புதியக் கட்சியைத் தொடங்கி, துணை முதலமைச்சராக முடிந்திருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில்....?
தமிழ்நாட்டில் நமது நிலைமை குறித்து எதையும் சொல்லத் தேவையில்லை. சொல்லிக் கொள்ளும் நிலையிலும் நாம் இல்லை.
சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் ஆகிய அனைத்திலும், நாம் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ, அதை விட குறைவான இடத்தில் தான் நாம் இருக்கிறோம்.
இதிலிருந்து நாம் எவ்வாறு மீண்டு வரப்போகிறோம்? அதற்கான விடை என்ன? உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!
வன்னியர்களே சிந்திப்பீர்!
(நிறைந்தது)
No comments:
Post a Comment