அணை கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடு: இருவரை மீட்ட வீரப்பெண்களுக்கு விருது வழங்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை பகுதியில் மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் அதிக ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த பள்ளத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அப்பகுதி மக்கள் அந்த பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் தான் குளிப்பது வழக்கம்.
மருதையாற்றுக்கு அருகில் உள்ள திடலில் மட்டைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், அதில் பங்கேற்பதற்காகவும், போட்டிகளைக் காண்பதற்காகவும் வந்த இளைஞர்கள் சிலர் அந்த பள்ளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அது ஆபத்தான பகுதி என்பதால் அதில் குளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் 4 இளைஞர்கள் அந்த நீரில் குளித்துள்ளனர். நீச்சல் தெரியாத அவர்கள் ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.
அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள் தங்களின் சேலையை கயிறாக மாற்றி அந்த இளைஞர்கள் நோக்கி வீசியுள்ளனர். ஆழத்திலிருந்து மீண்ட கார்த்திக், செந்தில் வேலன் ஆகிய இரு இளைஞர்களை அவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர் ரஞ்சித் (வயது 25), மாணவர் பவித்ரன் (வயது 17) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
நீரில் மூழ்கியவர்களில் இருவரை தங்களின் உயிரையும், மானத்தையும் பொருட்படுத்தாமல் போராடி காப்பாற்றிய செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் வீரதீர செயல்களுக்கான விருதும், வெகுமதியும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment